தற்கொலை கடிதம்!
""என்னுடைய பணத்தையும், என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பதவியையும் திரும்பக் கொடுக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அனிதா ராதா கிருஷ்ணனே காரணம்'' என உண்ணாவிரதத்திற்கு நாள் குறித்துள்ளார் உடன்பிறப்பு ஒருவர்.
அனவரதநல்லூரைச் சேர்ந்த கருங்குளம் முன்னாள் வடக்கு ஒ.செ. மகராசன், இராமானுஜம் புதூரைச் சேர்ந்த கருங்குளம் முன்னாள் தெற்கு ஒ.செ. நல்லமுத்து, அகரத்தைச் சேர்ந்த முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளராக இருந்த (தற்பொழுது மூன்றாகப் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி வடக்குப் பகுதி ஒ.செ.வாகவுள்ள) மாடசாமி உள்ளிட்டோர் தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளனர்..
""மாவட்ட 10-வது வார்டு கவுன்சிலருக்கான தேர்தலில் முடிவைத்தானேந்தல் ஊராட்சி செயலாளர் வெங்கடாசல மாரியப்பனிடம் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.5 லட்சம் கேட்க, அவரோ முடியாது என மறுத்த நிலையில் அ.தி.மு.க.வோடு கைகோர்த்து வார்டை காங்கிரஸிற்கு மாற்றிவிட்டார். அதுபோல் அ.தி.மு.க.விலிருந்து வந்த அருணாசலத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. அவர் அ.தி.மு.க.வின் கிளைச் செயலாளராககூட இருந்ததில்லை"" என ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
""வடக்கு, தெற்காக இருந்த கருங்குளம் ஒன்றியத்தை வடக்கு, தெற்கு மற்றும் கிழக்காகப் பிரித்து ராமசாமி, பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து வந்த இசக்கிபாண்டியன், முந்தினநாள் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க. திரும்பிய சுரேஷ்காந்திக்கு என மூன்றாக பதவி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பணம் மட்டுமே பிரதானம். இல்லையென்றால் கனிமொழிக்கு எதிராக தேர்தலில் வேலை பார்த்த சுரேஷ்காந்திக்கு பதவி தரமுடியுமா?"" எனவும், ""ரூ.10 லட்சம் கேட்டு நான் கொடுக்காததால், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனின் அண்ணன் மகன் சுந்தரராஜ னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு என்னுடைய பதவி யைப் பறித்து அவருக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பதவியை வழங்கி யுள்ளார்'' எனவும் புகாராக குறிப்பிடப்பட்டுள் ளது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சுவரொட்டிகள், முகநூல் பதிவுகள் என மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக் கின்றன.
தற்கொலைக் கடிதம் எழுதிய மந்திர மூர்த்தியோ, ""தற்பொழுது திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வாக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் 2016 தேர்தலில் என்னை செலவு செய்யச் சொன்னார். இன்றுவரை தரவில்லை. பணத்தைக் கேட்டு நச்சரித்ததால் என்னுடைய பேரூர் கழகச் செயலாளர் பதவியையும் பறித்துவிட்டார். நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு முழுப்பொறுப்பு அனிதா ராதாகிருஷ்ணனே'' என்கிறார்.
இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ""அவர் கூறுவது தவறான தகவல். இது மாதிரி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக் கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே யிருந்தால் எப்படி கட்சி வேலை பார்க்க முடியும்..?'' என அசால்டாக மறுத்தார்.
தேர்தல் நேரத்தில் பழைய புகைச்சல்.
படங்கள்: விவேக்
____________________
ஆடியோ அட்டாக்!
திருவண்ணாமலை தெற்கு மா.செ.வான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குறித்தும், அவரின் மகனும் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன் குறித்து தானிப்பாடி பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகியான இளைஞர் ஒருவரிடம் மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரசேன் செல்போனில் பேசியது வைரலாகி அதகளப் படுத்தியுள்ளது.
""கட்சியில் 45 வருஷமா இருக்கன், எ.வ.வேலு பேசும் போது என் பெயரை சொல்றார், எவனும் கை தட்டமாட் டேன்கிறான். இன்னும் கட்சி யில வந்து ஒன்னும் புடுங்கல, அப்பன் நிழலில், பாதுகாப்பில் இருக்கிற வேலு மகன் கம்பன் பெயரை சொன்னால் கை தட்டறான். வேலு, காலேஜ், நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, பைனான்ஸ் வச்சியிருக்கார். இவ்வளவு தொழில் செய்றாரு, அதில் போய் அவரது மகன் கம்பன் வளர்ந்துட்டுப் போகட்டும். கட்சிக்கு வந்து ஏன் மத்தவங்க பிழைப்பை கெடுக்கணும்? கட்சியில எத்தனை பேரு உழைக்கறான் அவனெல்லாம் மேலே வரலாம்மே. அப்பன், புள்ளதான் பதவிக்கு வரனும்மா? கலைஞரா இருந்தாலும் சேர்த்து தான் சொல்றேன். தகுதியின் அடிப்படையில் வான்னு சொல்றேன், வரவேண்டாம்னு சொல்லல. தி.மு.க.காரன் புள்ள தி.மு.க.வை விட்டு வேறு எந்த கட்சிக்குப் போய்டுவான் எனச் சொல்வதோடு கட்டாகிறது.
இதுகுறித்து சாவல்பூண்டி சுந்தரேசனிடம் கேட்டபோது, ""நான் பேசிய முழுதையும் சொல் லாம, முன்னாடி, பின்னாடி வெட்டி ஒட்டி பரப்பறாங்க'' என்ப தோடு முடித்துக்கொண்டார்.
மா.செ வேலுவுக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டபோது, ""கட்சி அலுவலகத்தில் மா.செ வேலு முக்கிய நிர்வாகிகள் இருந்தபோது, ந.செ கார்த்தி வேல்மாறன், "இப்படி பேசியிருக்காரே நியாயமா?' எனக் கேட்டார். அடுத்த நிமிடமே அங்கிருந்து சுந்தரேசன் கிளம்பிட்டார். எம்.பி தேர்தலின்போது கட்சி நிர்வாகிகள்கூட கம்பனை வேட்பாளராக்கச் சொன்ன போது வேலுதான் வேணாம்னு சொல்லிட்டார். கலசப்பாக்கம் தொகுதியில் கட்சியை பலப்படுத்த கம்பனை பொறுப்பாளராக்கினார். அவரின் களப்பணி எம்.பி தேர்தலில் அதிகவாக்குகளை அங்கு பெறமுடிந்தது. இதனாலயே எம்.எல்.ஏ தேர்தலில் கம்பனை நிறுத்தச்சொல்லி நிர்வாகிகள் கேட்டனர். "என் மகன் வேட்பாளர் இல்லை' எனச் சொல்லிவிட்டார். கொரோனா காலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை செய்த கம்பன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமாகி வந்தார். சுந்தரேசன் குடும்பத்துக்கு தேவையான பொருளாதார உதவிகள் அனைத்தும் செய்தவர் வேலுதான்'' என்றார்.
சுந்தரேசன் குறித்து தலைமைக்கு புகார் சென்றுள்ளது. அதேபோல் செங்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. மு.பெ.கிரி கட்சி நிர்வாகிகள் குறித்து பேசிய ஆடியோவும், போளுர் தி.மு.க. எம்.எல்.ஏ. சேகரன் ஆடியோவும் என பரபரப்பாக வலம் வருவது ஆளும் கட்சிக்கு தீனியாகிறது.
-து.ராஜா