வீட்டு பால்கனியில் நின்றபடி கைத்தட்டவும், விளக்கேற்றவும் பிரதமர் மோடி சொன்னதும், அதன்பிறகு நடந்தவைகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன. உள்ளூர் நடவடிக்கைகளே இப்படி தலைசுற்ற வைக்கும்போது, உலகைச் சுற்றிலும் என்ன நடக்கிறது தெரியுமா?
உலக தாதாவான அமெரிக்கா, எங்களையெல்லாம் இந்த சீனா வைரஸ் ஒன்றும் செய்யமுடியாது என்று அசட்டையாக இருந்தபோது, ‘இவ்வளவு தெனாவட்டு வேண்டாம். மிகப்பெரிய பிரச்சனைக்கு நாம் ஆளாக நேரிடும்’ என்று அதிபர் ட்ரம் பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்வோரோதான் இந்த எச்ச ரிக்கை ஒலியை எழுப்பினார்.
ஜனவரி 19ந்தேதி அதிபர் ட்ரம்புக்கு அவர் எழுதிய கடிதத்தில், "பற்றாக் குறையான நோயெதிர்ப்பு சக்தி பாதுகாப்பையோ, கையிருப்பில் இருக்கும் சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி மருந்துகளையோ நம்பி நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. அப்படி இருந்தோமானால், கொரோனா வைரஸ் தொற்று நம் மண்ணில் தீவிர மடைந்து பல ஆயிரம் கோடியில் பொருளாதார இழப்பையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களையும் இழக்கச் செய்துவிடும்' என்று அறிவுறுத்தி இருந்தார்.
வழக்கம்போல இதைத் தாமதமாக உணர்ந்திருக்கும் நிலையில், இத்தனை கொடுமையான பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே கணிக்கவில்லை என்று ட்ரம்ப் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதற்குள் இந்தக் கடிதம் வைரலாகி ட்ரம்பின் மூக்கை உடைத்திருக்கிறது.
இந்தியாவைப் போலவே கொரோனாத் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை ஜப்பானில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரு கிறது. ஆனால், இப்போதுதான், ஜப்பானின் முக்கிய மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அந் நாட்டு பிரதமர் சின்சோ அபே.
பிற நாடுகளைப் போல, நேரடியாக ஊரடங்கு உத்தரவை அறிவிக்கவோ, தொழில் நிறுவனங்களை மூடிவைக்கவோ ஜப்பான் பிரதமருக்கு அதிகாரம் கிடையாது. இதனால், அங்கு கொரோனா அபாய சூழலிலும் பொதுமக்கள் நடமாட்டத் திற்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை. இப்படியே போனால், ஜப்பான் மிகப்பெரிய அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுமென்றும் சர்வதேச நிபுணர்கள் அறிவுறுத்தியும், மக்கள் தாமாக வீடுகளில் இருக்கவேண்டும் என்றே ஜப்பான் அரசு எதிர்பார்த்தது.
தற்போது, தனது நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்களை, அடுத்த ஒரு மாதத்திற்கு வீட்டிலிருந்தபடி வேலை பார்க்குமாறு வேறு வழியின்றி உத்தரவிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், மக்களுக்கு ஏற்படும் துயரைக் கருத்தில் கொண்டு, ஒரு ட்ரில்லியன் டாலர் நிதியை ஜப்பான் பிரதமர் அபே ஒதுக்கி இருக்கிறார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவின் வீதிகளில், பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு, கையில் எப்போதும் கிருமிநாசினி தெளிக்கும் உபகரணங்களோடு இருக்கும் ரசாயன போர்ப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா எல்-சிசியின் ஏற்பாடுகளாம். அதாவது, இப்போதும் கொரோனா தடுப்பு என்பது ராணுவக் கட்டுப்பாடு செயல்முறையாக இருப்பதாகவே, அங்கு சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
மஞ்சள் நிறத்தில் பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் ஷூட்டை அணிந்தபடி, மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளைப் பார்வையிடச் சென்றிருந்தார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். கொரோனா தொற்று பற்றிய வெளிப்படையான செய்திகள் வராமல் இருந்த ரஷ்யாவின் மனமாற்றமாகவே இந்த செய்தி இருந்தது.
ஏற்கனவே, துருக்கியில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கை அப்படியொன்றும் பெருமைகொள்ளும் விதமாக இல்லையென்று விமர்சித்து எழுதியதற்காக, சில டஜன் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் தய்யிப் எர்டோகன். அவர்கள் எழுதிய செய்திகளால் ஏற்பட்ட உடைப்பு களை சரிசெய்ய, அனைத்து மக்களின் செல்போனுக்கும் ஐம்பதுக்கும் அதிகமான வாய்ஸ் மெசேஜுகளைத் தட்டி விட்டிருக்கும் எர்டோகன், ""எல்லாமே கட்டுக்குள் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். டோண்ட் வொர்ரி'' என்று சமாதானம் பேசியிருக்கிறார்.
தர்க்மென்ஸிதானில், இப்போதுவரை கொரோனாத் தொற்றால் எத்தனை பேருக்கு பாதிப்பு. எத்தனை உயிர்கள் பறிபோயுள்ளன. என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்பது பற்றி துண்டறிக்கை கூட விடவில்லை. அந்த நாட்டின் ஆயுட்கால அதிபரான கர்புங்லி பெர்டிமுகாமெதோவ், தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் மூலிகைகள் தொடர்பாக தான் எழுதிய ஒரு புத்தகத்தைப் புரொமோட் செய்யும் வேலையில் பிஸியாக இருக் கிறாராம்.
ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் மக்கள் அல்லல்படுவது இந்தியாவில் மட்டுமில்லை என்பதை அப்பட்டமாக உணர்த்தி இருக்கிறது கொரோனா.
ச.ப.மதிவாணன்