நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கின எனப் பொதுமக்கள் பயணிகள் அதில் ஏறிச் செல்ல நினைத்தால், பேருந்துகளோ மக்கள் மீது ஏறிக் கொல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1 ந் தேதியிலிருந்து மாவட்ட அளவிலான பேருந்துகள் இயக்கம் தொடங்கிய நிலையில், மாவட்டம் கடந்த பேருந்து சர்வீசுக்கும் போக்குவரத்துக் கழகங்கள் ஆயத்தமாகிவிட்டன. ஆனால், பேருந்துகள் அந்த அளவுக்கு கண்டிஷனாக இருக்கின்றனவா என்ற அதிர்ச்சிக் கேள்வியை எழுப்பியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொடூர விபத்து.

Advertisment

gtbus

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை ஈரோடு நோக்கி 42ஆம் எண் அரசு நகர பேருந்து வந்துகொண்டு இருந்தது. அப்போது லக்காபுரம் என்ற இடத்திற்கு அருகே பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து பேருந்தை அப்புறப்படுத்தியபோது பேருந்தின் அடிப்பகுதியில் அந்த இரண்டு சக்கர வாக னங்களிலும் பயணித்த நான்கு பேர், பேருந்துக் கீழே சிக்கி, பரிதாபமாக இறந்து கிடந்தனர். மேலும் இந்த விபத்தினால், பேருந்தில் பயணித்த மூன்று பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisment

உடனடியாக அந்த இடத்திற்கு ஆம் புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் பட்டவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறை விசா ரணையில், விபத்தில் இறந்தவர்கள் மொடக்குறிச்சி அருகே ஆளூத்துப்பாளையம் என்ற கிராமம் பரமசிவபுரம் பகுதியைச் சேர்ந்த மோகம்புரி அவர் மனைவி மரகதம், அவரது மாமியார் பாவை யம்மாள், மரகதத்தின் சகோதரர் பாலசுப்பிரமணி என்று தெரியவந்தது. பேருந்தில் பிரேக் செயல்படாததால் இந்த விபத்து நேரிட்டது என கூறப்படுகிறது.

கொரோனா பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே நடந்த இந்த விபத்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் முறைப்படி இடதுபுறம் சாலை ஓரமாகத்தான் வந்துள்ளார்கள். எதிரே வந்த அரசு பேருந்து திடீரென வலது புறம் திரும்பும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த பேருந்து, சாலையில் செல்லச் செல்ல வலதுபுறம் திரும்பியிருக்கிறது. பேருந்தை ஓட்டிய ஓட்டுனரால் அதை கட்டுப் படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

செப்டம்பர் 1ந் தேதி போக்குவரத்து தொடங்கப்பட்டாலும், ஈரோடு-சிவகிரி சாலையில் 3ந் தேதிதான் முதன்முதலாக அந்த டிரைவர் பஸ் ஓட்டியிருக்கிறார். அவருடைய கவனக் குறைவுதான் விபத்துக்கு காரணம் என எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. டிரைவரும் சிகிச்சையில்தான் இருக்கிறார் என்பதால் மேற்கொண்டு விசாரணை நடக்கவில்லை.

இந்த விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் அதை செய்யவில்லை என்றும், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன என்பது குறித்த மறைக்கப்பட்ட விஷயத்தை நம்மிடம் கூறினார் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்.

""ஏறக்குறைய ஐந்து மாதங்கள் பணிமனையிலேயே பேருந்துகள் இருந்தன. இடையில் ஒரு மாதம் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பணிமனையில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை அதன் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. பிரேக், ஆக்சிலேட்டர், கியர், டயர்களின் கன்டிசன் இஞ்சின் செயல்பாடு என எல்லாவற்றையும் தொழில்நுட்ப மெக்கானிக்குகள் மூலம் பரிசோதனை செய்து ஒவ்வொரு பேருந்தை யும் குறிப்பிட்ட தூரம் ஓட வைத்து, கண்டிஷன்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அதன்பின் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் பயன்பாட்டிற்கு அனுப்பியிருந்தால் இப்படி ஒரு கொடூர விபத்து நடந்திருக்காது. ஆனால் எல்லாவற்றையும் செய்ததாக போலி கணக்கு காட்டி இந்த கொரோனா காலத்திலும் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள்.

விபத்துக்குள்ளான பேருந்தின் ஹேண்டில் வளைவுக்கு அடியில் ஒரு இரும்பு ராடு உடைந்திருக்கிறது. நீண்டகாலம் பயன்படுத்தாமல் இருந்ததால் துருபிடித்து அது உடைந்துள்ளது. இந்த விபத்து ஒரு அபாய மணியை அடித்துள்ளது என்பதே உண்மை. 7ந் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் சாலைகளில் இயங்க உள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் உள்ள அத்தனை பகுதிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் இல்லையேல் இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்க முடியாது"" என்றார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளின் கண்டிஷன் இப்படித்தான் உள்ளது.

அரசு மக்களின் உயிர்களை காக்கப் போகிறதா அல்லது அட்சியமாக செயல்படப் போகிறதா என்பதை 7 ந் தேதிக்கு பிறகு பார்க்கலாம். கொரோனா காலத்தில் எடப்பாடி அரசுக்கு தமிழக மக்கள்தான் எல்லாவகையிலும் சோதனை எலிகள்.

- ஜீவாதங்கவேல்