27 மாவட்டங்களுக்கு கடந்த 11-ந் தேதி நடந்த மாவட்ட மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க.வை விட அதிக இடங்களைப் பிடித்து அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் எடப்பாடி. சிவகங்கை மாவட்டத்தின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 26 மாவட்ட ஊராட்சித் தலைவர்களில் 13 இடங்களை அ.தி.மு.க.வும், 12 இடங்களை தி.மு.க.வும், ஒரு இடத்தை அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.வும் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல, ஒன்றியக்குழு தலைவர்களில் 140 இடங்களை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க. 7, பா.ஜ.க. 3 என 150 இடங்களையும், 125 இடங்களை தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 5, சி.பி.ஐ. 3 என 133 இடங்களையும் ஜெயித்திருக்கின்றன. அ.ம.மு.க. மற்றும் சுயேட்சைகள் தலா 2 இடங்களை பிடித்துள்ளனர். இதேபோலவே துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான பதவிகளையும் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வே அதிக இடங்களைப் பிடித்துள்ளது.
மறைமுகத் தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் மேலிடங்களில் தீவிர ஆலோசனை நடந்திருக்கிறது. இது குறித்து தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ ""தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில் அந்தமானில் இருந்தார் ஸ்டாலின். முழுமையான முடிவுகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முடிவுகளிலும் தி.மு.க.வை விட அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்திருப்பதை ஸ்டாலின் ரசிக்கவில்லை. இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்களிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களிடம், "ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த நேரடி தேர்தலில் தி.மு.க.தான் அதிக இடங்களில் ஜெயித்திருக்கிறது. அப்படியிருந்தும் மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. எப்படி அதிக இடங்களை பிடிக்க முடிந்தது' ? என கேள்வி எழுப்ப, தி.மு.க.வினர் கிராஸ் வோட் போட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் தி.மு.க.வையும் தி.மு.க. கூட்டணிக் கட்சிளையும் சுயேட்சைகளையும் அ.தி.மு.க. விலைக்கு வாங்கியிருக்கிறது.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தி.மு.க. மற்றும் இரண்டு காங்கிரஸ் கவுன்சிலர்கள் அ.தி.மு.க.விடம் விலை போயுள்ளதை விவரித் துள்ள சீனியர்கள், மேலும் சில மாவட்ட நிலவரங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தவிர, மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரும், தங்களது மாவட்டத்தில் மற்றொருவர் வலிமையாக வலம் வருவதை விரும்பவில்லை. அதனா லேயே, தி.மு.க. மற்றும் கூட் டணிக் கட்சிகளின் கவுன்சிலர் களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் போதிய அக் கறையை அவர்கள் காட்டவில்லை.
இந்த விவகாரத்தில் தலை யிட்டு, தவறு செய்தவர்கள், விலை போனவர்கள், அலட்சிய மாக இருந்தவர்கள் மீது கடுமை யாக நடவடிக்கை எடுக்க வேண் டும்'. பொதுவாக, ஸ்டாலின் விசாரிப்பார்; எச்சரிக்கை செய் வார்; பிறகு அப்படியே விட்டு விடுவார் என்கிற மனநிலையில் தி.மு.க. நிர்வாகிகள் இருப்பதால் தான் தேர்தல் நேரங்களில் இப்ப டிப்பட்ட துரோகங்கள் நடக் கிறது. துரோகங்களுக்கு தண்ட னை கொடுத்தால் மட்டுமே இனி வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை இறுதிவரை தக்கவைத்துக் கொள்ள முடியும் என ஸ்டாலி னிடம் சீனியர்கள் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இதே கருத்துக்களை, சபரீச னும் ஸ்டாலினிடம் சொல்லி யிருக்கிறார். இந்த தகவல்கள் ஸ்டாலினை கோபப்பட வைத்திருப்பதுடன், ஒவ்வொரு மாவட்டத் திலும் என்னென்ன கூத்துகள் நடந்தது என் பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், 21-ந்தேதி நடக்கும் கட்சியின் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுப்பார் ஸ்டாலின்'' என்கின் றனர் தி.மு.க. மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள்.
அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ""அ.தி.மு.க. கவுன்சிலர்களை வளைக்க தி.மு.க. முயற்சிப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்களை சீரியசாக எடுத்துக்கொண்ட எடப்பாடி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விலை போய்விடாமல் பாதுகாக்க அமைச்சர்களுக் கும் மா.செ.க்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கவுன்சிலர்களை ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு அழைத்துச்சென்று மகிழ்வித்தனர். அவர்களின் அபிலாஷைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
மேலும், கிராஸ் வோட் போடுவதற்காக மாவட்ட கவுன்சிலர்களுக்கு 1 கோடியும், ஒன் றிய கவுன்சிலர்களுக்கு 50 லட்சமும், சுயேட் சைகளுக்கு 25 லட்சமும் பேரங்கள் பேசப்பட் டன. இதே அளவுகோல்படியே அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களும் கவனிக்கப்பட்டனர். கவனித்துவிட்டோமே என அலட்சியமாக இல்லாமல், தேர்தல் முடியும் வரையில் அவர்களை தங்களது கண்காணிப்பிலும் மறைமுக பாதுகாப்பிலும் வைத்து தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை தந்தனர் அமைச்சர்கள்'' என சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள்.
மறைமுகத் தேர்தலில் தி.மு.க.வை கண் காணித்து பல தகவல்களை எடப்பாடியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது உளவுத்துறை. அது குறித்து விசாரித்தபோது, ""மாவட்டம் மற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவிகளுக்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர் கள் தவிர மற்றவர்கள் தலைவர் பதவிக்கு வரு வதையோ, எதிர்காலத்தில் அதிகாரம் செலுத் துவதையோ தி.மு.க. மா.செ.க்கள் விரும்ப வில்லை என உளவுத்துறை அதிகாரிகள் முதல் வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் இதில் என்ன செய்யலாம் என சில அரசியல் ஸ்கெட்சும் போட்டுக் கொ டுத்தனர். அதன்படிதான் நடந்தது''’என்கின்ற னர் உளவுத்துறையினர். இதுபோன்ற தில்லாலங்கடி வேலை களுக்காகத்தான் நேரடி தேர்தலை ஒழித்து மறைமுகத் தேர்தலை கொண்டுவந் திருக்கிறது எடப்பாடி அரசு.
-இரா.இளையசெல்வன்
புதுக்கோட்டை!தி.மு.க.வை திகிலடைய வைத்த காங்கிரஸ்!
பெரும்பான்மைக்குத் தேவையான 13 கவுன்சிலர்களை (தி.மு.க.—11, காங்.2) கையில் வைத்திருந்த தெம்புடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் குதித்தது தி.மு.க. அ.தி.மு.க. வின் கைவசம் இருந்ததோ 9 கவுன்சிலர்கள். வேட்பு மனு தாக்கலன்று தி.மு.க.வின் 13 கவுன்சிலர்களும் ஒரு வேனில் வந்து இறங்கினார்கள். தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கலைவாணியும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வாக்கெடுப்பின் முடிவில் ஜெயலட்சுமி 12 வாக்குகளும் கலைவாணி 10 வாக்குகளும் பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர் தி.மு.க.வினர். அதிகாரிகள்தான் ஏதோ திருகுஜாலம் பண்ணிவிட்டார்கள் என தி.மு.க. தரப்பு யோசித்துக்கொண்டிருந்தபோதே மாலையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. கலைவாணியே து.த.பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இங்கதான் மறுபடியும் ஒரு ட்விஸ்ட் கும்மாங்குத்து விட்டது காங்கிரஸ். அதாவது அ.தி.மு.க.கவுன்சிலர்கள் முன்மொழிய, து.த.பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் காங்கிரசின் உமாமகேஸ்வரி. வாக்கு எண்ணிக்கை முடிவில் 11-11 என சமநிலையில் இருந்தனர் கலைவாணியும் உமாமகேஸ் வரியும். குலுக்கல் முறையில் து.த.வானார் உமாமகேஸ்வரி.
ஏன் இப்படி? என நகர காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது ""ஆரம்பத்திலேயே மா.ஊ.து.தலைவர் பதவியை உமாமகேஸ்வரி கேட்டும் மறுத்துவிட்டது தி.மு.க. இதை ஸ்மெல் பண்ணிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்மதங்க வேலிடம் பேசி கரெக்ட் பண்ணி விட்டார். அந்த நேரம் பார்த்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் புலம்பல் அறிக்கையும் வந்துச்சா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு'' என்கிறார்கள் உற்சாகமாக.
-இரா.பகத்சிங்
தூத்துக்குடி! உ.பி.க்கள் தில்லாலங்கடி!
ஒட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் பதவிக்குத் தேவையான 15 கவுன்சிலர்களின் ஆதரவுடன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆசியுடன் தனது மருமகன் ரமேஷை களத்தில் இறக்கினார் தி.மு.க. எம்.எல்.ஏ.சண்முகையா. ஒரே குடும்பத்துல எத்தனை பேருக்குத்தான் பதவி என கடுப்பான ஒட்டப்பிடாரம் மேற்கு ஒ.செ. காசிவிஸ்வநாதனும் கீதாஜீவன் ஆசியுடன் களத்தில் குதித்தார். தங்க ளது கட்சிக் கவுன்சிலர்களுடன் சி.பி.எம்.2, காங் கிரஸ்—1, சுயேட்சைகள்—2 என மொத்தம் 11 கவுன் சிலர்களை கைவசம் வைத்திருந்தார் சண்முகையா. தேர்தல் நாளன்று 1 சி.பி.எம். கவுன்சிலர் காசிவிஸ்வநாதன் கேம்புக்கு ஜம்பானார். ஆனாலும் விடாத சண்முகையாவோ துணைத் தலைவர் பதவி என்ற தூண்டிலைப் போட்டு அதே சி.பி.எம். கவுன்சிலரை இழுத்ததால் 11-11 என சமநிலைக்கு வந்து, முடிவில் குலுக்கல் முறை வந்து சண்முகை யாவின் மருமகன் ரமேஷ் சேர்மனாகிவிட்டார்.
-பரமசிவன்
தேனி! ஓ.பி.எஸ்.சின் கோட்டையில் ஓட்டை!
பெரியகுளம் அ.தி.மு.க. ஒ.செ.அன்னபிர காஷின் மனைவி ஈஸ்வரியை இம்மாவட்டத்தின் ஊராட்சித் தலைவராக்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆனால் ர.ர.க்களோ தினகரன் கட்சியிலிருந்து வந்த அன்னபிரகாஷின் மனைவிக்கு பதவியா என எதிர்ப்புக்கொடி பிடித்ததும், பின்வாங்கிய ஓ.பி.எஸ்., சில்லமரத்துப்பட்டி பிரிதாவை மாவட்ட ஊராட்சித் தலைவ ராக்கிவிட்டார். இதனால் ஓட்டுப் பதிவை புறக்கணித்துவிட்டு, கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறினார் ஈஸ்வரி.
இதேபோல் ஒன்றியத் தலைவர்களாக ஆண்டிப்பட்டி லோகிராஜன், போடி சுதா, உத்தமபாளையம் ஜான்சி, கம்பம் (பா.ஜ.க.) பழனி ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். ஓ.பி.எஸ்.சின் தொகுதியான போடி, தேனி ஒன்றியத்திற்குள் வருகிறது. எப்படியும் இந்த சேர்மன் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டினார் ஓ.பி.எஸ். ஆனால் தேனி தி.மு.க. ஒ.செ. சக்கரவர்த்தியோ ஓ.பி.எஸ்.சின் கோட்டையிலேயே ஓட்டையைப் போட்டு, யூனியன் சேர்மனாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பி.எஸ்., தி.மு.க. வெற்றி பெறக்கூடிய சின்னமனூர், பெரியகுளம், கடமலைக்குண்டு ஆகிய ஒன்றி யங்களுக்கான தேர்தலையே தள்ளிவைத்து விட்டார்.
-சக்தி
ஈரோடு! இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல!
மாவட்ட அமைச்சர் கருப்பணனுக்கும் பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தோப்பு வெங்கடாசலத்துக்கும் எப்போதுமே ஆகாது. இப்போது இவர்கள் இருவருக்கும் எதிராக புது கோஷ்டியை உரு வாக்கினார் ஜெ.பேரவை நிர்வாகி ஜெயக்குமார். காரணம், உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட, தோப்பு தனக்கு வாய்ப்பு கொடுக் காததால், சுயேட்சையாக நின்றதுடன் தனது ஆட்கள் மூன்று பேரையும் நிறுத்தினார் ஜெயக்குமார்.
மொத்தமுள்ள 12 கவுன்சிலர் இடங்களில் தி.மு.க.—3, ஜெயக்குமார் டீம்—4, அ.தி.மு.க.—5 என ரிசல்ட் வந்தது. ஆளும் கட்சிக்கு ஆப்பு அடிக்க நினைத்த ஜெயக்குமார், "தலைவர் பதவி எனக்கு; துணைத் தலைவர் பதவி உங்களுக்கு' என தி.மு.க.விடம் டீல் பேசினார். பெருந்துறை தி.மு.க. ஒ.செ. கே.பி.சாமியோ "நீங்க ஜெயிச்சதும் ஏ.டி.எம்.கே.வுக்கு போயிருவீங்க. அதனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது. இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல, நடுநிலைதான் எங்க நிலைப்பாடு' எனச் சொல்லிவிட்டதால், தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளரான சாந்தி என்பவர் சேர்மனாகிவிட்டார்.
"எல்லாம் எங்களின் திருப்பணிதான்' என்கிறது தோப்புவின் வட்டாரம்.
-ஜீவா
விருதுநகர்! மந்திரித்த திருநீறுடன் மந்திரி!
இம்மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய ஒன்றியங்களின் தலைவர் பதவிகளை தி.மு.க.தான் கைப்பற்றும் என்பதால், கவுன்சிலர்களுக்கு விலை வீசியது ஆளும் கட்சி. ஆனாலும் வீச்சில் சிக்காததால் ஆளும் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டு தேர்தலையே நிறுத்திவிட்டனர். அதோடு விடாமல் நரிக்குடியில் மணல் மாஃபியா அம்மன்பட்டி ரவிச்சந்திரனின் ஏற்பாட்டில் நடந்த கலாட்டாவில் டி.எஸ்.பி.வெங்கடேசனின் கையில் அரிவாள் வெட்டும், யூனியன் அலுவலக சூறையாடலும் அமர்க்களமாக அரங்கேறின.
இதுபோக வாக்களிக்க வந்த கவுன்சிலர்களின் கைகளில், "இந்தா ரொம்ப துடியான சாமி, சக்திவாய்ந்த கோவிலின் திருநீறு இத பூசிக்க. ஓட்டுப் போடும் போது கட்சிக்கு எதிரா ஓட்டுப் போட்டா கை, கால் வௌங்காம போயிரும்' என திகிலூட்டி அனுப்பினார் மந்திரி ராஜேந்திர பாலாஜி.
-ராம்கி