பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு எதிரான தீர்ப்பு, தமிழ்நாடு முழுக் கவே பலத்த அதிர்வலையை, ஓரளவு மன நிம்மதியை, நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. கடந்த இதழில் பொள்ளாச்சி மக்களின் மனநிலையை மட்டும் பதிவு செய்திருந்தோம். இந்த இதழில் தமிழகம் முழுவதும் நமிழக மக்களின் கருத்துக்களை இங்கே பதிவுசெய்துள்ளோம்.
சமூக செயற்பாட்டாளரும் பெண்களுக்கான பிரச் சனைகளைப் பேசிவருபவருமான மயிலாடுதுறை மகாலட்சுமி கூறுகையில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள், பல ஆதாரங்கள் இருந்தும் தப்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. அதே நேரம், பொள்ளாச்சி கொடுமைகள் குறித்து சாமானிய மக்களையும் பேச வைத்தது நக்கீரன் மட்டுமே. அந்த சம்பவத்திலுள்ள ஆதாரங்களை பட்டியல் போட்டு வீடியோக்களாக, துணிந்து மக்கள் மன்றத்தில் முன்வைத்தார் நக்கீரன் ஆசிரியர். நக்கீரன் போன்ற ஒருசில பத்திரிகைகள் இதனை துணிச்சலோடு வெளிக்கொண்டுவராமல் போயிருந்தால் இந்தத் தீர்ப்பு வேறு திசைக்கு மாறியிருக்கும். தி.மு.க. தலைவரும் இந்த விவகாரத்தை நாடு முழுவதும் போராட்டமாகப் பற்றவைத்தார். தூக்குத்தண்டனைக்கு நாம் எதிரான கருத்து கொண்டிருந்தாலும், இதுபோன்ற கயவர்களை தூக்கில் போட்டிருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் தவறு செய்யவே துணியமாட்டார்கள்'' என்றார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பூஜாஅம்பேத் கூறுகையில் "இந்தத் தீர்ப்பு குறைவுதான் என்றாலும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற ஜனநாயக நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் இனிவரும் காலங்களில் எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் நடமாட அரசு வழிவகை செய்யவேண்டும். இந்தத் தீர்ப்பை இன்று நாடே பேசுகிறது. ஆனால் சம்பவம் நடந்தபோது நக்கீரன் மட்டுமே தொடர்ந்து வெளியிட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகரின் மகன்தான் முக்கிய குற்றவாளி என நக்கீரன் பல ஆதாரங்களோடு வெளிகொண்டுவந்த போதிலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெண்கள், இது பொய்யான செய்தி என நக்கீரனுக்கு எதிராகத் தூற்றினர். இந்தத் தீர்ப்புக்கு பிறகு அந்த பெண்களே வரவேற்கிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு நன்றிகூறும் பெண் சமூகம், நக்கீரனுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்'' என்றார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா சிவதாஸ் கூறுகையில், "இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தைகள் சொல்லிப் பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி சித்ரவதை செய்து, கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு கும்பல். 'அண்ணா, பெல்ட்டால அடிக்காதீங்க!' என்று கதறிய பெண்ணின் வீடியோவை நக்கீரனில் பார்த்து கலங்கி நின்றோம், இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் துணிச்சலாகப் புகாரளித்ததில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதிலும் சில அதிகாரிகள் நேர்மை தவறி, போராடிய மக்களுக்கு எதிராகவும், நக்கீரனுக்கு எதிராகவும் நின்றனர். இந்த கொடுமைக்கு நீதி கேட்டு தமிழ்நாடே கொந்தளித் தது. தமிழகமே எதிர்பார்த்திருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நியாயத்திற் காக துணிந்து நின்றவர்களுக்கு ஊட்டமாக அமையும்'' என்றார்.
தக்கலையை சேர்ந்த கல்லூரி முதுகலை மாணவி வர்ஷா, "13ஆம் தேதி அந்தத் தீர்ப்பை அதிர்பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. இனிவரும் நாட்களில் அப்பாவி இளம்பெண்களை பாலியல் இச்சைக்கு பயன் படுத்த நினைப்போருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட எச்சரிக்கைதான் இந்தத் தீர்ப்பு'' என்றார்.
குமரி குடும்பத்தலைவி சந்திர கலா, "பொள்ளாச்சி சம்பவத்தை அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் காவல் துறை மூடிமறைக்கவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும் எவ்வளவோ முயற்சியெடுத்தும், விடாமல் துரத்தி, குற்றவாளிகளின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய பெருமை நக்கீரனுக்கு உண்டு. அப்பா விப் பெண்களை பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாக்கி, அதை வீடியோவாக்கி மிரட்டி திரும்பத் திரும்ப இரையாக்கியதை எந்தத் தாயால் பொறுத்துக்கொள்ள முடியும்? ஈனச்செயலில் ஈடுபட்ட இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச தண்டனையை வரவேற்கிறேன்'' என்றார்.
வேடசந்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன், "இந்த பாலியல் வழக்கில் ஒன்பது குற்றவாளி களுக்கும் சாகும்வரை தண்டனை பெற்றுத்தந்ததில் உறுதுணையாக இருந்த நக்கீரனுக்கும், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் உள்பட சில குற்றவாளிகள் தப்பியிருக்கிறார்கள். தமிழக அரசு மேல்முறையீடு செய்து இதுபோல் தண்டனையை அவன்களுக்கும் வாங்கிக்கொடுக்க முன்வர வேண்டும்'' என்றார்.
திண்டுக்கல்லை சேர்ந்த குடும்பத்தலைவி புஷ்பலதா, "இந்தத் தீர்ப்பு, தவறு செய்யும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும். என்னைப்போன்ற குடும்பத்தலைவிகள் எல்லோருமே வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளிடம், தவறான பாதைக்கு போய்விடக்கூடாது என்று சொல்லி வளர்த்து வருகிறோம். இனிவரும் காலங்களில் ஆண் பிள்ளைகளிடமும் தவறான பாதைக்கு போய்விடக்கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பாதை மாற மாட்டார்கள்'' என்றார்.
ராமநாதபுரம் சரண்யா, "நான் இந்த விசயத்த டிவில பாக்கும் போது எனக்கு உயிரே இல்லை. எப்படித்தான் அந்த பிள்ளைக இருந்துச்சுங்க, எப்படிலாம் அந்த பிள்ளைகள பண்ணியிருங்காங்க... பண்ண தப்புக்கு எல்லாம் நல்லபடியா எல்லாருக்குமே தண்டனை கிடைச் சுருச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்றார் மனநிறைவுடன்.
பரமக்குடி ராதா கூறுகையில், "இந்தத் தீர்ப்பை நான் முழுமையா வரவேற்கிறேன். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்கு போக டைம் கொடுத்திருக்காங்க. அது கொடுக்காம இருந்தா இன்னும் நல்லாருக்கும். குற்றவாளிகள் எந்த வழியிலும் தப்பிக்கக்கூடாது என்பதே என் எண்ணம்'' என்றார். காரைக்குடி பாகேஸ்வரி கூறுகை யில், "தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தான், இருந்தா லும் பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகுரலுக்கு இந்தத் தீர்ப்பு ஈடுசெய்ய முடியாது'' என்றார்.
சிவகங்கை பிரியா கூறுகையில், "என்னப் பொறுத்தவரை குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னாடியே தூக்குல போட்டு இருக் கணும். அப்ப தான் இது மாதிரி கொடுமைகள் வேற எங்கவுமே நடக்காது'' என்றார்.
புதுக்கோட்டை விஜய், "பெண்களிடம் நட்பு, காதல் என்று நம்ப வைத்து, நம்பி வந்த பெண்களை இப்படி சீரழித்தது மனிதர்களே இல்லை, மனித வடிவில் உலாவும் மிருகங்கள். இந்த மிருகங்களுக்கு அரபு நாடுகளைப்போல தயவு தாட்சண்யம் இன்றி பொது இடங்களில் வைத்து தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் அரசியல் பலத்தால் தப்பியிருப்பவர் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.
கொத்தமங்கலம் இந்திராணி, "பொள்ளாச்சி சம்பவம் மூடி மறைக்கப்பட்ட நிலையில், நக்கீரன் தோண்டியெடுத்து வீடியோவாக வெளிக்கொண்டு வந்தபோதுதான் வெளி உலகிற்கு தெரிந்தது. முடக்க நினைத்ததை முடக்க முடியாமல் போனதே முதல் வெற்றி. அந்த பெண்கள் துணிச்சலாக சாட்சியம் அளித்தது அடுத்த வெற்றி. இப்ப வந்திருக்கும் தீர்ப்பு 3வது வெற்றி.'' என்றார்.
"பொள்ளாச்சி என்று சொன்னாலே நக்கீரன் தான் கண்ணுக்கு தெரியுது. அந்த குற்றவாளிகளுக்கு நீதிபதி மூலமா நக்கீரன் தான் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறது'' என்றார் ஈரோடு சிவகிரியை சேர்ந்த சரவணன்.
பெருந்துறை, ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க தலைவர் சின்னசாமி, "அரசியல் செல்வாக்கு, அதிகாரம், பண பலம் இருந்தால் எப்பேர்ப்பட்ட கொடுமையும் செய்யலாம், யாரும் தட்டிக்கேட்க முடியாதுன்னு குற்றவாளிகளான அந்த ஓநாய்க் கூட்டம் நினைச்சிருந்தது. ஆனால் அநீதிகளைத் தட்டிக்கேட்க நான் இருக்கிறேன்டா என்று எப்போதும் முன்வரிசையில் உள்ள நக்கீரன் களத்தில் வந்தது. இடதுசாரி இயக்கங்கள், மாதர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பொள்ளாச்சி கொடுமைகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தின. எல்லாவற்றையும் நக்கீரன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய இந்தத் தீர்ப்பின் உழைப்பு நக்கீரனுக்கு உள்ளது'' என்றார்.
சங்கரன்கோவில் செந்தில், "அரசியல் சார்ந்தவங்களாயிருக்கட்டும், யாராக இருந்தாலும் இந்தத் தீர்ப்பால குற்றவாளிகளுக்கு ஒரு அச்சம் இருக்கும். தப்பிக்க முடியாதுன்ற பீதி வரும். இனிவரும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பாடம். சுய ஒழுக்கம் சம்பந்தமான கல்வி போதிப்பு அனைவருக்கும் அவசியமாப்படுது'' என்றார்.
பெருங்கோட்டூர் பொன்னுத்தாய், "ஒட்டுமொத் தப் பெண்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அற்புத மான தீர்ப்பு. ஒரு பெண்ணின் உடமைக்கு, உயிருக்கு, கற்பிற்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டபோது உடனடியாக சி.பி.ஐ. செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி சரியான தண்டனையை வாங்கிக்கொடுத் தது பாராட்டப்படவேண்டிய விஷயம்" என்றார்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி மாணவி பவானி, "பாவம் பச்சப் புள்ளைங்க. யார் தப்பு பண் ணாலும் இதே மாதிரி தண்டன தான் குடுக்கணும். இன்னைக்கி விட்டோம்னா மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ண வாய்ப்பாயிடும். இனிமே அது நடக்காது. எவனும் தப்புப் பண்ணமாட்டான். ஆயுள் தண்டனைன்றது சரியான தீர்ப்புதாங்க. இந்தத் தீர்ப்பால ஒரு பொண்ணப் பாத்தா யாருக்கும் தப்பா நெனைக்கவே தோணாது. ஒரு பயம் வரும்'' என்றார் அழுத்தமாக.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் மாயகிருஷ் ணன், "எல்லா ஆணும் ஒரு தாயின் வயிற்றில் பிறந் தவர்கள். அதோடு உடன்பிறந்த தங்கை, அத்தை, சித்தி எனப் பெண் உறவினர்களிடம் பேரியிருப்பார் கள். பெண்களைப் பார்க்கும்போது இந்த உறவுகளைப்போல தான் தெரியவேண்டும். அப்படியில்லாத கொடூரமானவர்களை மிருகங்கள் என்றே சொல்ல வேண்டும். குற்றவாளிகளுக்கு இன்னும் கூடுதலான தண்டனை வழங்க வேண்டும்'' என்கிறார்.
திருநாவலூர் அங்கம்மாள், "பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பள்ளிகளில் துவங்கி, உயர்கல்வி மற்றும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் கூலி வேலை செய்யும் பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிகள் எனப் பலருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்காத நாட் களே இல்லை என்ற அளவுக்கு குற்றங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எனவே இது போன்ற வழக்குகளில் விரைந்து விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் தாலுகா அளவிலுள்ள நீதிமன்றங்களில் மகிளா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இதன்மூலம் விரைவாக தீர்ப்பு கிடைக்கும்'' என்கிறார்.
சென்னை ராயப்பேட்டை நாராயணி கூறுகையில், "அவனுங்களை சும்மா விடக்கூடாது. மரண தண்டனை தான் கொடுக்கணும். இதை மூடிமறைக்க விடாமல் நக்கீரன் வெளிக் கொண்டுவந்து, தொடர்ந்து போராடி தண்டனையை பெற்றுத்தந்ததுக்கு நன்றி.'' என்றார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்திய தாஸ், "முதலில் நக்கீரன் பத்திரிகைக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப். உலகிற்கே இந்த செய்தியை கொண்டுசேர்த்தது நக்கீரன். ஏழை களுக்கு ஏதாவது தீங்கு நடந்தால், உங்களுக்கு நடக்கும் கொடுமை களைத் தட்டி கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று எங்களுடைய நம்பிக்கையை இத்தீர்ப்பு வலுப்படுத்தியுள்ளது'' என்றார்.
சேலம், டிரைடெக் ஸ்கில் அகாடமி நிர்வாக இயக்குநர் அமுதா, "'நண்பன் அல்லது காதலன் என்ற நம்பிக்கையில் உடன் வந்த இளம்பெண்களை, ஈவிரக்கமின்றி, மிருகத்தனமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பலவந்தமான உறவின்போது ஏற்படும் வலியை பெண்களால் மட்டும்தான் உணர முடியும். மிருகங்கள்கூட செய்யாத வகையில் பல பேர் கூட்டாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை கற்பனையிலும்கூட நினைக்க முடியாது. இந்த மிருகங்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை எல்லாம் போதாது. அரபு நாடுகளில் உள்ளதுபோல் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களை கல்லால் அடித்தே கொலை செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். கற்பு என்பது உடல் சார்ந்தது அல்ல என்ற புரிதல் பெண்ணுக்கு வர வேண்டும். இதுபோன்ற மிருகங்களிடம் சிக்கிக்கொள்ளும் பெண்கள், துணிச்சலாக சட்டத்தின் முன்பு குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார்.
சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப்பள் ளித் தலைமையாசிரியர் உதயகுமார் கூறுகையில், "நக்கீரன் வெளியிட்ட ஒரு வீடியோ தான் பாலியல் காமுகர்களுக்கு சாகும் வரை சிறைவாசம் என்ற வரலாற் றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பு கிடைக்க உதவியிருக்கிறது. இந்த காமுகர்கள் 9 பேரையும் ஒரே செல்லில் அடைப்பதற்கு பதிலாக தனித்தனியாக வெவ்வேறு சிறை யில், தனி அறையில் அடைக்க வேண்டும். யாரையும் அவர்கள் சந்தித்துப் பேசவும் அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் அவன்கள் தங்கள் குற்றத்தை உணருவான்கள்'' என்றார்.
புதுச்சேரி பெண்ணிய சமூக செயல்பாட்டாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், "அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அலட்சியத்திற்கு பொள்ளாச்சியே சாட்சியானது. 250-க்கும் மேற் பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, ஆதா ரங்களுடன் குற்றத்தை நிரூபித்து, 9 குற்றவாளி களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற் றுத் தந்துள்ளது தி.மு.க. ஆட்சி. இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, பெண் இனத்துக்கே கிடைத்த வெற்றி. இவ்வழக்கில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மற் றும் ‘நக்கீரன்’ பத்திரிகையின் அர்ப்பணிப்பு மிக்க புலனாய்வுப் பணிகள், இந்தத் தீர்ப்பை சாத்தியப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ‘நக்கீரன்’ பத்திரிகை இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை முதல் உண்மைகளை வெளிக்கொணர்ந்து, நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது பாராட்டத்தக்கது'' என்றார்.
பேச்சாளர் ஆரணி மாலா, "இத்தனை ஆண்டுக்கு பின்னர் இப் போது வந்துள்ள இந்தத் தீர்ப்பை பெண்கள் அனைவரும் வரவேற்கறாங்க. நீதிமன்றமும், அரசாங்கமும் சேர்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கு. எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும் நாட் டில் பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதை ஆணி அடித்தாற் போல் சொல்லியிருக்கிற தீர்ப்பாகத்தான் இதை நான் பார்க் கிறேன், அனைத்துப் பெண்களும் அப்படித்தான் பார்க்கறாங்க'' என்றார்.
திருவண்ணாமலை டீக்கடை உரிமையாளர் சதீஷ்பாபு, "பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை முதல் 5 ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனை தந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தமிழ்நாட்டில் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிறுமி முதல் பெரியவர்கள் வரை பாலியல் குற்றங்கள், வன்புணர்வுகள் அதிகளவில் நாட்டில் நடக்கிறது. தமிழ்நாட்டில் இனி இன்னொரு பொள் ளாச்சி சம்பவம் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கோட்டி என்கிற கோடீஸ்வரன், "இந்த வழக்கில் முதல்ல பாராட்ட வேண்டியது, பாதிக்கப்பட்ட பெண்கள் முன் வந்து அவங்களுக்கு நடந்த கொடுமைகளை சொன்னது. கடைசி வரைக்கும் அரசியல் மிரட்டல், ரவுடிகள் மிரட்டலைத் தாண்டி அவங்க நீதிமன்றத் தில் நின்றதுனால பல பெண்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அடுத்த படியா பொள்ளாச்சி வழக்குன்னு சொன்னாலே நக்கீரனோட உழைப்பு, நக்கீரனில் வெளியான செய்தியும், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் பேசிய வீடியோவும், காமக்கொடூரன்களுக்கு எதிராக மக்களை கொந்தளிக்கச் செய்தது. இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு அரசியல் பின்புலத்தில் தப்பிவிடலாம் என்று நினைத்த இந்த கொடூரர்களுக்கு நீதிமன்ற நீதிபதி சரியான நேரத்தில் நேர்மை யோடும், துணிவோடும் இந்தத் தீர்ப்பை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் கூற முடியாது, அதுக்கு மேல வார்த்தைகள் இருந்தால் சொல்லலாம்'' என்றார்.
பெரிய காஞ்சிபுரம், கே.யுவராஜ், "பொள்ளாச்சி வழக்கில் தொடர்ந்து போராடி பல தகவல்களை, பல உண்மைகளை வெளியே துணிவுடன் கொண்டுவந்த நக்கீரனுக்கு கோடான கோடி நன்றிகள். இந்த வழக்கை தொடர்ந்து நேர்மையான முறையில் விசாரித்து நீதியை நிலை நாட்டிய நீதிபதி அம்மாவுக்கு வாழ்த்துகள்'' என்றார்.
மதுரை திருப்பாலை மாணிக்க வள்ளி, "தீர்ப்பு வர்ற வரைக்கும் நம்பிக்கையில்லாமத்தான் இருந்துச்சு. இப்படி ஒரு தண்ட னை கொடுத்ததை வரவேற் கிறேன். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுல, மக்கள் எதிர்பார்த்த ஒரு தண்டனை யைத்தான் நீதிமன்றம் கொடுத்திருக்கு. இதோட இல்லாம, அந்தக் குடும் பத்தையே தள்ளிவச்சிருக்கணும். அவங்க ளோட பாஸ்போர்ட், ஆதார் எல்லாத்தயும் பறிச்சிருக்கணும்.. அப்பத் தான் என்னைப் போன்ற பெண்களோட மனசு ஆறும்'' என்றார்.
மதுரை வடக்கு மாசி வீதி பாலகுமார், "இந்தத் தீர்ப்பை ரொம்ப பாராட்டணும். மொதல்ல நக்கீரனுக்குத் தான் நன்றி சொல்லணும். எந்த ஆட்சி அதிகாரத்துக்கும் பயப்படாம, துணிச்ச லாக எதிர்த்துப் போராடிய நக்கீரனுக்கு என்னைப் போன்ற பெண்ணைப் பெத்த வங்க சார்பில் நன்றியை தெரிவிச்சிக் கிறேன்" என்றார்.
மதுரை ஊமச்சிகுளம் ராமகிருஷ் ணன், "சாகும்வரை சிறைத்தண்டனைங் கிறது, இனிவரும் காலங்கள்ல, இப்படி ஒரு கேவலமான, படுபாதகச் செயலை செய்ய யாருக்கும் பயம் வரும். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்த நீதிபதிக்கு நன்றி. இந்த மாதிரி கிரிமினல்களோட தோலை உரிச்சு, பொதுவெளில அம் பலப்படுத்தி, அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அசைஞ்சு கொடுக்காம தொடர்ந்து செய்தி வெளி யிட்ட நக்கீரனுக்கும், அதன் துணிச்சலுக்கும் சாதாரண குடிமகனாகிய என் போன்றவர்கள் சார்பில் ஒரு ராயல் சல்யூட்'' என்றார்.
திருச்சி சமயபுரம் சிலம்பு, "பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் மிகவும் தாமதமாக கிடைத்தது வருத்தம் அளிக்கிறது. இந்த சமுதாயம் அதை மறந்துபோய்விட்டது. இந்த தீர்ப்பு அந்த கொடூரத்தை மீண்டும் நினைவுபடுத்தியதாக தான் நான் பார்க்கிறேன்'' என்றார்.
ஸ்ரீரங்கம் சிவா, "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், குற்றவாளி களுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை என்பது வரவேற்ககூடியது தான். நீதிமன்றம் மரண தண்டனை வழங்காமல் அவர்களுக்கு உயிருடன் வாழ்ந்து கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்பது வரவேற்கக் கூடிய தண்டனை தான்'' என்றார்.
திருச்சி கல்லணை பிரான்சிஸ், "பொள்ளாச்சி போன்று இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவற்றை நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிட வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற 9 பேருக்கும் மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். குற்றங்களுக்கான தண்டனை உடனடியாக கிடைத்துவிட்டால் குற்றம் என்பது குறையும் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் பலவற்றை நீர்த்துப்போக செய்கிறது'' என்றார்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு, தமிழக மக்களிடையே ஒரு நிம்மதியை அளித்தாலும், இன்னும் கடுமையாக தண்டிக்க முடியாதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியிருப்பதை பார்க்க முடிகிறது. இவ்விவகாரத்தில் நக்கீரனின் செயல்பாட்டைப் பாராட்டிய மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு, அநீதிக்கு எதிரான நக்கீரனின் பயணம் தொடருமென்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறது.
-நமது நிருபர்கள்