மெரிக்கா -கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூன் என்ற காலிஸ்தான் ஆதரவாளரைக் கொலைசெய்ய சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் வெளியான தகவல், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். முகமூடியணிந்த இரு மர்ம நபர்கள், ஹர்தீப் சிங்கை அவரது ட்ரக்கில் வைத்தே சுட்டுக் கொன்றனர். அவரது கொலை, கனடாவுக்கும், இந்தியா வுக்கும் இடையிலான விவகாரமாக உருவெடுத்தது. ஹர்தீப் சிங் கொலைக்கு பின்னணியில் இந்திய உளவு அமைப்புகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சுமத்தினார். இவ்விவகாரத்தில், இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த கனடா, உடனடியாக இந்திய தூதரை கனடாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டது. கனடாவின் குற்றச் சாட்டை மறுத்த இந்தியா, பதிலடியாக இந்தியாவிலிருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட கனடா தூதர்களை வெளியேற்றியது. இந்தியா, கனடா நாடுகள் விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்தது. தனது நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறிய கனடா பிரதமர், இவ்விவகாரத்தில் இந்தியா தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

dd

ஹர்தீப் சிங் கொலை தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்தான் அமெரிக்கா -கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரை கொலைசெய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்த சதித்திட்டத்தை அமெரிக்கா முறியடித்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது. குர்பத்வந்த் சிங் பன்னூன், பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதாடியவர். சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் (நஎஓ) சட்ட ஆலோசகராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்துவந்தார். 2020ஆம் ஆண்டில், அவரை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்தது. அவரது விவசாய நிலத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கையகப்படுத்தியது. பன்னூன் மீது பஞ்சாபில் மூன்று தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2022ஆம் ஆண்டு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இப்படியான சூழலில் தான் அவர் கடந்த ஜூலை மாதம் கார் விபத்தொன்றில் சிக்கியதாகக் கூறப்பட்டது. அமெரிக்க மண்ணில் வைத்து அவரைக் கொலைசெய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் குற்றச்சாட்டை அமெரிக்கா எழுப்பியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், 'சீக்கிய காலிஸ்தான் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்க மண்ணில்வைத்துக் கொல்வதற்காக நடைபெற்ற சதித்திட்டத்தை அமெரிக்கா மிகக்கடுமையாக எதிர்கொண்டு முறியடித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் உயர்மட்டக் கேள்விகளை எழுப்பியுள்ளோம். எங்கள் அமெரிக்க மண்ணில், ஒரு சீக்கியருக்கு எதிராக நடைபெற்ற கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம். வரும் நாட்களில் இவ்விவகாரம் தொடர்பாக இன்னும் சில தகவல்களை வெளியிடுவோம்'' என்று குறிப்பிட்டது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், "காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங்கை, அமெரிக்க மண்ணில் வைத்து படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை முறியடித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள காலிஸ்தான் தீவிரவாதி களுக்கு மற்ற அமைப்பினருடன் உள்ள தொடர்புகள் குறித்தும், அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர்தான் குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய முயன்றதாகவும், இதற்கென அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தொகையை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83 லட்ச ரூபாயைக் கொடுக்க முன்வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியர் மீதே அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது, இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் சீரியஸானது. இந்த குற்றச்சாட்டு நிரூபணமானால், நிகில் குப்தாவுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “"இவ்விவகாரத்தில் அமெரிக்கா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளோம். இத்தகைய கருத்துக்கள் தேசப்பாதுகாப்பு நலன்களைப் பாதிப்பதால், இந்தியா எப்போதும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும். இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து இந்தியா விசாரித்து வருகிறது. அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதால் எழுந்த விவகாரம் ஓயு முன்பே தற்போது அமெரிக்காவும் அதே போன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பி யிருப்பது, உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கும்படி வைத்துள்ளது.

Advertisment