thta

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி காட்டினார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. "குற்றவாளியிடம் பணம் வாங்கியது இன்ஸ்பெக்டர். தண்டனை மட்டும் காவலர்களுக்கா?' என கொதித்துப்போய் டி.ஜி.பி. வரை புகார் மனுக்களை அனுப்பி நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் ஏனைய காவலர்கள்.

Advertisment

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்று, கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்கின்ற வழக்கறிஞரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கட்டத்துரை, கயத்தாறு ராஜா, சஞ்சய், நரசிம்மன், கோவில்பட்டி காந்தி நகர் சுடலைமுத்து, கடம்பூர் கணேஷ்குமார், சண்முகபாண்டி மற்றும் அப்பு ஆகிய எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதில் முதன்மைக் குற்றவாளியான பாம்பு கார்த்திக் என்பவர் மட்டும் எஸ்கேப்.! பாம்பு கார்த்திக்கை கைது செய்ய தனிப்படை டீம் பகீரத பிரயத்தனம் எடுத்த நிலையில் அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியுற்றது. சரியாக 45 நாட்கள் கடந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வைத்து பாம்பு கார்த்திக் கைது செய்யப்பட்டு கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு அடுத்த நாளான 08-06-2024 அன்று கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்தித்து, ""எனது அக்காள் மகன் மாரிச்செல்வத்திற்கும், எனது மகனுக்கும் பகை உண்டு. இது தொடர்பாக 23-04-2024 அன்று பிரச்சனை ஏற்பட்டு வழக்கானது. அந்த வழக்கில் பாம்பு கார்த்திக் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். போலீஸôரால் அவனது உயிருக்கு ஆபத்து.! அவனை சுட்டுக் கொல்லப்போவதாக பேசிவருகின்றது போலீஸ். ஆகையால் அவனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென"" மனுக்கொடுத்தார் பாம்பு கார்த்திக்கின் தாயாரான பேச்சியம்மாள்.

""இந்த மனு நாளேடுகளில் செய்தியாக, பாம்பு கார்த்திக் கைது ரகசியமான ஒன்று. "எப்படி பேச்சியம்மாளுக்கு இந்த செய்தி சென்றுள்ளது?' என மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் யோசிக்க... கோவில் மேற்கு காவல்நிலைய அனைத்துப் போலீஸôரின் மொபைல் எண்களும் ஆராயப்பட்டன. அதில் போலீஸôர் இருவரின் எண்கள் மட்டும் அடிக்கடி பாம்பு கார்த்திக்கின் குடும்பத்தாரோடு தொடர்பிலிருந்தது தெரியவந்தது. தனிப்படை டீமுடன், மேற்கு காவல் நிலைய போலீஸôரும் பாம்பு கார்த்திக்கை தேடிய நிலையில், நெருங்கிச் செல்லும்போது இருப்பிடத்தை மாற்றியது எப்படி? என விடை கிடைத்தது மாவட்ட எஸ்.பி.க்கு.

Advertisment

இதன் தொடர்ச்சியாக பாம்பு கார்த்தியின் குடும்பத்தினருக்கு போலீஸின் அடுத்தடுத்த நகர்வுகளை அப்டேட் செய்த காவலர்கள் ஜெய்கணேஷ், ராம்சுந்தர் ஆயுதப்படைக்கு இடம் மாற்றினார். இடம் மாற்றம் மட்டும் தண்டனையா? என ஒரு தரப்பு போலீஸôர் கொதிக்க, "அந்த இரண்டு எண்களும் எங்களுடையதுதான். எங்களிடமிருந்து வாங்கி பேசியது இன்ஸ்பெக்டரே' என பொத்தாம் பொதுவாக விரக்தியில் கூறிவைக்க... இப்பொழுது விவகாரம் டி.ஜி.பி. வரை சென்றுள்ளது'' என்கிறார் மாவட்ட தனிப்பிரிவு அதிகாரி ஒருவர்.

தென்மண்டல ஐ.ஜி. டீமில் பணியாற்றும் அதிகாரி ஒருவரோ, ""குறிப்பிட்ட காவலர்களின் எண்ணைக் கொண்டு பாம்பு கார்த்திக்கின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பேசி தகவல்களை அப்டேட் செய்தது இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த்தான் என விசாரணை ஆடியோக்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது. இதற்காக ரூ.4 லட்சம் வரை அந்த குடும்பத்தினர் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்திருப்பதாக தெரிய வருகின்றது. பாம்பு கார்த்திக் பிடிபட்டவுடன் பேச்சியம்மாள், இன்ஸ்பெக்டரிடம், ""பையனை காப்பாத்தணும்னு சொல்லித்தான் ரூபாய் வாங்கினீர்கள். இப்ப கை, கால உடைச்சுட்டாங்க... உசுருக்கும் ஆபத்துன்னு சொல்றீங்க'' என கேட்டு வைக்க, ""உம் மகனை பிடிக்காமல் இருக்க, போலீஸ் எங்கெங்கு வர்றாங்கன்னு கூறுவதற்குத்தான் அந்த ரூபாய்... காப்பாற்ற இல்லை'' என ஒரேயடியாய் வெட்டிப் பேசியதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைப்படி ஆவணங்களை சேகரித்து வருகின்றோம்'' என்றார்

இதுகுறித்து கருத்தறிய கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்தை தொடர்புகொண்டோம்.

""இது அப்பட்டமான பொய். நான் நேர்மையானவன். வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகின்றனர்'' என்கிறார் அவர். ஆனால், சக காவலர்களோ "இதனை சுலபமாக விடுவதில்லை' என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.