நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. சோனியாகாந்தி தலைமையில் கடந்த 19 ஆண்டு காலமாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்கிற பெயரும் மாற்றப்பட்டு I-N-D-I-A (இந்தியா) என புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தம், இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி! புதிய பெயருடன் புதிய நோக்கத்துடன் உருவாகியிருக்கும் எதிர்க் கட்சிகளின் இந்த கூட்டணியின் வலிமை, மோடியை வீட்டுக்கு அனுப்புமா? என்கிற எதிர் பார்ப்பு தேசிய அளவில் உருவாகி வருகிறது.
எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முதல் கூட்டம் கடந்த மாதம் பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்தது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்டன. முதல் கூட்டம் என்பதால், இணைந்து செயல்படுவோம் என்கிற அளவில் மட்டும் விவாதித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெங்களூருவில் நடந்தது. தேசிய அளவில் ஆளுமை மிக்க தலைவர்கள் உட்பட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவள வன், இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வந்த தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஹோட்டலில் தனக்கு ரூம் வேண்டாம் என தவிர்த்துவிட்டு தனது சகோதரி செல்வியின் வீட்டில் தங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்களின் சந்திப்புகள், விருந்து வைபவங் கள் என களைகட்டின. முதல் நாள் விருந்தினை முதல்வர் சித்தராமையாவும், இரண்டாம் நாள் விருந்தினை துணை முதல்வர் சிவக்குமாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல்நாள் விருந்து நிகழ்வு ஒரு விவாத நிகழ்வாகவே நடந்தது. குறிப்பாக, நாளைக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நம் கூட் டணிக்கு புதிய பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனையை சிலர் முன்வைத்தபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரே நமது நோக்கத்தை வெளிப்படுத்துவதாகத்தானே இருக்கிறது என்கிற கருத்தினை வெளிப்படுத் தியது காங்கிரஸ். ஆனால், தங்களுக்கு மட்டும் தான் தேசபக்தி இருப்பது போலவும், இந்தியா தங்களின் சொத்து என்பதுபோலவும் அரசியல் செய்து வருகிறார் மோடி. இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் நம் கூட்டணியின் பெயர் இருப்பது அவசியம் என்பதனை வலியுறுத்தினர். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும், என்ன பெயர் வைக்கலாம் என எல்லோரும் யோசியுங்கள். நாளை நடக்கும் கூட்டத்தில் பெயரை இறுதி செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் ராகுல்காந்தி. விருந்து நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத மம்தாபானர்ஜி, சரத்பவார் ஆகியோருக்கு இதனை தெரியப்படுத்தினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
இரண்டாம் நாள் சோனியா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய தலைவர் கள் அனைவருமே இந்தியாவின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதையும், பத்தாண்டு கால மோடி ஆட்சியில் நடந்துள்ள சர்வாதிகார ஜனநாயக விரோதப்போக்குகளையும் சுட்டிக் காட்டி, இப்போது நாம் ஒன்றுபடாவிட்டால் அப்புறம் எப்போதுமே ஒன்றுபட முடியாது என்பதை விவரித்து, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எதனால் தேவை என்பதையும் வலியுறுத்திப் பேசினர். மேலும், யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த சர்ச்சை எதுவும் பெரிதாக வெடிக்கவில்லை.
காங்கிரசுடனும், ராகுல்காந்தியுடனும் எப்போதும் மல்லுக்கட்டும் மம்தா பானர்ஜி, இந்த முறை மிக இணக்கமாக இருந்தார். தனக்கு பிடித்த தலைவர் ராகுல்காந்தி என்று சொல்லுமளவுக்கு அவரிடம் மாற்றம் தெரிந்தது.
பாட்னா கூட்டத்தைவிட பெங்களுரு கூட்டத்தில் தலைவர்களின் ஒற்றுமை அதி களவில் இருந்தது. இதனால் கூட்டணி உறுதியான நிலையில், கூட்டணிக்கான புதிய பெயர் வைப்பது குறித்த விவாதம் நடந்தது. நிதிஷ்குமார், கெஜ்ரிவால், லாலு, அகிலேஷ், வைகோ, திருமாவளவன் என பலரும் தங்களுக்குத் தோன்றிய பெயரை சொன்னார்கள். அப்போது, பேசிய மம்தா பானர்ஜி, "நம் கூட்டணியின் பெயர் "இந்தியா' என்று வரும் வகையில் வைத்தால் நன்றாக இருக்கும். அதாவது, இந்த தேசம் மோடிக்கு மட்டுமே சொந்தம் என்பதும் போலவும், அவர் களை விட்டால் தேசத்தை காப்பாத்த முடியாது போலவும், தேசப்பக்தியின் சிகரம் பா.ஜ.க. மட்டும்தான் என்பது போலவும் மோடி கட் டமைக்கிறார். அதனால், ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் இந்தியா என்ற அடையாளத்தில் ஒருங்கிணைந்து ஒரு பக்கத்தில் நிற்பதை உணர்த்தவும், மறுபக்கத்தில் பா.ஜ.க. என்கிற மக்கள்விரோத சக்தி நிற்பதை உணர்த்தவும் நம் கூட்டணியின் பெயர் "இந்தியா' என்பதாக இருப் பது அவசியம்'' என வலியுறுத்தினார் மம்தா.
அதை ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் வழி மொழிந்தனர். இதனையடுத்து, I-N-D-I-A என்ற பெயரின் ஒவ்வொரு எழுத் துக்கும் என்ன பொருள் என விவாதித்தனர். அப்போது, D என்பதற்கு என்ன பொருள் வைக்கலாம் என தலைவர்கள் ஆலோசித்த போது, டெமாக்ரசி, டெமாக்ரட்டிக், டிப்ளமேட்டிக் என்றெல்லாம் சொல்லப்பட் டது. இறுதியில் டெவலப்மெண்ட் என்ற பொருளில் D-யை பயன்படுத்தலாம் என மம்தா சொல்ல, அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியன் நேசனல் டெவலெப்மெண்ட் இன்க்ளூசிவ், அலையன்ஸ்) என்பதை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள, எதிர்க்கட்சி களின் கூட்டணிக்கு "இந்தியா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சில ரிடம் பேசியபோது, "இந்தியா என்கிற கூட் டணிக்கு யார் தலைமை ஏற்பது என்கிற விவாதம் வந்தபோது, முதலில் 11 பேர் கொண்ட ஒருங் கிணைப்புக்குழுவை அமைப்பது என்றும், அதன் மூலமாக 11 அமைப் பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கூட்டணியின் ஒவ்வொரு நகர்வுகளையும் முன்னெடுப்பது என் றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. கூட் டணிக்கான செயலகம் ஒன்றை டெல்லியில் ஏற்படுத்தவும் தீர் மானித்துள்ளோம்.
தவிர, கூட்டணிக் கான குறைந்தபட்ச செயல்திட்டம் உரு வாக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத் தப்பட்டன. எல்லோ ரும் அதனை ஏற்றுக் கொள்ள, தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையிலும், நான்காவது கூட்டம் தமிழகத்திலும் நடத்துவது என்றும் தீர் மானித்துள்ளோம். இனி, இந்தியாவுக்கும் மோடிக்கு மான யுத்தமாகவும், பா.ஜ.க. சிந்தாந்தத்திற்கும் ஜனநாய கத்துக்குமான போராட்டமாகவும் வெடிக்கும்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைத்து அதில் குளிர்காய்ந்து வரும் மோடியின் ஆட்டம் இனி வெல்லாது. நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், இந்தியா ஜெயித்ததாக சொல்லும். அப்போது, தேசத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக மோடி யும், அவரது சகாக்களும் உள்ளே போவார்கள். காலம் இதற்கான விடையை எழுதும்''’என்கிறார்கள் ஆவேசமாக.
இந்த கூட்டணியின் முகமாக இருப்பதில் ஸ்டாலினின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனாலேயே தி.மு.க. மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள் மற்ற தலைவர்கள். அதேசமயம், மோடிக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் ஒருமுகப்படுத்துவதே கூட்டணியின் உண்மையான நோக்கம். ஆனால், தேர்தல் நேரத்தில் இதன் ஒருமுகத் தன்மை பலனளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. காரணம், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிப் பங்கீடுகளில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்பதுதான். ஆக, தேர்தல்வரை "இந்தியா'வின் ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஜனநாயக சக்திகளிடம் எதிரொலித்தபடி இருக்கிறது.