மத்திய ஆப்பிரிக்காவின் அட்லான்டிக் கடற்கரையோரப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் இந்தியக் கப்பலைச் சேர்ந்த பணியாளர்கள் இருவரை சுட்டுக் காயப்படுத்தியதோடு, ஒருவரைக் கடத்தியும் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பயணங்களில் கொஞ்சம் சவாலானது கடற்பயணம். நவீன வசதிகள் ஆயிரம் வந்தபிறகும், பருவநிலை, புயல், அளவில்லாத அதன் பிரம்மாண்டம், எதிர்பாராத கடற்கொள்ளையர் தாக்குதல் காரணமாக இன்றும் சற்றே சிரமத்துக் குரிய ஒன்றாகவே இருந்துவருகிறது.
குறிப்பாக, ஆப்பிரிக்க கடற்பகுதி, கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு பெயர்போனது. மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான எ.வி.டேம்பன் என்ற கப்பல் 17 உறுப்பினர்களுடன் கேமரூனிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்றுகொண்டிருந்தது. கப்பலில் பொருட்கள் எதுவும் இல்லை. கப்பலில் பயணித்த 17 பேரும் உத்தரப்பிரதேசம், கேரளம், பீகார், மகாராஷ்டிர மாநிலத் தைச் சேர்ந்தவர்கள்.
எதிர்பாராத தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஆப்பிரிக்க நாடான கப்பன் துறைமுகம் அருகே கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் கொள்ளையர்கள் எவர் கவனத்திலும் சிக்காது கப்பலில் ஏறிக் குதித்திருக் கின்றனர். கொள்ளையர்கள் நான்கு பேர் கப்பலின் கேப்டனான சுர்ஜித் சிங்கை நோக்கி துப்பாக்கி யுடன் ஓடிவர, அவர் அவரது கேபினுக்குள் சென்று மறைந்துகொண்டு மற்றவர்களை எச்சரித்துள்ளார்.
ஆனாலும் அது காலதாமதமான எச்சரிக்கை. எதிர்பாராத திடீர் தாக்குதலால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. கொள்ளையர்கள் கப்பலில் இருந்த அனைவரையும் மேல்தளத்துக்கு கொண்டுவந்து மண்டியிட வைத்திருக்கிறார்கள். எதிர்க்க முயற்சித்த பொறியாளர் விகாஸ் நௌரியேல், சமையற்காரர் சுனில் கோஷ் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினர். மற்றொரு பொறியாளரான பங்கஜ் குமாரை கடலில் தூக்கி வீசிவிட்டனர். திரும்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் தங்கள் படகில் பங்கஜ்குமாரை கடத்திச் சென்றுவிட்டனர்.
"கொள்ளையர்கள் கிளம்பிச் சென்றதும், இக்கட்டில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் சிக்னலை வெளிப்படுத்தினோம். பின் மற்றவர்கள் உதவிக்கு வந்ததும் கொள்ளையரால் சுடப்பட்ட இருவரையும் சிகிச்சைக்குக் கொண்டுசென்றோம். இருவரது உயிருக்கும் ஆபத்தில்லை.
இதுவரை பங்கஜை விடுவிக்க கொள்ளையர்கள் பணயத் தொகை எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக கப்பன் பகுதியில் கடற்கொள்ளை நடப்பதும் இல்லை. எங்களது சக ஊழியரை மீட்டுத் தர, நமது அரசாங்கம் எங்களுக்கு உதவவேண்டும்''’என கோரியிருக்கிறார் கப்பலின் கேப்டனான சுர்ஜித்.