ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சட்டமன்றத்தில் கடந்த மாதத்தில், ராஜஸ்தான் கட்டாய திருமண பதிவுத் திருத்த மசோதா 2021 கொண்டுவரப் பட்டு, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறை வேற்றப்பட்டது. ஆனாலும் அது சட்டமாக்கப்படாமல் இருந்த நிலையில்... எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்ததால், அந்த சட்டத் திருத்தத்தைத் தற்போது திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த மசோதாவில், அனைத்துத் திருமணங்களும் முறைப்படி பதிவு செய்யப்பட்டால்தான் ஏற்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள உட்பிரிவு ஒன்றில், "மணமகள் 18 வயதிற்குட்பட்டவராகவும், மணமகன் 21 வயதிற்குட்பட்டவராகவும் இருந்தால், அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களை வளர்த்துவரும் பாதுகாப்பாளர்கள், அந்த திருமண நிகழ்வை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த விதிமுறைதான் பலத்த விவாதத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியது.

c

இந்த சட்டத் திருத்தம், குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது போலவும், அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது போலவும் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதில் மாநில அரசு தீவிரமாக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் குறிப்பிட்டார். அதுகுறித்து வெளி யிட்ட ட்வீட்டில், நம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்விஷயத்தில் அரசு எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளாது என்று குறிப்பிட்டிருந்தார். திருமணங்களைப் பதிவு செய்தால்தான் அவர்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளும், அவர்களுக்கான உரிமைகளும் கிடைக்க ஏதுவாகும் என்பதால்தான் திருமணங்களைப் பதிவுசெய்யக் கட் டாயப்படுத்துவதாக, அரசுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisment

இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு குழந்தைகள் நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கின. இச்சூழலில், சர்வதேச பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்வதா, கைவிடுவதா என்பது குறித்து வழக்கறிஞர்களோடு சட்ட ஆலோசனை செய்தபின்னர் முடிவெடுக்கப் படும் என்று கூறினார். அதையடுத்து, அந்த சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப்பெறுவது குறித்து கவர்னரிடம் கேட்டுக்கொள்ளப்படும் என்று மாநில அரசு கூறியது.

இந்தியா முழுமைக்கும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 15 லட்சம் பெண் குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. சிறார் திருமணங்கள் பெரும்பாலும் ரகசியமாகவும். இரவு நேரத்திலும், திருமணப் பத்திரிக்கை இல்லாமலும் நடைபெறுவதால், அவற்றைத் தடுக்க நினைக்கும் சமூக நல அமைப்பு கள், அவற்றை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பது கடினமாக இருக்கிறது. இந்நிலையில், கட்டாயத் திருமணப்பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டால், பதிவு செய்யப்படாமல் நடக்கும் சிறார் திருமணங்களுக்கு எதிராக வழக்காடுவது மேலும் கடினமாகும் என்பதால் தான் இத்தகைய திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

cc

Advertisment

சமூக நீதி குறித்த சிந்தனை வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டிலும்கூட கொரோனா லாக் டௌன், பள்ளிகள் மூடலால் கல்வி பாதிப்பு, வருமான இழப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால், சிறார் திருமணங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2021, ஜனவரி முதல் அக்டோபர்வரை என தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐநூறுக்கும் அதிகமான சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதைவிட அதிகமாக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன என்பதுதான் அதிர்ச்சி.

கடந்த செப்டம்பர் மாதம் 10 முதல் 12-ம் தேதி வரையிலான 3 நாட்களில் மட்டும், திருப்பத் தூர் மாவட்டத்தில் 8 சிறார் திருமணங்கள், வேலூர் மாவட்டத்தில் 3 திருமணங்கள், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 திருமணங்கள் என 15 சிறார் திருமணங்களை சமூகநலத்துறையும், குழந்தைகள் நல குழுமமும் அதிகாரப்பூர்வமாக தடுத்து நிறுத்தி யுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை, வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 32 திருமணங்களையும், திருப்பத்தூர், இராணிப் பேட்டை மாவட்டத்தில் சுமார் 40 திருமணங்களை யும் தடுத்து நிறுத்தியுள்ளனர். 17 சிறுமிகளுக்கு திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன. அவர்களில் சிலரைக் கண்டறிந்து பெற்றோர், மணமகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கண்டவை, சமூகநலத்துறையின் கணக்கின்கீழ் வந்தவை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், 10, 15 ஆண்டுகளுக்கு முன்புவரை 18 வயது பூர்த்தியடை யாத 15, 16 வயது சிறுமிகள் நிறைய பேருக்கு அவர்களது பெற்றோரே திருமணம் செய்துவைத்தனர். அதன்பின், அரசாங்கத்தின் கட்டுப் பாடு, விழிப்புணர்வு, குறிப்பாக சமூகநலத்துறை மூலம் வழங்கப் பட்ட திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டங் களில் பயன்பெற, படித்திருக்க வேண்டும், கண்டிப்பாக 18 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் சிறார் திருமணத்தை வெகுவாகக் குறைத்தது. ஆனால் கொரோனா மற்றும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

சமூகநலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் அமைச்சரான கீதாஜீவன், சிறார் திருமணங்கள் அதிகமாக நடப்பது குறித்து மாவட்ட சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலப்பிரிவு, 1098 சைல்ட்லைன் அமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டிலுள்ள தனியார் குழந்தைகள் நல அமைப்பு ஆய்வு செய்து அனுப்பிய ஓர் அறிக்கையைச் சுட்டிக்காட்டி யுள்ளார். அந்த அறிக்கையில், 2019-ம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டு சிறார் திருமணங்கள் 40 சதவிகிதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. மலைப்பகுதிகள், குடிசைப் பகுதிகளில் இது கூடுதலாக உள்ளது.

cc

குறிப்பாக, தருமபுரி, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மட்டும் 300-க்கும் அதிகமான திருமணங்கள் நடந்துள்ளன. 2020-ம் ஆண்டு, தருமபுரி மாவட்டத்தில் 192-ம், சேலம் மாவட்டத்தில் 98 திருமணங்களும் நடந்துள்ளன. சமூகநலத் துறையிடமிருந்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் ஒன்றில், கடந்த 2020-ம் ஆண்டு 3,208 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம். 2020 மே முதல் டிசம்பர் வரையிலான 7 மாதத்தில் மட்டும் சைல்ட் லைன் நம்பர் மூலமாக, 1,456 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சரியாகப் பராமரிப்ப தில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 95% நடவடிக்கை எடுப்பது கிடையாது. இந்த சட்டத்தின் மூலம், மணமக்கள் குடும்பத்தார், அழைப்பிதழ் அச்சடித்தவர் முதல் சமையலர் வரை அனைவரையும் கைது செய்ய வழியுண்டு. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை, 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதிகாரிகள் இந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்வதில்லை. திருமணத்தைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்துவிட்டு, சமூகநலத்துறை, காவல்துறை அதிகாரிகள் சென்றுவிடு கின்றனர். தொடர்ச்சியாக அவர்களைக் கண்காணிப்பதில்லை.

இதுபற்றி நம்மிடம் பேசிய குழந்தைகள் பாதுகாப்பு நலப்பிரிவு ஊழியர்கள், "கிராமங்களில் வி.ஏ.ஓ, தலையாரி, கிராமச் செவிலியர், பஞ்சாயத்துச் செயலாளர், அங்கன்வாடிப் பணியாளர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் எனப் பலர் உள்ளார்கள். இவர்களில், தலையாரி, பஞ்சாயத்து செயலாளர் போன்றோர் அதே கிராமத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள். இவர்களுக்குத் தெரியாமல் கிராமத்தில் சிறு துரும்பும் அசையாது. குழந்தை திருமணம் குறித்த தகவல்கள் இவர்களுக்குத் தெரிந்தாலும் எங்களுக்கு சொல்வதில்லை. எங்களுக்குத் தகவல் வந்து நாங்களாக சென்று தடுத்து நிறுத்தி எச்சரித்துவிட்டு வருகிறோம். அடுத்த சில நாட்களில் மறைமுகமாகத் திருமணம் செய்துவைத்து உறவினர் வீட்டுக்குச் ஜோடிகளை அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் முறைப்படி கண்காணித்தால் திருமணம் நடக்காது. ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை'' என்று குற்றம்சாட்டினார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை முழுவீச்சில் செயல்பட வைத்து, பெற்றோர்கள் மத்தியில் சிறார் திருமணத்தின் பாதகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும்.