தமிழகத்தில் கிட்டத்தட்ட 300 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னும் தாண்டவமாடுகிறது. அதிலும் முதலிடத்தில் இருப்பது திருவாரூர் மாவட்டம் என்கிற ஒரு புள்ளிவிவரம் அந்த மாவட்டக்காரர்களுக்கே அதிர்ச்சியளிக்கிறது. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் அமைப்பு ரீதியாக வேரூன்றியிருக்கும் இந்த மண்ணில் பட்டியலினத்தவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அதுவும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக! பொதுவாகவே கீழதஞ்சை பகுதிகளில் நிலச்சுவான்தார்கள், சிறு விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இந்த மூன்று பேருக்குமிடையே ஒருவித இறுக்கமும் இடை வெளியும் இருக்கும்.
அந்த இறுக்கம் தளராத நிலையில், கடந்த வாரம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நேர்ந்த கொடுமை, தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள திருவண்டுதுறையைச் சேர்ந்தவர் கொல்லிமலை. செங்கல் காளவாசல் நடத்தும் பட்டியலினத்தவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த முத்து என்கிற சக்திவேலுக்கு மிடையே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த பகை நெருப்பு இன்னும் கனன்று கொண்டிருப்பதால், கடந்த 28-ஆம் தேதி கொல்லிமலையின் வாயில் மனித மலத்தை திணிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது.
இந்த பகீர் சம்பவத்தைக் கேள்விப்பட்ட நாம் திருவண்டுதுறையில் இருக்கும் கொல்லிமலையைத் தேடிச் சென்றோம். விவசாய நிலங்கள், குளங்கள், ஆறுகள் நிறைந்த அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் செங்கொடிகளே பட்டொளி வீசிப் பறக்கின்றன. அய்யனார் கோயிலைக் கடந்து, கொல்லிமலையின் குடிசையை அடைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் பேச ஆரம்பித்தார் கொல்லிமலை.
""28-ஆம் தேதி ராத்திரி ரெண்டு மணிக்கு, என்னோட செங்கல் காள வாசலை படுதா போட்டு மூடப்போனேன். அந்த நேரத்துல மண்டபத்தடியில் நின்னுக்கிட்டிருந்த சக்திவேல் என்னைப் பார்த்து, "நீ உசுரோட திரும்பிப் போகமாட்டே'ன்னு சொன்னார். நான் அதை பெருசா எடுத்துக்காம, படுதா போட்டுட்டு திரும்பும் போது, சக்திவேலும் அவரோட மைத்துனர்களான ராஜேஷும் ராஜ்குமாரும், கையில் உருட்டுக் கட்டை யுடன் என்னைப் பார்த்து "நீ என்ன பெரிய இவனா'ன்னு பேசியபோதும், நான் விலகிப்போனேன். ஆனாலும் அவுங்க விடாம என் பின்னாலேயே வந்து கட்டையாலும் அரிவாளின் பின்பக்கத் தாலும் அடித்து, ரெண்டு கையையும் கட்டி, காலைப் பிடித்து தரதரன்னு இழுத்துட்டுப் போய், அவர்கள் வீட்டின் முன்பு என்னைக் கட்டி வைத்தார்கள்.
அப்போதும் ஆத்திரம் தீராமல் எனது வாயில் மலத்தை திணித்தும், சிறுநீரைப் பிடித்தும் மூஞ்சியில் ஊற்றினார்கள். எனக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதுங்க. என்னோட ரெண்டு பெண் குழந்தை களுக்காகத்தான் உயிரோட இருக்கேன்''’எனச் சொல்லி கண்ணீர்விட்டு அழுதார். அருகில் இருந்த கொல்லிமலையின் மனைவி சரிதா, ""அந்த மூணு பேரையும் பிடிச்சு கோட்டூர் போலீசில் ஒப்படைத் தோம். அதுல ஒருத்தரை தப்பிக்க விட்டுட்டாங்க. சக்திவேலுக்கு போலீசே உடந்தையா இருக்கு'' என் கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒ.செ. மாரிமுத்துவிடம் நாம் பேசிய போது, ‘""சம்பவத்தைக் கேள்விப்பட்ட தும் இடி இறங்கியதுபோல் இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை நினைச்சா எங்களுக்கே வருத்தமாத் தான் இருக்கு. கொல்லிமலைக்காக தொடர்ந்து போராடுவோம்''’என்றார் உறுதியுடன்.
""பெரியார் மண் என்கிறோம், தமிழ்த்தேசிய அரசியல், அம்பேத்கர் அரசியல் பேசுகிறோம். ஆனால் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை திருவாரூர் மாவட்ட காவல்துறையின் மோசமான போக்கு அப்பட்டமாகத் தெரிகிறது''’என்கிறார் இப்பிரச்சினைக்காக நீதிகோரி செயல் பட்டுவரும் எவிடென்ஸ் கதிர்.
குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலைத் தேடி குன்னியூருக்குச் சென்றபோது, அவர் வீட்டில் யாரும் இல்லை. சக்திவேலுக்கு மைத்துனர் உறவுமுறை கொண்ட ஒருவர் நம்மிடம், ""இது முழுக்க முழுக்க பொய் யான குற்றச்சாட்டு. கோயில் திடல் மண் அடிக்கிறதுல ரெண்டு பேருக்கும் பிரச்சனை இருக்கு. ராத்திரி நேரத்துல சக்திவேல் இடத்து வழியாக கொல்லிமலை மண் அடிக்கும் போது, தடுத்த பிரச்சனையில் கைகலப்பாயிருச்சு. மத்தபடி மலம் திணித்தது, சிறுநீர் ஊற்றியதுன்னு சொல்ற தெல்லாம் சுத்தப் பொய்''’என்றார். திருவண்டுதுறை யைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களிடம் நாம் பேசியபோது, “""இங்கிருக்கும் சிலரின் பிரதான தொழிலே ஆற்று மணல், கோயில் திடல் மணல் கடத்துவது தான். மனித உரிமை அமைப்பில் இருக் கும் கொல்லிமலைக்கும் அமைச்சர் ஒருவரின் அக்கா மகனுக்கு நிழலாக இருக்கும் சக்திவேலுக்கும் இடையே மணல் கடத்தலை போட்டுக் கொடுப்பதில்தான் பிரச்சினை. இதப்பத்தி போலீஸ் நன்றாக விசாரிக்க வேண்டும்''’என்கிறார்கள்.
""இரண்டுபேரை பிடித்திருக்கோம். கல்லூரி மாணவரான மற்றொருவர் சம்பவ இடத்தில் இருந்தாரா என் பதை விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்தது உண்மையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்கிறார் திருவாரூர் எஸ்.பி. துரை.
விசாரணை நேர்மையாக நடந் தால் உண்மை முழுமையாக வெளிப் படும். சாதி என்பதே சமுதாயத்தில் திணிக்கப்பட்ட அசிங்கம். இந்நிலையில் மனிதனின் வாயில் மலம் திணிப்பது என்பது தீண்டாமைக் கொடூரத்தின் உச்சம். அத்தகைய கொடூர நிகழ்வுகள் தடுக்கப்பட்டு -தண்டிக்கப்படாவிட் டால் சமுதாயமே கழிவறையாகிவிடும்.
-க.செல்வகுமார்