மூக நீதி யின் தொட்டிலாக விளங்கும் தமிழ் நாட்டில், மத்திய அரசு விரும்பும் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சத வீத இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் சட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்றும் இதுதொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்று அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.

மத்திய அரசின் சட்டத்தை விவாதித்து முடிவெடுக்கிற அளவுக்கு முதல்வருக்கு மனசு வந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்ட நிலையில், கூட்த்திலேயே கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார் எடப்பாடி. திமுக, காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட்டுகள், விசிக, ம.நீ.ம., நா.த.க. என்று 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

meet

முதல்வருக்கு பதிலாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

நீட் தொடர்பான விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி மறுசீராய்வு மனு செய்வோம் என்று கூறினார். மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் என்று ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்தார். இந்நிலையில்தான், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த முதல்வர் அந்தக்கூட்டத்திலேயே பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, தி.க. தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, சிபிஐ சார்பில் முத்தரசன், ம.நீ.ம. சார்பில் கமல்ஹாஸன், நாம் தமிழர் சார்பில் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ""30 ஆண்டுகளாக தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசு தேர்தலுக்காக அவசரமாக கொண்டுவந்த சமூக நீதிக்கு எதிரான 10 சதவீத இட ஒதுக்கீடை அனுமதிக்கக்கூடாது. காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இட ஒதுக்கீடு விஷயத்தில் சமரசம் செய்துகொண்டதே இல்லை'' என்ற துடன், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி தமிழ்நாட்டுக்கு பலன் தராது என்பதை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டார். வி.சி.க. திருமாவளவன் இந்த இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தார்.

முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை கொண்டுவர முயற்சிக்கும் பா.ஜ.க., காங்கிரஸ், சி.பி.எம்., த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் 10% இடஒதுக்கீட்டை ஆதரித்தன.

இறுதியாகப் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ""ஜெ. நிலைநாட்டிய சமூகநீதி பாதுகாக்கப்படும். அதே நேரம் மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கும் இடங்கள் பலன் தரும். இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசிக்கப்படும்'' என்றார்.

-சோழராஜன்

படம் : ஸ்டாலின்