மோடி அய்யா ஏதோ வியாதி பரவும்னு சொல்றாரு, அதனாலதான் எங்கள எல்லாம் வேலைல இருந்து அனுப்பிட்டாங்க. அது எனக்கு புரியுது, ஆனா இந்த 6 வயசு குழந்தைக்கு நான் என்னனனு சொல்லி புரிய வைக்கறது? பசியை என்னால தாங்க முடியும், இந்த குழந்தை பசியை தாங்கிட்டு எப்படி என்னோட ஊர் போற வரைக்கும் நடக்க முடியும்?’’

modigovt

தலைநகர் டெல்லியிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட ஏராளமான இடம் பெயர்வு தொழிலாளர்களில் ஒரு பெண்மணி உத்தரபிரதேசத்திற்கு போகும் வழியில் சொன்னது இது. மெத்த படித்த பொருளாதார நிபுணர்கள் நீட்டி முழக்கி, “தேசத்திற்காக’என்று வக்காலத்து வாங்கி கொண்டு இருந்த போது, ஒரு பெண்மணியின் எளிமையான சொற்களில் இந்த நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார சீர்குலைவும் ஒளிவு மறைவில்லாமல் நிர்வாண படுத்த பட்டு விட்டது.

கொரோனோ பெருந்தொற்று என்பது இன்றைக்கு உலகை ஆட்டி கொண்டு இருக்கும் பிரச்சனை. பல்வேறு நாடுகள், பல விதமாக தங்களுடைய பொருளாதாரத்தினை எப்படியாவது நிலைநிறுத்திக்கொள்ள பிரயத்தனப் படுகிறார்கள். இந்திய ஒன்றியத்தில் இதன் தாக்கம், பிரதமர் மோடி மார்ச் 22 அன்று சொன்ன அடையாள மக்கள் ஊரடங்கில் துவங்கியது. மார்ச் 24, இரண்டே நாளில் வெறும் நான்கு மணி நேரம் கொடுக்கப்பட்டு நாடெங்கும் கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப் பட்டது. நிறுவனங்கள் மூடப் பட்டன. விமானம், ரெயில், பேருந்துகள் என அத்த னையும் நின்று போயின. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே தரப்பட்டது. மாநில அரசுகள், செக்ஷன் 144 போட்டு, தடை உத்தரவை மீறுபவர்களின்மீது வழக்கு தொடர ஆரம்பித்தது. ஹார்ட் அட்டாக் வந்த மனிதரை போல பொருளாதாரம் திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தது.

Advertisment

ii

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) இந்திய ஒன்றியத்தில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த வைரசு பாதிப்பினால், வேலை இழப்பார்கள் என்று ஒரு அறிக்கையில் சொல்கிறது. 130 கோடி மக்கள் தொகையில், 80 கோடி மக்கள் 18 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள்தான் உழைக்கும் வர்க்கம். இதில் 50% மக்களுக்கு வேலை இருக்காது. வருவாய் இருக்காது. அவர்களால் பொருள் ஈட்ட முடியாது என்பது இதற்கு முன்பு இந்திய துணை கண்டம் சந்திக்காத மாபெரும் சவால்.

தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னது அரசு. ஹார்ட்வேர், டெய்லரிங், கறிக்கடை, முடி வெட்டும் கடை, சிறு துணிக் கடைகள், சின்ன பேன்சி ஸ்டோர்கள் எப்படி வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியும்? அமைப்பு சாரா தொழிலாளர்கள் வீடுகள், அலுவலகங் கள் கட்டும் இடங்களிலிருந்து துரத்தப்பட்டார்கள். தொழிற்சாலை களில் சீருடை அணிந்த வேலை பார்த்த ஏராளமான தொழிலாளிகள் வீட்டில் இருக்கிறார்கள். மாத சம்பளத்தில் வாழும் கோடிக்கணக் கான உழைப்பாளிகளை நடுதெருவுக்கு கொண்டு வந்து விட்டது இந்த முடிவு.

Advertisment

ii

இந்த உத்தரவினை போட்ட பிறகு மக்களுக்கான சில வருவாய் நிவாரணதிட்டங்கள் என்று இந்திய ஒன்றிய அரசால் முன் வைக்கப் பட்டது.

மாத சம்பளக்காரர்கள் ஏற்கனவே பல்வேறு ஊர்களில் உழல் பவர்கள். இவர்களுக்கு ஆறுதலாக ரிசர்வ் வங்கி முதலில் 3 மாத இடைக் கால நிவாரணம் தரப்படும் என்று அறிவித்தது. ஆனால், அதை செயல் படுத்த வேண்டிய முடிவினை வங்கிகளிடம் தந்தது. இதில் பணம் அள்ள முடியும் என்று புரிந்து கொண்ட வங்கிகள், 3 மாத காலத்திற்கு எந்த மாத தவணையும் கட்ட தேவை யில்லை என்பதை ஏற்கிறோம். ஆனால், இந்த 3 மாத காலத்திற்கு தனியாக கூடுதல் வட்டி போட்டு, அதை மொத்தமாக கடனோடு சேர்த்து வசூலிப்போம் என்று சாமான்யர்களின் தலையில் பாரத்தினை ஏற்றி விட்டார்கள். எதிர்காலத் தில் அவர்களின் இந்த முடிவு மிக அதிக பணத்தினை கையை விட்டு கட்ட சொல்லும்.

நிதியமைச்சர் 1.7 இலட்சம் கோடிகள் வெவ்வேறு தரப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாய் அறிவித்தார். கூர்ந்து நோக்கினால், அதில் முக்கால்வாசி தொகை ஏற் கனவே தருவதாக சொல்லப்பட்ட மான்யங்கள்தான். அதை கொரோனா வின் தாக்கத்தினால் ஏற்பட்ட வீழ்ச் சிக்காக தருவதாக கணக்கு காட்டி விட்டார்கள். ஆக ஏழைகள், விவசா யிகள், விளிம்பு நிலை மக்கள், இடம்பெயர்வு தொழிலாளர்கள் என யாரையுமே மத்திய அரசு மதிக்கவே இல்லை. மக்களுக்கான இடைக்கால வருவாய் நிவாரண திட்டங்கள் எதுவுமே நடைமுறை சாத்தியமாகவில்லை.

ii

வருவாய் ஆதாரங்கள் நின்று விட்டன. திரும்பவும் எப்போது சூழல் சரியாகும் என்று தெரியாது. மக்கள் வீட்டு சிறையில் இருக்கிறார்கள். வைரசுக்கான மருந்து கண்டு பிடிப்பதற்கு 18 - 24 மாதங்கள் ஆகும் என்றால், அதுவரை மக்கள் எப்படி வாழ்வார்கள்? எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும், நிகழ்காலத்தில் இருக்கும் அழுத்தமும், வருவாயின்மையும் பெரும்பாலான மக்களை மிக மோசமான மனநிலைக்கு தள்ளி விட்டது. இது கடந்த இரண்டு வாரத்தில் எல்லாவிதமான நுகர்வு களையும் தகர்த்து விட்டது. தேவை குறைந்துபோவது சிறு-குறு தொழில்கள், சிறிய-பெரிய நிறுவனங்களுக்கு சாவு மணி அடித்து விட்டது. பெரும்பாலும் சிறிய நிறுவனங்கள் பொருள் (அ) சேவையை விற்று, அதிலிருந்து வரும் பண சுழற்சியை நம்பித்தான் ஆட்களை வேலைக்கு நியமித்து இருந்தார்கள்.

ஒரு டீக்கடை என்று இருந்தால், அதில் டீ குடிக்க ஆட்கள் வந்தார்கள். அதே டீக்கடையில் பிஸ்கட்டும், பன்னும் கிடைத்தது. பஜ்ஜியும் வடையும் போட்டார்கள். இப்போது டீக்கடையை மூடியதால், டீ கடை முதலாளிக்கு நட்டம். பிஸ்கட்டும், பன்னும், கேக்கும் போட்ட சிறு வியாபாரிகளுக்கு நட்டம். பஜ்ஜிக்கும், வடைக்குமான மூல பொருட்கள் தந்த நிறுவனங்களுக்கு நட்டம். இது டீக்கடையின் கதை. இதேபோலதான் எல்லா சிறிய கடைகளும், நிறுவனங்களும், அதில் வேலை பார்த்தவர்களும்.

ii

வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது வீட்டில் இருக்கும் எத்தனை பேர்களுக்கு திரும்பவும் வேலை கிடைக்கும் என்று தெரியாது. ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பற்றிய விவாதங்கள் எழ ஆரம்பித்து விட்டன. அரசோ யாரையும் வேலையை விட்டு நீக்க கூடாது, முழு சம்பளம் தர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. நிறுவனங் களும், அதன் முதலாளிகளும் வருமானமே இன்றி எத்தனை மாதங்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்? ஆக இந்த மோசமான சூழலுக்குள் இந்திய ஒன்றியமும் அதன் மக்களும் சிக்கி கொண்டு விட்டார்கள்.

பொருளாதாரம் என்பதே உழைப்பது, அதன் மூலம் பொருள் ஈட்டுவது, அதை செலவு செய்து தனக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது தான். இந்த ஊரடங்கு உத்தரவு, உழைப்பினை நிறுத்தி விட்டது. உழைப்பு நின்றதால், அதனால் உருவாகும் பொருட்களும், சேவையும் நின்று விட்டது. உழைப்பே இல்லாத இடத்தில் வருவாய் உருவாகாது. வருவாய் இல்லாமல் செலவு செய்ய முடியாது. இந்த தனிநபர் வருவாய் - செலவு சுழற்சி தடைப்பட்டதால், ஒட்டு மொத்த பொருளா தாரமே முடங்கிப் போனது. இனி திரும்ப இயல் பான வாழ்க்கைக்கு போக எத்தனை காலம் எடுக்கப் போகிறது என்கிற கேள்விக்கு யாரிடத்திலும் பதில் இல்லை.

இதிலிருந்து பொருளாதாரத்தையும் மக்களையும் மீட்டு எடுக்க வேண்டுமெனில், தீர்க்கமாக இந்திய ஒன்றிய அரசு சில துணிச்சலான செயல்களை முன் எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு நாட்டினுடைய பற்றாக்குறை அதிகரித்தாலும் பரவா யில்லை என மக்கள் மற்றும் தொழில் நல திட்டங்களை வழங்குவது தான் அரசிடம் இருக்கும் ஒரே வழி. ஏராளமான நாடுகள் தங்களுடைய மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க பல அதிரடி முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அனைத்து சிங்கப்பூரிய தொழிலாளர்களின் சம்பளத்தில் 75% டிசம்பர் வரைக்கும் அரசே தரும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் சொல்லி விட்டது. சிறு, குறு நிறுவனங்களின் வருவாய் இழப்பினை பாலன்ஸ் செய்ய அமெரிக்க அரசு 20 இலட்சம் கோடியில் கடன் வழங்கும் திட்டங்களை சொல்ல ஆரம்பித்து விட்டது. யாராய் இருந்தாலும் இலவச மருத்துவம் என்று சவுதி அரேபியா வாக்குறுதி கொடுத்து விட்டது. ஜப்பானில் ஏழைகளுக்கு 3,00,000 வரைக்கும் அரசு நேரடியாக பணம் தர ஒப்பு கொண்டு விட்டது.

இந்திய ஒன்றியத்தில் வறுமை கோட்டிற்கு கீழே 20% மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த 6 மாதங்கள் வாழ்வதற்கான உணவு, தேவைகள் மற்றும் வாழ்வியல் தொகையை அரசு தர வேண்டும். மத்தியதர வர்க்கத்துக்கும், சிறிய நிறுவனங்களுக்குமான கடன்களை அடுத்த 6 - 9 மாதங்களுக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு சென்னை வெள்ளத்தின் போது மக்கள் கணக்கில் பணம் போட்டது போல, ஒரு தொகையினை செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங் களின் கடன்களை அடுத்த 12 மாதங்களுக்கு தள்ளி வைத்து, அதில் உழைக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட பங்கினை வட்டியில்லாத கடனாக நிறுவனங்களுக்கு தர வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, குறைந்தபட்ச விலையை விட 15-20% கூடுதல் விலை கொடுத்து வாங்கி அதை மக்களுக்கு அடக்க விலையில் தர வேண்டும். ஏற்றுமதி சாத்தியமுள்ள தொழில்களை ஊக்குவித்து, அவர்களுக்கான வரி விகிதங்களை சீரமைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டியின் பல்வேறு அடுக்குகளை எளிமை படுத்தி, அதன் அபராதங்களை குறைத்து, நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள சொல்லுதல் அவசியம். இவை அத்தனையிலும் அரசிற்கும், அரசு நிறுவனங் களுக்கும் நிறைய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால், ஒரு பெருந்தொற்று சூழலும், அது உருவாக்கி இருக்கிற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மக்களையும் நிறுவனங்களையும் காப்பாற்றாமல் போனால், ஒட்டு மொத்த ஒன்றியத்தின் சிக்கல் அதிகமாகி விடும்.

நம்முடைய வீடு பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வீட்டினுள் இருக்கும் கண்ணாடி உடைகிறதே, கதவுகள் விழுகிறதே என்று நாம் கவலைப்பட முடியாது. இப் போதைக்கு முக்கியம், இருப்பதை வைத்து கொண்டு வீட்டினை காப்பாற்றுவது. வீடு காப்பாற்றப்பட்டால், பின்னாளில் இழந்ததை மீட்டு கொள்ளலாம். சம்பாதித்து வாங்கி கொள்ளலாம். நாடும் வீடு மாதிரி தான்.

அரசு காக்குமா (அ) தோற்குமா என்பதை காலம் தான் சொல்லும்.