காங்கிரஸ் எம்.பி.க்ககளுக்கும் கலெக்டர்களுக்கும் உரசல்கள் தொடர்கின்றன. கரூர் கலெக்டரின் அலட்சியத்தைக் கண்டித்து கலெக்டர் ஆபீஸிலேயே பெட்ஷீட்டுடன் படுத்து தர்ணா போராட்டம் நடத்தினார் ஜோதிமணி எம்.பி. அடுத்ததாக, ஆரணி எம்.பி. விஷ்ணுபிரசாத்தை சென்னை கலெக்டர் அவமதித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள உத்தண்டி பகுதியில் இருக்கும் நிலம் தொடர்பாக சென்னை நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவின்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் சிலர் ஆக்ரமித்து வைத்திருந்ததை மீட்டிருப்பதுடன், அதனை தமிழக அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத்.

mp

Advertisment

இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக விஷ்ணுபிரசாத் எம்.பி.யை அழைத்திருக்கிறார் சென்னை கலெக்டர் விஜயராணி. நில விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் வேறு சிலரையும் அழைத்திருந்தார் விஜயராணி. கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்ற விஷ்ணுபிரசாத் எம்.பி., காக்க வைக்கப்பட்டிருக்கிறார். விசிட்டிங் கார்டு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகே எம்.பி.க்கு அனுமதி கிடைத்துள்ளது. அப்போதும், அவரை இருக்கையில் உட்காரச் சொல்லவில்லை.

அதனைப் பொருட்படுத்தாத விஷ்ணுபிரசாத், "நீங்க அழைத்ததன் பேரில்தான் வந்திருக்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு, பிரச்சனைகளை விரிவாக விவரித்திருக்கிறார். ஆனால், கலெக்டரோ, அதனை பெரிதாக எடுத்துக்கொண்டது போல தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்தே அனுப்பி வைத்துள்ளார் கலெக்டர் விஜயராணி.

Advertisment

இதனால் விஷ்ணுபிரசாத் கோபமடைந்திருக்கிறார். ஆனால், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமலும், கலெக்டரிடம் எவ்வித விவாதமும் செய்யாமலும் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.யை கலெக்டர் அவமானப்படுத்தி விட்டதாக செய்தி மெல்ல கசிந்ததால், சில காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பலரும் விஷ்ணுவைத் தொடர்பு கொண்டு, கலெக்டர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வாருங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

collector

அப்போது, "முதலில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். உரிமை மீறல் குறித்து பிறகு ஆலோசிப்போம்'' என அவர்களிடம் சொன்ன விஷ்ணு பிரசாத், தலைமைச் செயலாளர் இறையன்புவை தொடர்புகொண்டு பேசியிருக் கிறார். விஷ்ணுபிரசாத்தை சமாதானப்படுத்தியதோடு, மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு. இதனை யடுத்து விஷ்ணுபிரசாத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் கலெக்டர் விஜயராணி.

இதுகுறித்து விஷ்ணுபிரசாத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, "முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மக்களுக்கான அரசாக இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அரசாக இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் சிலரின் நடவடிக்கை களால் அரசுக்குத்தான் கெட்ட பெயர் வருகிறது. அதனால், அதிகாரிகள் சரியில்லாததை அரசின் கவனத்துக்கொண்டு போவோம். அதன்பிறகே மற்றதை தீர்மானிப்போம் என முடிவு செய்து, தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் தெரிவித்தேன். அவரும் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் பேசியிருப்பார் என நினைக் கிறேன். உடனே என்னை தொடர்புகொண்ட கலெக்டர் விஜயராணி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். வருத்தம் தெரிவித்ததால் உரிமை மீறல் பிரச்சனைக்குள் நான் போகவில்லை'' என்றார்.

dd

இதுகுறித்து கலெக்டரின் கருத்தறிய அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். ஃபோனை எடுத்த கலெக்டரின் உதவியாளர் ரகுராமன், கலெக்டரிடம் பேசிவிட்டு, "மேடம் வேற ஒரு லைனில் பேசிக்கிட்டு இருக்காங்க. அது முடிஞ்சதும் உங்ககிட்டே பேசுவாங்க. உங்கள் மொபைல் எண்ணை கொடுங்கள்'' எனச் சொல்லி நமது மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் நம்மைத் தொடர்பு கொள்ளவில்லை கலெக்டர்.

கலெக்டரை பற்றி மேலும் நாம் விசாரித்த போது, மக்கள் பிரதி நிதிகளை குறிப்பாக எம்.பி.க்களை அவர் மதிப் பதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளே பரவலாக எதிரொலிக்கின்றன.

______________________________

இறுதிச் சுற்று

முருகன் மீது குவியும் புகார்!

murugan

மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சராக இருக்கிறார் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் எல்.முருகன். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதற்கான முயற்சியில் இருப்பார் என்பதால்தான் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால், சமீபகாலமாக அவருக்கு எதிரான புகார்கள் டெல்லி யில் குவிந்து வருகின்றன. கடந்த 26-ந்தேதி சென்னையில் இருந்தார். அன்றைய தினம், சென்னை மெரினாவில் சுனாமி நினைவு தினத்தை தமிழக பா.ஜ.க. நினைவுகூர்ந்தது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வேட்டி-சேலை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முருகன் வரவில்லை. "சென்னையில் இருந்தும் முருகன் இதில் கலந்துகொள்ளவில்லை. மீன்வளத்துறை அமைச்சராக இருந்தும் மீனவ சமூகத்தின் துயரங்களைக் களையாமல், மத்திய அமைச்சர் எனும் கோதாவில் கோவா, அந்தமான், லட்சத்தீவு, கொச்சின் என உல்லாசப் பயணங்களில் மட்டும் முருகன் கவனம் செலுத்துகிறார். கட்சியின் வளர்ச்சிக்கு உதவவில்லை' என்று குவியும் புகார்களை டெல்லி கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.