நாங்களும் உலகக் கோப்பை வெல்வோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் பார்வையைத் தன் பக்கம் திரும்பவைத்துள்ளது. பெண்கள் உலகக் கோப்பைப் போட்டி நடப்புக்கு வந்து 13-வது போட்டியில் கோப்பையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாகத் தட்டியுள்ளது. இதன்மூலம் உலகக் கோப்பை வென்ற சர்வதேச அணிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளோடு இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

Advertisment

ஆரம்பத்தில் தகுதிச் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றபோதும், அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த போட்டிகளை வென்று அடுத்தகட்டப் போட்டிக்கு தன்னைத் தகுதிப் படுத்திக்கொண்டது. போராடி அரையிறுதிச் சுற்றுக்கு வந்தபோது இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி. பெண்கள் உலகக் கோப்பையில் 6 கோப்பைகளை வென்றதும், தான் ஆடிய போட்டிகளில் 90 சதவிகித ஆட் டங்களில் வெற்றிகண்டதுமான ஆஸ்திரேலியா வுடன் போராடவேண்டிய நிலை.

Advertisment

ஆஸ்திரேலிய அணி முதலில் இந்தியப் பந்துவீச்சைத் துவம்சம் செய்து 338 ரன்கள்           குவிக்க, இந்தியாவுக்கு இமாலய இலக்கைத் துரத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த ஆட்டத்தில்தான் முந்தைய போட்டிகளில் சோபிக்காத ஜெமிமா ரோட்ரிக்யூஸ் களத்தில் நிலைத்து நின்று 127 ரன்கள் சேர்த்ததுடன், அணியையும் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். எப்படியும் இந்திய அணியை வெளியே துரத்திவிடலாமென கனவுகண்ட ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தி, இந்திய அணியை வெற்றிபெறவைத்தார் ஜெமிமா.

இதே ஜெமிமாவை, அவர் கிறித்துவர் என்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் இந்துத்துவர்கள் வைரலாக ட்ரோல் செய்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நவிமும்பையில் இறுதி ஆட்டம் நடக்க, இரு அணிகளும் ஆட்டத்திலிறங்குவதற்கு முன்பு மழை களத்தில் இறங்கி ஒரு சிறிய இன்னிங்ஸ் ஆடியதால், ஆட்டம் தொடங்க 2 மணி நேரம் தாமதமானது. பின்பு களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டக்காரரான ஷபாலி வர்மா 87 ரன்கள் குவித்ததும், தீப்தி ஷர்மா 58 ரன்கள் குவித்ததும் நல்லதொரு இலக்கை நிர்ணயிக்க உதவியது.

பின் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனும் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவருமான லாரா வோல்வார்ட் களத்தில் நின்றவரை, இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு குறுக்கே நின்றுகொண்டிருந்தார். 101 ரன்கள் குவித்த அவர் ஆட்டமிழக்கும் வரை இந்தியாவின் வெற்றி உறுதியில்லாமலே இருந்தது. அவர் வெளியேறியதும் இந்திய அணி தன் மேலா திக்கத்தை உறுதிசெய் தது. இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளைப் பறித்த தீப்தி ஷர்மா தான் 22 விக்கெட்களுடன் இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட் குவித்த சாதனையையும் கையில் வைத் துள்ளார். ரன் மற்றும் விக்கெட் என இரு முனையில் கலக்கலாக ஆடிய தீப்தி ஷர்மா, இந்த கிரிக்கெட் தொடரின் நாயகி விருதைத் தக்க வைத்துக் கொண்டார்.

இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், "இது முடிவல்ல... தொடக்கம்தான். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க விரும்புகிறோம்'' என்றுள்ளார். வெற்றிக்குப் பின் பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்ட னான ஸ்மிர்தி மந்தனா கூறுகையில், "இந்தத் தருணத்துக்காகத் தான் காத்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும், எங்கள் அணியில் மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடினோம். அதுதான் எங்கள் அணியின் பலம்''’எனச் சொல்லியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமும், சாதனையாளருமான சச்சின், “பெண்கள் கிரிக்கெட் அணியின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம்” என பாராட்டியுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சி யாளரான அமோல் மஜும்தாரை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஒருகட்டத்தில் இந்திய அணியில் முக்கிய வீரராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியில் இடம் கிடைக்காதது, வேறு பல காரணங்களால் அவர் லைம்லைட்டுக்கு வராமலே போனார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற இந்த அணியின் பயிற்சியாளராகத் திகழ்ந்ததன் மூலம் கொஞ்சம் தாமதமாக  லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் அமோல் மஜும்தார்.

வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணிக்கு ஐ.சி.சி. 39.5 கோடியும், அதுபோக இந்திய கிரிக்கெட் வாரியம் தனியாக 51 கோடியும் பரிசாக அறிவித்துள்ளன. இந்தப் பரிசுத்தொகை கிரிக்கெட் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப்படும்.

"ஒருங்கிணைந்த திறமை, மன உறுதி, கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த அசாத்தியமான வெற்றிக்காக இந்திய அணிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்''’என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 70 கோடி பெண்களுக்கு இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்.