"உங்க மகனுக்கு பின்தலைல அடிபட்ருச்சு. பக்கத் துல இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிட்டுப் போனோம். தலைல மூணு தையல் போட்டாங்க. இப்ப பிரைவேட் ஹாஸ்பிடல்ல சி.டி. ஸ்கேன் பார்க்கப் போறோம்...''

-கடந்த 23-7-2024 அன்று தென்காசி மாவட்டம் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து, அங்கு படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவன் ராகவனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்மா முத்துமாரிக்கு போனில் தகவல் சொன்னார்கள்.

scc

"மகனுக்கு என்ன ஆச்சோ?'’ என்று பதறியடித்துக்கொண்டு முத்துமாரியும் அவரது கணவர் பாலாஜியும் அந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, ராகவனின் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. வலி தாங்கமுடியாமல் துடித்த மகனைக் கண்டு "படிக்கத்தானே புள்ளைய அனுப்பினோம். அநியாயமா இப்படி ஆஸ்பத்திரில கொண்டு வந்து போட்டுட்டீங்களே..''’என்று இருவரும் கதறினார்கள்.

பள்ளியில் என்ன நடந்தது?

பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் இரும்புக்குண்டு எறிதல் பயிற்சி நடந்திருக்கிறது. ராகவனுடன் படிக்கும் சக மாணவன் மூன்று கிலோ எடையுள்ள இரும்புக் குண்டை எறிந்திருக்கிறான். அந்தக் குண்டை எடுத்துவந்து ராகவனை எறியச் சொல்லியிருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர். அவன் இரும்புக் குண்டை எடுக்கச் சென்றபோது, பின்னாலிருந்து 11ஆம் வகுப்பு மாணவன் மற்றொரு இரும்புக் குண்டை எறிந்திருக்கிறான். அது ராகவன் தலையில் விழுந்து பலத்த காயமடைந்திருக்கிறான். ரத்தம் கொட்டியிருக்கிறது. பிறகுதான், பள்ளி நிர் வாகத் தரப்பில் சிகிச்சை யளிப்பதற்கு முற்பட் டுள்ளனர்.

மாணவனின் தந்தை பாலாஜி நம்மி டம், "எங்க மகனை ஸ்கூல்ல இருந்து கொண்டுபோனப்ப, ஆரம்ப சுகாதார நிலையத்துல டாக்டர் இல்ல. அங்க இருந்த செவிலியர்கள், காயத்தை சரிவரச் சுத்தம் பண்ணாம அரைகுறையா தையல் போட்டுட் டாங்க. பிரைவேட் ஆஸ்பத்திரி டாக்டர், தலைக்கு உள்ள பாதிப்பு இல்ல. ரத்தக்கட்டுக்கு மூணு நாள் மாத்திரை எடுத்தால் சரியாயிரும்னாரு. மூணாவது நாள் பின்தலை முழுக்க வலி வந்து கதறி அழுதான். அப்ப டாக்டர் தலையப் பார்த்துட்டு. தலைல சீல் வச்சிருச்சுன்னு சொல்லி, மூணு நாளைக்கு மாத்திரை கொடுத்தாரு. எனக்கு மனசு சரியில்லாம, ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் கிட்ட மேல் சிகிச்சை அளித்தால் நல்லாயிருக்கும்னு சொன் னேன். அப்புறம் திருநெல்வேலி காவேரி மருத்துவ மனைல சேர்த்தோம். அங்கயிருந்த டாக்டர் சொன்னாரு, "பையனுக்கு மறு தையல் போட ணும். இங்க பார்த்தா ரொம்ப செலவாகும். நீங்க ஏற்கனவே பார்த்த தென்காசி ஸ்ரீ மருத்துவ மனைலயே பாருங்க'ன்னுட்டாரு. தென்காசில 17வது நாள் தையல் பிரிச்சாங்க. போடப்பட்ட தையல் ஒண்ணு சேரல பிரிஞ்சிருச்சுன்னாங்க. அப்புறம் ஸ்கூல் நிர்வாகம், எங்க மகனோட சிகிச்சைல அக்கறை எடுத்துக்கல. எல்லா செலவயும் நாங்கதான் பார்த்தோம். ஸ்கூல்ல முன்னுக்குப்பின் முரணா பேசினாங்க. அப்புறம்தான் 13-8-2024 அன்று என் மகனையும் கூட்டிட்டு போயி தென்காசி மாவட்ட கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தேன். கலெக்டர் உடனடியா சி.இ.ஓ.கிட்ட பேசினாரு. அரசு தலைமை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிச்சாங்க. 21-8-2024 வரைக்கும் ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணாங்க.

இதுல கொடுமை என்னன்னா.. அங்க வேலை பார்க்கிற உடற்கல்வி ஆசிரியருக்கு வயசு 67. அவரோட அலட்சியத் தாலதான் ராகவனுக்கு மண்டை உடைஞ்சது. இதுக்குக் காரணமான அந்த ஆசிரியர் மேல இப்ப வரைக்கும் நடவடிக்கை எடுக்கல. எங்க மகனோட சிகிச்சைக் கான செலவை ஸ்கூல் நிர்வாகம் பெயரளவுக்குத் தான் பண்ணுச்சு. நாங்க அடைஞ்சிருக்கிற வேதனையும், மனஉளைச்சலும் கொஞ்சநஞ்சமில்ல. ஸ்கூல்ல இருந்து பொருளாதார உதவி எதுவும் பண்ணல. ரொம்பவும் ஆபத்தான இந்த ஸ்கூல்ல இனியும் படிச்சா சரியா வராதுன்னு எங்க புள்ளைய வேற ஸ்கூல்ல சேர்த்துட் டோம். என்னுடைய கவலை எல்லாம், இந்தமாதிரி நடந்துக்கிட்ட கையாலாகாத பள்ளி நிர்வாகம், மற்ற மாணவர்கள் மேல எப்படி நல்லவிதமா கவனம் செலுத்தும் கிறதுதான்''”என்றார் பரிதவிப்புடன்.

உடற்கல்வி ஆசிரியர் பொன்னம்மாள் நம்மிடம், "அந்த மாணவன் பயிற்சி குரூப்லயே கிடையாது. அன்னைக்கு நான் மீட்டிங் போயிட்டு மதியத்துக்கு மேலதான் வந்தேன். நான் அந்த இடத்துல இல்ல. எப்படியோ நடந்திருச்சு. சிகிச்சை எல்லாம் பார்த்தோம். ஆனா, பெற்றோர் தரப்புல, இதுனால பின்னா எந்த தொந்தரவும் வராதுன்னு உத்தரவாதம் கேட்கிறாங்க''’என்றார்.

"ஆபத்து நேரக்கூடிய குண்டு எறிதல் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டபோது, உடற்கல்வி ஆசிரியர் பொன்னம்மா மைதானத்திலேயே இல்லை என்கிறாரே?''’ என்ற கேள்வியுடன், ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சத்யநாராயணனிடம் பேசினோம்.

“"ட்ரைனிங் லிஸ்ட்ல அந்த மாணவன் பேரே இல்ல. ஆனாலும், காயம்பட்டதும், ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுபோயி பார்த் தோம். ஹையர் கிரேடு ட்ரீட்மெண்ட் எடுத்து செலவு செஞ்சோம். கலெக்டரும், சி.இ.ஓ.வும் விசாரிச்சாங்க. பொன்னம்மாள் நல்லா டிரைனிங் ஆனவங்க. கிரேடெல்லாம் வாங்குனவங்க''’என்று ஏதோ பேசி சமாளித்தார்.

‘பள்ளிகளில் பிரச்சனை நடந்தால் அதை மூடி மறைக்கக்கூடாது’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘எப்படியோ நடந்திருச்சு’ என அந்தப் பள்ளி நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல.

-ராம்கி & ராம்குமார்