ங்கள் பகுதியை புறக்கணிப்பது நியாயமா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சோளிங்கர் பகுதி மக்கள். பரப்பளவில் பெரியதாக இருந்த வேலூர் மாவட்டத்தைப் பிரிக்கக் காரணம், கிழக்கே அரக்கோணம், சோளிங்கர் தாலுகாக்களும், மேற்கே திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, கந்திலி தாலுகாக்களும் ஒன்றுக்கொன்று தூரமாக இருப்பதால் மாவட்ட உயரதிகாரிகள் செல்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் எந்தத் திட்டமும் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை எனப் பல ஆண்டுகளாக மக்கள் போராடியதால், புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப் பட்டபோது அதன் தலைநகராக அரக்கோணத்தை தேர்வு செய்யவேண்டும் என அரக்கோணம் பகுதி மக்கள் அறவழிப் போராட்டங்களை நடத்தினர். அரக்கோணம் நகரம், மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது, அதைத் தலை நகரமாக்கினால் மற்ற பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ராணிப்பேட்டை தலைநகரமாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்நிலையில் தான், எங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகின்றது என்கிற கோஷம் சோளிங்கரில் எழத் துவங்கியுள்ளது.

ss

Advertisment

அதுகுறித்து விசாரித்தபோது, "சோளிங்கர் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையின் அடிப்படையில், அரசு கலைக்கல்லூரி 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு 2,300 சேர்க்கை விண்ணப்பங்கள் வந்தன, ஆனால் 369 மாணவர்களே சேர்க்கப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 934 மாணவ -மாணவிகளே சேர்க்கப்பட்டுள்ளார்கள். இங்கு ஐந்து பாடப் பிரிவுகளே உள்ளன. கல்லூரிக்கான புதிய கட்டடங்கள் இல்லாமல் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது. கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் அடுத்த ஜம்புகுளத்தில் பூமிபூஜை போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கரிக்கல் பகுதியில்தான் கல்லூரி கட்டவேண்டும் என சிலர் முட்டுக்கட்டை போட்டதால் பூமி பூஜை நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே வாலாஜாவில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. அப்படியிருக்க, அதன் அருகிலேயே எதற்கு இன்னொரு அரசு கலைக்கல்லூரி?

கல்லூரி மட்டுமல்ல, மருத்துவத்திலும் எங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவமனை எனப் பெயர்பெற்ற சோளிங்கர் மருத்துவமனை, இப்போது அந்தத் தகுதியை இழந்துள்ளது. இங்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாகம் அவதிப்படுகிறது. 1988களில் திறக்கப்பட்ட மூன்றடுக்குக் கட்டிடம் பழுதடைந்திருப்பதால் அதனைப் பூட்டிவிட் டார்கள். விபத்து, பிரசவம், காய்ச்சல், காயம் என்றால் சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கேதான் வருகிறார்கள். இடப்பற்றாக்குறை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் வேலூர், திருவள்ளூர், சென்னைக்கு ரெபர் செய்து அனுப்புகிறார்கள். இது, இப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை தருகின்றது'' என்கிறார்கள்.

மருத்துவமனை நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கோபால், "ராணிப்பேட்டை மாவட்டத்தின் மையமாக இருப்பது சோளிங்கர் நகரம் தான். மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டையில் எல்லாவிதமான வசதிகளும் உள்ளன. ராணிப்பேட்டைக்கு அருகிலுள்ள நகரம் ஆற்காடு. இராணிப்பேட்டை, ஆற்காடு நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் பெரியளவில் இரண்டு தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (வாலாஜா) உள்ளன. 10 கி.மீ தொலைவில் புதிய பிரமாண்ட சி.எம்.சி மருத்துவமனை, 30 கி.மீ தொலைவில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி உட்பட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அரக்கோணம் பகுதி மக்களுக்கு 30 கி.மீ தொலைவில் திருவள்ளுர், சென்னை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் சோளிங்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால், 70 முதல் 80 கி.மீ பயணம் செய்ய வேண்டும். இதற்காகவே சோளிங்கர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டும் எனக் கேட்கிறோம். சோளிங்கர் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலமாக அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், திருத்தணி தாலுகாவிலுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்களின் மருத்துவப் பிரச்சனைகள் தீரும். மருத்துவக் கல்லூரி அமைக்கத் தேவையான இடம் சோளிங்கர் அருகே அரசுக்கு சொந்தமாக வுள்ளது, அதனால் அரசாங்கம் எப்போது மருத்துவக்கல்லூரி அறிவித்தாலும் அதனை சோளிங்கர் பகுதியில் அமைக்கவேண்டும்'' என்றார்.

ss

Advertisment

மாவட்டத் தலைநகராக அறிவிக்கும் முன்பே, இந்திய அளவில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் ராணிப்பேட்டை இடம்பெற்றது. சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் கெமிக்கல் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலை களால் காற்று, நிலத்தடி நீர் மற்றும் மண் போன்றவை மாசடைந்துள்ளது. சமீபத்தில் கெமிக்கல் நீரால் எங்கள் நிலங்கள் மலடாகிவிட்டன என கிராம மக்கள் போராட்டம் செய்தார்கள். அப்படிப்பட்ட பகுதிதான் மாவட்டத் தலை நகராக உள்ளது. மாசுபாட்டைக் குறைக்க மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கு அரசின் சிறப்பு திட்டங்களை கொண்டு செல்லலாம். இதன் மூலம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்கிற மற்றப்பகுதி மக்களின் ஏக்கம் குறையும் என்கிறார்கள்.