சென்னை -தாம்பரத்தில் உள்ள எல்.ஜி. சர்வீஸ் சென்டரில் கஸ்டமர்கேர் பிரிவில் வேலை செய்பவர் சோபனா. அதே இடத்தில் கணவர் செந்தில்குமாரும் வேலை செய்கிறார். கடந்த நவ.26ஆம் தேதி கூடுவாஞ்சேரி சத்யசாய் நகரில் இருந்து அழைத்த பூர்ணிமா, தனது வீட்டிலிருக்கும் ஏ.சி. சர்வீஸிற்கு ஆள் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். அங்குதான் தொடங்கியது அந்தப் பிரச்சனை.

Advertisment

நடந்ததை விவரிக்கும் சோபனா, “""பூர்ணிமாவின் வீட்டு ஏ.சி.க்கு வாரண்டி முடிஞ்சதால, சர்வீஸ் ப்ளஸ் டேக்ஸ் சேர்த்து ரூ.590 கேட்டிருக்காரு டெக்னீஷியன். ஆனா, "கம்பெனிக்குத் தெரியாம மாட்டிக்கொடு, காசு தர்றேன்'னு சொல்லியிருக்காங்க. அவர் ஒத்துக்காம எனக்கு போன் போட்டுக் கொடுத்தாரு. என்கிட்ட, "வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் எனக்கு நெருங்குன சொந்தம். கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் எங்கப்பா'ன்னு சொன்னாங்க. நான் கேட்கல. உடனே பயங்கரமா திட்டிட்டு கட் பண்ணிட்டாங்க. நான் டெக்னீஷியனிடம் கஸ்டமர்கேர் கால்-ரெக்கார்ட் ஆகியிருக்கும், கம்பெனிக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்னு சொல்லி திரும்ப வரச்சொல்லிட்டேன்.

lockup

ஆனா, அதுக்குள்ள பூர்ணிமாவின் அப்பா டெக்னீஷியனோட டூல்ஸைப் பிடுங்கி வச்சிட்டு, "டேக்ஸ் ஏ.சி.க்கா? இல்லை பேசுன பொம்பளைக்கா'ன்னு கேவலமா கேட்டிருக்காரு. என்னன்னு விசாரிக்க கால் பண்ணப்போ, என்னையும் என் கணவரையும் மோசமா திட்டினதோட, என்ன செய்றேன்னு பாருன்னு சொல்லிட்டு கட் பண்ணாங்க.

நாங்களும் கோபத்துல பேசுனதுதானேன்னு விட்டுட்டோம். மறுநாள் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி போன் வந்தது. ஐ.ஜி.க்கு சொந்தக்காரப் பொண்ணு கேஸ் போட்டிருக்கிறதா சொன்னாங்க. பயந்துபோய் ஸ்டேஷனுக்குப் போனா.. எங்களைத் தனித்தனி லாக்கப்ல அடைச்சிட்டாங்க. என் கணவரை அடிக்கிறப்போ, கத்துனது மட்டும்தான் காதுல விழுந்துச்சு. காலைல இருந்து நிக்க வைச்சு கொச்சையான வார்த்தைகள்ல திட்டினாங்க. சாயங்காலம் வந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரெண்டு பேரையும் ரிமாண்ட் பண்ணச் சொல்லிட்டு போயிட்டாரு. நைட்டாகியும் சாப்பிடாம நின்னுட்டே இருந்ததால, மயங்கி விழுந்துட்டேன். ஹாஸ்பிடல் கூட்டிப்போயிட்டு மறுபடியும் ஸ்டேஷன் கொண்டுவந்து வர்ற போற போலீஸெல்லாம் அடிச்சாங்க. 28-ஆம் தேதி நைட்டு மறுபடியும் மயங்கி விழுந்தேன். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போலீஸ்கிட்ட வைச்சிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்னு சொல்லி ரிலீஸ் பண்ணாரு. ரெண்டு நாளைக்கு அப்புறம்தான் என் கணவரையே பாத்தேன்’’ என கதறியழுதார்.

""இனி எங்களை வேலையில வைச்சிக்கக் கூடாதுன்னு ஓனரை மிரட்டியதால, இப்போ வேலையிழந்து நிக்கிறோம். கூடுவாஞ்சேரி எஸ்.ஐ.ன்னு சொன்னவரு சேலையூர் சிறப்பு எஸ்.ஐ. முத்துராமலிங்கம்தான்''’என்றார் செந்தில்குமார்.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேச மறுத்துவிட்டார். டி.எஸ்.பி. வளவனிடம் கேட்டபோது, "அவங்க போலீஸைத் தப்பா பேசிய ஆடியோ இருக்கு'’என்றார். ""அவங்ககிட்ட இருந்த ஆடியோவை டெலிட் பண்ணிட்டாங்களாமே?'' என்று கேட்டதற்கு ‘"அதெல்லாம் தெரியாது'’ என கூறி கட் செய்துவிட்டார்.

-அரவிந்த்