சென்னை டூ சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்ப்போரை மிரட்டும் வகையில் நடிகர் மன்சூர்அலிகான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை -தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலத்திற்கு 274 கிலோமீட்டர் தூரம் எட்டுவழிச் சாலை அமைக்க அரசு திட்டமிட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. ஆனால், இந்தச் சாலை பன்னாட்டு நிறுவனங்களுக்காக போடப்படுவதாகவும், இந்தச் சாலைக்காக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலமும், வனம் மற்றும் மலைப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மரங்களும் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 22 கிராமங்கள் வீடுகளுடன் காலியாகும் அபாயம் இருப்பதாகவும், தங்களுக்கு இருக்கிற சிறிதளவு நிலம்கூட இந்தத் திட்டத்திற்காக பறிபோகிறது என்றும் பாதிக்கப்படும் மக்கள் கதறுகிறார்கள். அந்த மக்களைத் திரட்டி போராடக்கூடும் என்று சந்தேகிக்கிற சமூக ஆர்வலர்களையும், அமைப்புகளின் தலைவர்களையும் அரசு ஏற்கெனவே கைதுசெய்து மிரட்டுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
மீடியாக்களிடம் மக்கள் உண்மையைச் சொல்வதை ஒடுக்க, அவர்களுடைய கிராமங்களைச் சேர்ந்த போராட்ட குணமுள்ள ஆட்களை இரவோடு இரவாக கைதுசெய்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மிரட்டியது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேறவுள்ள இந்தச் சாலைத் திட்டம், சாலையின் இருபுறமுள்ள விளைநிலங்களை விழுங்கிவிடும். வனம் மற்றும் மலைப்பகுதியில் புதைந்துள்ள கனிம வளங்கள் கொள்ளை போகும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஜிண்டால் என்கிற கார்ப்பரேட் நிறுவனத்துக்காகவே இந்தச் சாலை அமைக்கப்படுகிறது என்று பலரும் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் 5 மாவட்ட மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.
எதையும் காதில் போட மறுக்கிறது எடப்பாடி அரசு. எதிர்த்துப் போராடும் பெண்களைக்கூட கைதுசெய்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்த அளவெடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டனர். எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எடப்பாடியே உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் அழைப்பை ஏற்று, மே 3 ஆம் தேதி சேலம் சென்றார் நடிகர் மன்சூர்அலிகான். பின்னர் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் தும்பிப்பாடி கிராமத்துக்கு சென்றபோது மக்களுடைய குமுறலை கேட்டதும் ஆவேசப்பட்டார்.
""எட்டுவழிச் சாலைக்காக விளைநிலத்தை யார் தொட்டாலும் எட்டுப் பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்''’என்று தனக்கேயுரிய இயல்பான ஆவேசத்துடன் மன்சூர்அலிகான் பேசினார்.
இதற்காகத்தான் மன்சூர் கைதுசெய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் எடப்பாடி சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையே தகவலை கசியவிடுகிறது.
தூத்துக்குடியில் நடந்ததுபோல மிகப்பெரிய மக்கள் போராட்டம் உருவெடுத்துவிடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறார். அதற்காகவே எட்டுவழிச் சாலைக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஏதேனும் பழைய புகார்கள் இருந்தாலும் தோண்டியெடுத்து வழக்குப் பதியும்படி உத்தரவாம்.
அந்த வகையில்தான் நடிகர் மன்சூர்அலிகான் மே 3-ஆம் தேதி பேசியதற்காக பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. சனிக்கிழமை இரவு சேலத்திலிருந்து டி.எஸ்.பி. சங்கரநாராயணன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சென்னைக்குப் புறப்பட்டது. அப்போது, மன்சூரை கைது செய்யப் போவது யாருக்கும் தெரியாது. போலீஸாரின் போன்களைக் கூட வாங்கிக்கொண்டனர். வெளியில் தெரிந்தால் மற்ற அமைப்பினர் கூட்டம் சேர்த்துவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருந்தார் டி.எஸ்.பி.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மன்சூரின் வீட்டைத் தட்டியபோது உள்ளே இருந்த மொத்தக் குடும்பத்தினரும் பதறினர். மன்சூரைக் கைது செய்வதாக கூறியவுடன் குழந்தைகள் அழுதனர். அவர்களை அழக்கூடாது என்ற மன்சூர், ""நாட்டுக்காகத்தானே போகிறேன். விரைவில் வந்துவிடுவேன்'' என்று சமாதானப்படுத்தினார்.
ஆத்தூரில் டிபன் சாப்பிட்ட மன்சூர், அங்கு வந்த உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். “""10 கோடி ரூபாய்க்கு சாலையை போட்டுவிட்டு 20 ஆயிரம் கோடிக்கு சுங்கம் வசூலிப்பார்கள். இந்தத் திட்டத்தை எடப்பாடி அரசு கைவிட வேண்டும்''’என்றார்.
சென்னையிலிருந்து சேலம் மத்தியச்சிறையில் அடைக்கும்வரை வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள்.
மன்சூர் கைது குறித்து, பியூஷ் மனுஷிடம் கேட்டபோது, ""ஒரு நடிகர், சினிமாவில் பேசும் வசனம்போல உணர்ச்சிவசப்பட்டு பேசினால், அவர் அப்படி செய்வார் என்று அர்த்தம் ஆகிவிடாது. இதற்கெல்லாம் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. அவரை நாங்கள் ஜாமீனில் எடுப்போம்''’என்றார்.
வரம்புமீறிப் பேசிய எஸ்.வி.சேகரை நீதிமன்றம் கைதுசெய்ய உத்தரவிட்டும் அவர் சுதந்திரமாக போலீஸ் காவலோடு உலா வருகிறார். மன்சூரை மட்டும் அவசர அவசரமாக கைது செய்வது ஏன்?''’என்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் சரமாரியாக வினா எழுப்பினர். அதற்கு மழுப்பலாக பதிலளித்து சமாளித்தார் அமைச்சர்.
-இளையராஜா