அவருக்கு ரெய்டு ஒன்றும் புதிதல்ல. அ.தி.முக. அமைச்சராக இருந்தபோதே அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக ஒரு லிஸ்ட்டே அவர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது. அதன்பிறகும் ரெய்டுகளை சந்தித்திருக்கிறார். சொந்த மாவட்டத்தில் உள்ள குவாரி உள்பட பல இடங்களிலும் ரெய்டு நடந்தபோதும் அலட்டிக் கொள்ளாதவர் அவர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மனித உடல்நலத்தைக் கெடுத்து, உயிரைக் குடிக்கும் குட்கா உள்ளிட்ட போதைத்தன்மை கொண்ட பாக்குகளை சட்டவிரோதமாக விற்பதற்கு துணை நின்றவர் என்ற வழக்கும் அவர் மீது உண்டு.
மத்திய அரசின் நிறுவனங்கள் ரெய்டு நடத்தியபோதும் அலட்டிக் கொள்ளாதவர். எதற்கு, எவ்வளவு, எங்கே, எப்படி தர வேண்டும் என்பதில் அவர் அத்துப்படி. இந்த ரெய்டும் அவரைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்றுதான் என்கிறார்கள் அவரை அறிந்த கட்சிக்காரர்கள்.
இந்த அளவுக்கு ஊழலில் கெத்து காட்டியவர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு பக்கபலமாக இருந்த சீனியர் அமைச்சர்களும், ‘இம்புட்டு சொத்தா?’ என வாய் பிளக்கும் அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர். ஊழலில் சம்பாதித்த சொத்துகளை, தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மட்டுமின்றி, தனது ஆதரவாளர்கள், வீட்டு வேலை ஆட்கள் பெயரிலும் வைத் திருக்கிறார். அவர் சொத்துகள் வாங்கிக் குவித்ததோடு 10 ஆண்டுகளில் அவரது ஆட்டமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில்தான் அக்டோபர் 18-ந் தேதி திங்கள்கிழமை காலை அவருக்கு ரெய்டு நாளாக விடிந்தது. ஏற்கனவே சில அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடந்ததால் அடுத்து தனது வீட்டிற்கும் வருவார்கள் என்பதை உணர்ந்த மாஜி ரெய்டு குறித்து தகவல்களை முன்னதாகவே திரட்டி வைத்துக்கொண்டார். முடிந்தவரை ஒரிஜினல் ஆவணங்களை லேப்டாப்களில் பதிவேற்றி மொத்த ஆவணங்களையும் மறைத்து வைத்துவிட்டு, எங்கே போனாலும் நடமாடும் சொத்து ஆவணப் பாதுகாப்பு பெட்டகமாக, அவரது உதவியாளர் களே கையில் எடுத்துச் செல்வார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் காலை 7 மணிக்கு மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். அப்போது அந்த வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா சின்னத்தம்பி, அம்மா அம்மாக்கண்ணு, அண்ணன் உதயகுமார், இவரது மனைவி சிவலதா ஆகியோர் இருந்தனர். அதே நேரத்தில் பண்ணை, மேட்டுச்சாலையில் உள்ள உதயகுமா ரின் கல்லூரியில் 12 இடங்கள் மற்றும் மாஜியின் ஆதரவாளர் களான அன்னவாசல் ஒன்றிய சேர்மன் ராமசாமியின் மதிய நல்லூர் வீடு, இலுப்பூர் மாஜி பேரூர் சேர்மன் குருபாபு, அன்னவாசல் நகர அவைத் தலைவர் மெய்வழிச்சாலை சாலைமதுரம், ஆகியோரது வீடுகளிலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருவேங்கைவாசல் கிராமத்தில் உள்ள மலையடி, கிரஷரிலும் சோதனை தொடங்கியது. கடந்த முறை இங்கே சோதனை நடத்திய போது பாறை உடைக்க அனுமதி பெற்ற அளவைவிட சுமார் 850 மடங்கு அதிகமாக பாறைகள் உடைக்கப்பட்டுள்ளதால், உடனே அதற்கான அபராதம் வசூலிக்குமாறு, அப்போதைய கோட்டாட்சியரிடம் சோதனை அதிகாரிகள் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் அபராதம் வசூலிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதையும் மீறி கிரஷர், ரெடிமிக்ஸ், எம்.சாண்ட் என அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. ந.செ. பாஸ்கர் வீடு, அவரது தம்பியும் விஜய பாஸ்கருக்கு ஜல்லிக் கட்டு காளைகள் வாங்கி பராமரிப்பு பயிற்சி கொடுப்பவருமான நத்தம்பண்ணை ஊ.ம. தலைவர் பாபு ஆகியோ ரின் வீடு மற்றும் மாஜியின் கல்வி நிறு வனங்கள், மாஜியின் உதவியாளராக இருந்து அனைத்தையும் கவனித் துக்கொண்ட அன்பானந்தம் வீட்டில் சோதனை யை தொடங்கிய சிலமணி நேரத்தில், அன்பானந்தத் தை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் மாஜி நகர்மன்றத் தலைவர் சேட்டு ஆகியோர் வீடுகளிலும் சோதனை தொடர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தளவு ரெய்டு பரபரப்பு இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல், சென்னையிலும் இருந்தது. சேத்துப்பட்டு, மந்தைவெளி என மாஜி அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. திருச்சி மட்டுமின்றி, கோவையிலும் ரெய்டு நடத்தப்பட்டது. கோவையில்தான் விஜயபாஸ்கரின் மாமனார் வீடு உள்ளது. எனவே, நகைகள்-சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை அங்கேதான் இருக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்தது.
மாஜியின் அனைத்து ஒப்பந்தங்களையும் எடுத்து செய்துவந்த சோத்துப்பாளை முருகேசன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதுடன், அவரிடம் மாஜிக்கு இதுவரை கொடுத்த கமிசன் தொகை எவ்வளவு? எந்த அடிப்படையில் அனைத்து பெரிய வேலைகளை எல்லாம் உங்களிடம் கொடுத்தார்கள் என்று கிடுக்குப்பிடி விசாரணை செய்தனர். அதே போல ஆலங்குடி சுபபாரதி கல்வி நிறுவனம், தனசேகர னுடன் இணைந்து புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்க மாஜி நிலம் வாங்கியுள்ளது தெரிய வந்ததால், தனசேகரன் வீடு, கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 24 இடங்களில் ரெய்டு நடந்தது.
இளம் வயதிலேயே எம்.எல்.ஏ, மந்திரி என அதிகாரமுள்ள வாய்ப்புகளை விஜயபாஸ்கருக்கு வழங்கியவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதா போலவே தெனாவெட்டாக ஊழல் செய்தவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குவாரிகளை அவரது அப்பா பெயரிலேயே வெளிப்படையாக ஏலம் எடுத்தார் விஜயபாஸ்கர். அவரது அப்பாவின் எளிமையான தோற்றத்தைப் பார்க்கும் யாருக்கும் சந்தேகமே வராது. ஆனால், அழுக்கு வேட்டி கட்டியபடி, கட்டுக்கட்டாகப் பணத்தை அலமாரியிலும், துணிகளுக்கு நடுவிலும் வைத்திருப்பது அவரது வழக்கம்.
அமைச்சராக இருந்தபோதும் விஜய பாஸ்கரே சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருந்ததுடன், அவை தொடர்பான வரவு செலவுகளிலும் கையெழுத்து போடுவார். மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் சொத்துகளை வாங்கத் தயங்கியதில்லை. மாமனார் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கிய நகைகளை கணக்கிடுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த போதும், விஜயபாஸ்கர் தனது சோர்ஸ்கள் மூலம், சட்டரீதியாக என்னென்ன செய்ய முடியும் என்பதில் மும்முரமாக இருந்தார்.
மந்திரியாக இருந்தபோது அவர் வீட்டில் ரெய்டு நடந்தது. அப்போது, தன் பிள்ளையைத் தூக்கியபடி ஓடிவந்து, மீடியாக்களிடம் சென்ட்டிமென்ட் காட்டியவர் விஜயபாஸ்கர். தேர்தல் நேரத்திலும் தன்னைத்தானே இயேசுவாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர். மக்களுக் காகவே உழைத்து நோய்வாய்ப்பட்டதாகத் தலைவி படத்தின் கற்பனைக் காட்சி போலவே விஜயபாஸ்கரும் சீன் போடுவதில் கில்லாடி. கடைசியாக, தேர்தல் பிரச்சாரத்தில் தன் மகளைப் பேச வைத்து அனுதாபம் தேடி ஓட்டு சேகரித்தவர்.
ஊழலைக் கெத்தாக செய்வது போலவே, அதில் வரும் பணத்தையும் கச்சிதமாக செலவு செய்வதில் விஜயபாஸ்கரின் கணக்கே தனி. அதனால்தான், தன்னுடைய தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அதற்காக அவர் தனது கட்சிக்காரர்களுக்கும் வாக்காளர் களுக்கும் செலவு செய்வதுடன், தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் தாராளமாக வழங்கக்கூடியவர். 2021 தேர்தலில் புதுக் கோட்டையின் மற்ற தொகுதிகளில் வென்ற தி.மு.க. கூட்டணி, விராலிமலையில் மட்டும் மீண்டும் தோற்றதில், மாஜியுடனான அன்டர்ஸ்டாண் டிங்கும் முக்கியமானது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகளின் தன்மை அறிந்த உடன்பிறப்புகள்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக வெளிநாடு பயணம் மேற்கொண்டபோது, உடன் பயணித்த அமைச்சர்களில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். அப்போதே பல சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் அவர் மீது வெளிப்பட்டன. அதுபோலவே, சுகாதாரத்துறையின் அனைத்து நியமனங்கள், டெண்டர்கள் எல்லாவற்றிலும் ஊழல் புகார்கள் எழுந்தன. அனைத்தையும் சமாளித்தார் விஜயபாஸ்கர். கொரோனா நோய்த்தொற்று உலகத்தையே அச்சுறுத்திய போது, அதையும் ஊழல் அமுதசுரபியாக மாற்றிக்கொண்ட இரண்டே பேர் விஜயபாஸ்கரும், வேலுமணியும்தான் என்கிறார்கள் முன்னாள் மாஜிகள்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அவருடைய அறிக்கைகளிலும் தேர்தல் பரப்புரைகளிலும் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி வரிசையில் ஊழல் புகாருக்கு உள்ளானவர் விஜயபாஸ்கர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அவர்களைப் போலவே புதுக்கோட்டையை சேர்ந்த விஜயபாஸ்கரும் தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், ஆட்சியை இழந்ததால் எப்போது வேண்டு மானாலும் நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனை விஜயபாஸ்கரும் எதிர்பார்த்தே இருந்தார்.
இவருக்கு முன்பாக, எம்.ஆர். விஜயபாஸ்கரிடமிருந்து ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. தி.மு.க. ஆட்சி அமைந்து, 5 மாதங்கள் கடந்த நிலையில் விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட ரெய்டு நடவடிக்கை எந்த வகையில் வலிமை யானதாக இருக்கும் என்கிற சந்தேகமும் உள்ளது. ஏற்கனவே, விஜயபாஸ்கர் பற்றிய ஊழல் டாக்குமெண்ட்டுகள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால், கைது நடவடிக்கை நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள் போலீஸ் உயரதிகாரிகள். அதற்கு முன்பாக, தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள தனக்குரிய வழிகளில் பயணிக்கத் தொடங்கி யிருக்கிறார் விஜயபாஸ்கர் என்கிறார்கள் அவரைப் பற்றிய முழு விபரமறிந்த அ.தி.மு.கவினர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அ.தி.மு.க பொன்விழாவில் கலந்து கொண்ட மூத்த கழக தொண்டர் ஒருவர்.. "10 வருசமா கொள்ளை கொள்ளையா அடிச்சீங்களே.. அந்த பணம் எல்லாம் எங்கேடா புதைச்சு வச்சிருக்கீங்க? 50-ஆவது ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒரு சீரியல் பல்பு கூட போட வக்கில்லையே'னு பேசினார். அந்த வயிற்றெரிச்சல்தான் இன்று இந்த ரெய்டு என்று சொன்னவர்கள், புதுக்கோட்டையில் ஒரு பிரபலமான நகைக்கடைக்கு ரூ.10 கோடி உதவி செய்வதாக சொல்லி கொடுத்துட்டு, திடீர்னு பணத்தை கேட்டு டார்ச்சர் செஞ்சதால், மொத்த நகைகளையும் வித்துட்டு கடனை கொடுத்த நகைக்கடையில், இப்ப கொஞ்ச நகைகளை வச்சு நொந்துகிட்டு இருக்காங்க. இதையும் கண்துடைப்பு சோதனையாகத்தான் பார்க்கிறோம் என்றனர்.
படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்