"அங்கே ஏதாவது தப்பு செய்திருப்ப. அதனால்தான் இங்க வந்து அவஸ்தைப்படுற...'' என புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்த போலீஸாரைப் பார்த்த மாத்திரத்திலேயே கூறிவிடுவார்கள் தென்மாவட்ட போலீஸார்கள். அது இப்பொழுதும் உண்மையே என ஓபன் மைக்கில் எச்சரிக்கை விடுத்துள்ளார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி.

13-09-2021 அன்று நடந்த காவல் துறை மானியக் கோரிக்கையின் போது, காவல்துறையின் நிர்வாக வசதிக்காக வும், பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக எளிதில் தீர்க்கப்பட ஏதுவாகவும், புதிதாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன்படி சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்கும். இதற்கு கமிஷனராக, காவல்துறை துணைத்தலைவர் ரவியும் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதமான நிலையில், முறைப்படி கடந்த மாதம் ஜனவரி 1-ம் தேதியன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதல்வர்.

ravi

Advertisment

இந்நிலையில், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பெண்ணொருவர் திங்கட்கிழமையன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று, "கமிஷனரைப் பார்க்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்'' என அடம்பிடித்த வேளையில், இதனைக் கவனித்த கமிஷனர் ரவியோ அந்த பெண்மணியை வரவழைத்து ஆசுவாசப் படுத்தி பிரச்சினையை கேட்டறிந்தவர், கோபமாகி ஓபன் மைக்கில், "ஒரு அம்மா இப்ப வரைக்கும் இங்க நாலாவது தடவை வந்துட்டாங்க. அந்தம்மா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு முறை புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.? பள்ளிக்கரணை ஸ்டேஷனில் என்ன வேலை பார்க்கிறீங்க.?! பள்ளிக்கரணை போலீ சாரை கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி இதுபோன்ற மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விடுவேன். இதனையும் தாண்டி கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை தங்கள் பணியைத் தவிர வேறு ஏதேனும் வேலையைச் செய்திருந்தால் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக தனுஷ்கோடிக்கு மாற்றிடுவேன். அங்க கடலலையைத்தான் எண்ணவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதுக்காக போலீசாக இருக்கிறீர்கள்.? காவலர்கள் பொது மக்கள் சேவகர்கள் என்று கூறுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் பணியை நீங்கள் ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? மக்களை துன்புறுத்தும் நோக்கத்தில்தான் பணிக்கு சேர்ந்தீர்களா?'' என கேள்வி கேட்க... கேட்க அதற்கு எதிர்முனையில் பதில் வந்துவிடாமல், "சைபர் கிரைம் தொடர் பான புகார்கள் வந்தால் உடனடியாக புகாரை பெற்று சி.எஸ்.ஆர். ரசீது கொடுக்கவேண்டும். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்தால் அதனை தலைமையகத்திற்கு அனுப்பக்கூடாது, சி.எஸ்.ஆர். பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த வழக்கை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஆனால் புகாரை பெறாம லேயே இதுபோன்று திருப்பி அனுப்புவது மிகவும் தவறான செயல். வேதனையோடு வரக் கூடிய மக்களிடம் புகாரைப் பெற்று அவர்களை மனநிறைவோடு அனுப்ப வேண்டும். பொது மக்களை புகாரை வாங்காமல் அலைக் கழிக்கக்கூடாது. நான் டெரரானவன்... இருந்தாலும் நல்லவன்'' என அவர் தொடர்ந்து காவலர்களை எச்சரித்தது ஆடியோவாக வலம் வர... பீதியில் உறைந்துள்ளனர் தாம்பரம் மாநகரப் போலீஸார்.

"அந்த பெண்மணிக்கும், அவருடைய கணவருக்கும் பிரச்சினை. அடிதடியாக மாறியுள்ளது. இதில் அந்த பெண்மணி திடுமென குரோம்பேட்டை மருத்துவ மனையில் அட்மிட் ஆகி புகாரைக் கொடுத்தாங்க. குடும்ப பிரச்சினை என்பதால் அதனை சீரியஸாகக் கண்டுக்கலை பள்ளிக்கரணை போலீஸார். வேற வழியில்லாமல் கமிஷனர் ஆபீஸில் உட்கார்ந்து கொண்டு தர்ணா செய்ததால்... கடுப்பாகி எங்களைக் காய்ச்சிப்புட்டார்'' என்கிறார் தாம்பரம் மாநகரப் போலீஸார் ஒருவர்.