நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் தாமிர பரணியாற்றுப் படுகையின் மணல் கள்ளத்தனமாக பல நூறு லோடுகள் அண்டை மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்பட்டதில் வருவாய்த் துறையின் கீழ்மட்டம் முதல் மாவட்டத்தின் மேல்மட்ட அதிகாரிகள் வரை துணை போன விவகாரத்தில், நெல்லை மாவட்ட கனிமவளத்துறையின் உதவி இயக்குனரான சபியாவை சி.பி.சி.ஐ.டி. ஏப்-10 அன்று கைது செய்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இந்த மணல்கடத்தல் விவகாரத்தை 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களின் நக்கீரன் இதழில் விரிவாகவே வெளிப்படுத்தியிருந்தோம். மணல் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் மாவட்ட அளவிலான உயரதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/officer-arrest.jpg)
கேரள மாநிலத்தின் கொல்லம் பத்தனம் திட்டாவின் மாவட்ட பிஷப் சாமுவேல் மாரிஏரேனியஸ், பாதிரியார்களான ஜார்ஜ் சாமுவேல், ஜீஜோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியாஸ், ஷாஜி தாமஸ் உள்ளிட்ட 6 பேர் இணைந்து 2019 நவம்பரின்போது பொட்டல் மலைக்குன்றின் சமீபமாக பூமி எம். சாண்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
கல்குவாரி நஷ்டத்தில் ஓட, பாதிரியார்கள் குவாரியின் லைசென்ஸை சரண்டர் செய்ய முற்பட்டபோது, ரமேஷ் என்பவர் "உரிமத்தை சரண்டர் செய்யவேண்டாம். அருகில் தாமிர பரணியின் மணல் திட்டுகள் உள்ளன. எம்.சாண்ட் என்ற பெயரில் மணலைக் கடத்தினால் வருமானம் கொட்டும்'' என்று தூபம் போட, பாதிரியார்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து ரமேஷ், தலைமையில் மணல் கடத்தல் அசுர வேகமெடுத்து லோடு லோடாக அண்டை மாநிலமான கேரளாவிற்குக் கடத்தப்பட்டது. அதற்காக கனிமவளத்துறையின் பெர்மிட்கள் பயன்படுத்தப்பட்டன.
மணல் கடத்தல் தொய்வின்றி நடப்பதற்காக தாலுகா அளவிலான கீழ்மட்ட அதிகாரிகளில் தாசில்தார் வரையிலும், அடுத்து மாவட்ட அளவிலான உரிமம் அளிக்கிற சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் உதவி இயக்குனரான சபியா, அவருக்கும் மேலான மாவட்டத்தின் மணல் கண்காணிப்பு தலைமையை வைத்திருப்பவர் வரையிலும் வளைக்கப்பட்டனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கணிணி பழுதுநீக்கும் காண்ட்ராக்டரான குபேரசுந்தரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
கீழ்மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலான அதிகாரிகளுக்குப் போக வேண்டியது அவரவர்களின் தகுதிக்கேற்ப குவாரியின் முக்கியப்புள்ளியான வினோத்திடமிருந்தே போயிருக்கின்றனவாம். அது குறித்த மாமூல் டைரியை ரெகுலராக மெய்ன்டெய்ன் செய்திருக்கிறார் வினோத்.
கனிமவளத் துறையின் ஏ.டி.யான சபியாவுக்கு போகவேண்டியது ரெகுலராகப் போக, சபியாவிடம் பாதுகாப்பாக இருக்கவேண்டிய, மணல் பெர்மிட்களில் ஒட்டப்படவேண்டிய முக்கியமான அரசின் முத்திரை யான ஆலோகிராம் அடங்கிய புக்லெட் குவாரி தரப்பிற்குத் தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பலநூறு கோடிகள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது மில்லாமல், பொட்டல் பகுதியின் விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதில் கொதித்துப்போன அப்பகுதி விவசாயிகள் புகாரளித்தும் நடவடிக்கையின்றி போகவே, மதுரைக் கிளையின் உயர்நீதிமன்றப் படியேறிவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/officer-arrest1.jpg)
உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட, அப்போதைய சேரன்மாதேவியின் சப்கலெக்டரான பிரதிப் தயாள், எம்.சாண்ட் குவாரியை முறையாக ஆய்வுசெய்து நிறுவனத்திற்கு 9.57 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார். அந்தப் பகுதியின் வி.ஏ.ஓ.வை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.
மாவட்ட அதிகாரிகளின் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட, அதிகாரிகளின் துணையின்றி இவை நடப்பதற்கு சாத்தியமில்லை, முழுமையாக விசாரிக்கப்படவேண்டும், தொடர்புடை யவர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.
வழக்குப் பதிவு செய்து விசாரித்த கல்லிடைக் குறிச்சி போலீஸ் அதிகாரிகள், குவாரி தொடர்புடைய சிலரைக் கைதுசெய்ததுடன் அதிரடி ரெய்டும் நடத்தினர். வினோத்திடமிருந்து மாமூல் பற்றிய டைரி, கனமான தொகைகள், கனிமவளத்துறையின் ஏ.டி.யான சபியாவின் பாதுகாப்பிலிருக்கவேண்டிய, 257 ஆலோகிராம் முத்திரைகள், அதிகாரியின் கையெழுத்திடப்பட்டு நிரப்பப்படாத பெர்மிட்கள் என்று பலவற்றையும் கைப்பற்றினர். இதையடுத்து மைன்ஸ் உதவி இயக்குனரான சபியா, ஊட்டிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்.
அடுத்து, சபியாவின் கணவர் முகம்மது ஷமீர் உட்பட 22 பேரை கல்லிடைக்குறிச்சிப் போலீசார் கைதுசெய்திருக்கிறார்கள். இவர் களில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் முகம்மது ஷபீர் வெளியே வருவதற்கு வசதியாக கலெக் டர் விஷ்ணுவின் அதிகாரிகள் குண்டாசில் அடைப்பதற்குரிய ஆவணங்களை வீக் செய்த காரணத்தால் அவர் மற்றவர்களைக் காட்டி லும் விரைவிலேயே வெளியே வந்திருக்கிறார்.
இந்த வழக்கு முறையாக விசாரிக்கப் படவில்லை, எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று மனுதாரர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட விசாரித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்தே சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி. வினோதினி டீமின் விசாரணை வேகமெடுத் திருக்கிறது. விசாரணைக்காக ஒருசில அதிகாரிகளுக்குச் சம்மன்களும் அனுப்பப் பட்டுள்ளனவாம். இந்த முறை கனிமவள உதவி இயக்குனர் சபியாவிற்கு மூன்று சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. நெல்லை என்.ஜி.ஓ. காலனியிலிருந்து சபியாவை சி.பி.சி.ஐ.டி. எஸ்.ஐ. காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் அழைத்து வந்திருக்கிறார்கள். விசாரணைக்குப் பின் சபியா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சூடு பிடிக்கும் மணல் கொள்ளை விசாரணையால் அதிகாரிகள் பலர் தவிப் பிலும் பதற்றத்திலுமிருக்கின்றனர்.
படங்கள்: ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/officer-arrest-t.jpg)