"இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில்தான், டிச. 16-ஆம் தேதி, சேலம் மாவட்டம் பவளத்தானூரில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் இளைஞர் ஜனா, சேலம் மாவட்ட ஆட்சியர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு நூதனமான ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினார். அதில், "1990-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டபோது, என் பெற்றோர் அகதியாக இந்தியா வந்தனர். இங்கு வந்த பிறகு 1991-ல்தான் நான் பிறந்தேன். இங்குதான் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன்.

vv

கடந்த 29 ஆண்டுகளாக இந்திய மண்ணில் வசித்தும் நாங்கள் அகதியாகவே வாழ்கிறோம். இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. அடுத்து வரும் என் சந்ததியையும் அகதியாக வாழ வைக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் என்னை கருணைக் கொலை செய்திட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கோரிக்கை மனுவால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த இளைஞரை நாம் சந்திக்க தொடர்பு கொண்டபோது, ""சார், என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். வீட்டில் என் பெற்றோர் எல்லாரும் பயப்படுகிறார்கள். மனு கொடுத்துவிட்டு வந்த பிறகு முகாமில் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நான் மனுவில் என்ன கொடுத்திருக்கிறேனோ அதை போட்டுக்கொள்ளுங்கள்'' என்று புலம்பினார்.

Advertisment

vv

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கருத்தறிய டிச. 19-ஆம் தேதி மாலையில் குறுக்குப்பட்டி முகாமிற்குச் சென்றோம். முகாமிற்குள் யார் வந்தாலும் தகவல் சொல்லுமாறு, கியூ பிரிவு காவல்துறையினர், ஈழத்தமிழர்களையும் உருட்டி மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

நாம் சென்ற பத்தாவது நிமிடத்தில் இருந்து அடுத்தடுத்து கியூ பிரிவு காவல்துறையிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. "எதற்காக வந்தீர்கள்? உங்களுடன் யார் யார் வந்திருக்கிறார்கள்?' என்றெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார் க்யூ பிரிவு காவலர் முருகேசன்.

முகாமில் நீண்ட காலமாக வசிக்கும் சிற்பி மோதிலால் (62) நம்மிடம் பேசினார்.

Advertisment

""அண்மையில், இலங்கையில் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராகியிருக்கிறார். அவர் அதிபர் ஆனது, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில், இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவது என்பது என்றைக்கு இருந்தாலும் ஆபத்தானதுதான்.

இந்த அகதி முகாமிற்கு வந்த பிறகு நாங்களும் பேரன், பேத்திகளை எடுத்து விட்டோம். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சில நலத்திட்ட உதவிகள் எங்களுக்கும் கிடைக்கிறது.

என்றாலும்கூட, எங்கே சென்றாலும் எங்களை அகதியாகத்தான் பார்க்கிறார்கள். இந்த நாட்டில் நாங்கள் எங்கேயும் சொத்துகளை வாங்க முடியாது. ஒரு வண்டி வாங்க வேண்டும் என்றாலும்கூட, இந்தியாவில் உள்ள யாராவது ஒருவரின் சிபாரிசு இருந்தால்தான் தருகிறார்கள்.

எந்தவித பிடிப்பும் இல்லாமல்தான் இருக்கிறோம். இங்கேயே வாழ விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும். இரட்டைக் குடியுரிமை என்பதெல்லாம் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது போன்றது. அது தேவையில்லை. ஒற்றைக் குடியுரிமைதான் தீர்வாக இருக்கும்,'' என்கிறார் சிற்பி மோதிலால்.

ஸ்ரீதரன் (55) என்பவர், ""நான் இலங்கையில் திரிகோணமலையில் பிரபாகரனின் படைப்பிரிவில் போட் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தேன். அதனால் இந்தியாவுக்கும் சிலோனுக்கும் அடிக்கடி வந்து செல்வேன். 1985-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துவிட்டேன். இங்கே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிலோனுக்கு அழைத்துச்சென்று கல்யாணமும் செய்துகிட்டு, மீண்டும் இங்கேயே வந்துவிட்டோம். இந்த மண்ணில்தான் எனக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

இப்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் இங்குள்ள ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டுக்குச் செல்வது சரியாக இருக்காது.

காணிகள், வீடு வாசல், சொந்தபந்தங்கள் இருப்பவர்கள் வேண்டுமானால் ஈழத்துக்கு திரும்பலாம். என்னைப் போன்ற சாதாரணமானவர்கள். இலங்கைக்கு சென்று மீன் பிடித்து வாழ்வது என்பது இனியும் சாத்தியம் இல்லை.

இப்போதுள்ள நிலையில் இலங்கையில் ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் இல்லாமல் வாழ முடியாது. அதற்கு இங்கேயே ஏதாவது பெயிண்ட் அடிக்கும் வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வோம். முடியும் மட்டும் வாழறோம். முடியாதபோது பிள்ளைகள் கஞ்சி ஊத்தட்டும். அதுவும் இல்லாட்டி சாவறோம். எங்களை சொந்த நாட்டுக்கு துரத்தியடிக்காமல், இந்திய அரசாங்கமே குடியுரிமை வழங்க வேண்டும். அதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்'' என்கிறார்.

""நேபாளம், பர்மா போன்ற அண்டை நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அப்படியெனில் சிலோனில் இருந்து வந்த தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா?'' என்று கேள்வி எழுப்புகிறார் கிருஷ்ணன்.

அவர் மேலும் கூறுகையில், ""புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு யு.எஸ்., கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குடியுரிமை வழங்கி இருக்கும்போது இந்திய அரசு மட்டும் எங்களை புறக்கணித்து இருப்பது சரியல்ல.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும், முஸ்லிம்களையும் மட்டும் புறக்கணித்து இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இன்றைக்கும் பெட்ரோல், டீசலுக்கு அரபு நாடுகளைத்தான் நம்பியிருக்கிறது இந்தியா. முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எரிபொருள் அனுப்ப முடியாது என்று கூறிவிட்டால் நாடு தாங்குமா? பிஸினஸும் பாதிக்கும். இப்படி பல அம்சங்களையும் இந்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள தவறிவிட்டது. இங்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒற்றை அல்லது இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் நீண்டகால எதிர்பார்ப்பு'' என்கிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக அரங்கில் உரக்கப் பேசும் பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவில் வசிக்கும் எங்களுக்கு குடியுரிமை மறுப்பதேன்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் ஈழத்தமிழர்கள்.

-இளையராஜா