"எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பில்லை' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போகுமிடங்களிலெல்லாம் பேசிவரும் நிலையில், அது தனது முதல் பலியை வரவுவைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சேகர், தனது நிலத்தில் அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நில அளவைக்கல் நட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் 122 கிலோமீட்டர் தூரம் எட்டுவழிச்சாலை அமையவுள்ளது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்கள் கருத்துகளைக் கூற, 30 நாள் கெடு விதித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. காலக்கெடு முடிவடையும் நாளான ஜூலை 25-ஆம் தேதிவரை 870 பேர் எதிர்ப்புத் தெரிவித்து மனு தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8wayroaddeath

இந்நிலையில்தான், மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான சேகர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனந்தன், அன்பழகன், சங்கீதா என இவருக்கு மூன்று வாரிசுகள். மகன்கள் திருப்பூரில் வேலைபார்த்துவர, தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்துவந்தார். எட்டுவழிச்சாலைத் திட்டம் இவரது வீடு, கிணறோடு, நிலத்திலும் கணிசமான பகுதியைக் கேட்டதில் நடுங்கிப் போய்விட்டார்.

அதிகாரிகள் ஜூலை முதல் வாரத்தில் நிலத்தை அளந்து கற்கள் நட்டுச்சென்றது, அவரது மனதை மேலும் பாதித்திருக்கிறது. ஜூலை 29-ஆம் தேதி தனது நிலத்துக்குப் போனவர், வர தாமதமானதால், அவரைத் தேடி மனைவி தனலட்சுமி சென்றுள்ளார். வாயில் நுரைதள்ளி இறந்துகிடந்த சேகரையும், அருகேயிருந்த பூச்சிமருந்து டப்பாவையும்தான் அவர் பார்த்துள்ளார்.

Advertisment

8wayroaddeath

எட்டு வழிச்சாலை போராட்டக்குழு உறுப்பினர்களுள் ஒருவர், ""ஐந்து ஏக்கர் நிலத்துல 4 ஏக்கர் 20 சென்ட் போறத தாங்கிக்கிடறது கஷ்டம்தான். மிச்சமுள்ள நிலத்தை வெச்சு என்னத்த வெவசாயம் பண்றதுனு மனசொடிஞ்சு பேசினார். எங்களோட சேர்ந்து நிலம் கையகப்படுத்தறதுக்கு எதிரா போராடினார். நிலத்தை எடுக்கக்கூடாதுனு எதிர்ப்பு மனு தந்தபோது, அவரும் மனுதந்தார். அப்பவே விரக்தியாதான் இருந்தார். இப்படி முடிவெடுப்பார்னு எதிர்பார்க்கலை''’என்றார்.

"எட்டுவழிச் சாலையை எதிர்த்துதான் சேகர் இறந்தார்' என ஆவணங்களில் பதிவாகிவிடக்கூடாதென தீவிரமாக உள்ளது அரசு நிர்வாகம். மேலிட உத்தரவுப்படி குடும்பப் பிரச்சனையால் இறந்ததாக வழக்கை முடிக்க நினைக்கிறது காவல்துறை.

இப்படி விவசாயிகளின் வாழ்வாதாரம், உடைமைகளை அழிப்பதோடு சேர்த்து உயிர்ப்பலியையும் தொடங்கியிருக்கும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரி, திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி "என் நிலம் -என் உரிமை'’ என்கிற பெயரில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைப்பயணத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நடைப்பயணத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடையை மீறி ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில், தனது நிலம் பறிபோனதால் மனமுடைந்துபோய் தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகருக்காக, நினைவு அஞ்சலி செலுத்த அனைவரும் எழுந்து நின்றனர்.

8wayroaddeath

Advertisment

நடைப்பயண இயக்கத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் பேசி முடிக்க... தலைமை தாங்கிய கே.பாலகிருஷ்ணன், ""சேதுசமுத்திரத் திட்டம், காவிரி பாசனத் திட்டம், நீர்நிலைகளைத் தூர்வாருதல் என தமிழக வளர்ச்சிக்கு எதையும் செய்யாதவர்கள், 1 கி.மீ.க்கு ரூ.32 கோடி செலவாகும் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். இது தார்ச்சாலையா? தங்கச்சாலையா?''’எனப் பேசி முடித்தபடி நடைப்பயணத்தைத் தொடங்கிவைத்தார்.

மதியம் 12:30 மணியளவில் 2 ஆயிரம் பேர் அண்ணா சிலை பகுதியில் இருந்து நடக்கத் தொடங்கினர். நடைப்பயணம் தொடங்கிய இடத்தில் இருந்து 50 அடி தூரத்திலேயே எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் தடுப்புவேலிகளை அமைத்துக் காத்திருந்தனர். தடுப்புகளைத் தள்ளிவிட்டுவிட்டு விவசாயிகளும், தோழர்களும் முன்னேறவே, அவர்களை இழுத்துப் பிடித்து கைதுசெய்தது காவல்துறை.

கைதினைக் கண்டித்து சாலையில் அமர்ந்து சிலர் கோஷங்கள் எழுப்பியதையடுத்து, காவல்துறையினருக்கும், தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 600-க்கும் அதிகமானவர்களைக் கைது செய்தவர்கள், வேனில் ஏற்றிச்சென்று இரண்டு மண்டங்களில் அடைத்தனர். "மாலையில் விடுதலை செய்தால் மீண்டும் நடைப்பயணத்தை தொடருவோம்' என மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்கள் சொன்னதால், செய்வதறியாமல் குழம்பிப்போனது காவல்துறை.

இதற்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசத்தையும் சி.பி.எம். நிர்வாகிகள் தெரிவிக்காத நிலையில்... மேலிடத்து உத்தரவையடுத்து நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர்கள் மீண்டும் நடைப்பயணத்தைத் தொடங்கியதால், 16 பெண் நிர்வாகிகள் உட்பட முக்கிய நிர்வாகிகள் 89 பேரை மட்டும் தற்போது கைதுசெய்துள்ள காவல்துறை, மீண்டும் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. அவர்களை வெளியில் விட்டால் மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க திருவண்ணாமலை காவல்துறை முடிவுசெய்துள்ளது.

-து.ராஜா