தேர்தலுக்கு முன்பாக ஒரு மாநாடு நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவது தி.மு.கவின் வழக்கம். அதிலும், திருச்சியில் மாநாடு என்றால் அரசியலில் திருப்புமுனை என்ற நம்பிக்கையும் உடன்பிறப்புகளுக்கு உண்டு. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 11வது மாநில மாநாட்டிற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகனூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாநாட்டுக்கான மைதானம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

dmk-meet

அந்தத் திடலை சுத்தப்படுத்தும் பணிகளை கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார் கட்சியின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு. அன்றே மாநாட்டுத் திடலைச் சுற்றி தி.மு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டன. மாநாட்டு அரங்கில் 10 லட்சம் பேர்வரை உட்காரமுடியும் என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

தினமும் காலை 7 மணிக்கு ஸ்பாட்டில் ஆஜராகிவிடும் நேரு, பகல் முழுக்க அங்கேயே இருந்து அனைத்துப் பணிகளையும் மேற்பார்வை செய்கிறாராம். மதிய உணவும் அவருக்கு அங்கேதானாம். மாநாட்டுக்காக ஏறத்தாழ 5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படுகிறதாம்.

Advertisment

பின்னணியில் மெகா சைஸ் டிஜிட்டல் ஸ்கிரீனுடன், எந்தப் பக்கமும் தடுப்புகள் இல்லாத அளவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட இருக்கிறதாம். அங்கங்கே லைவ் ரிலே வசதியுடன் கூடிய ஹைடெக் மாநாடாக இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுவதோடு, அவர்கள் மாவட்ட, பூத் வாரியாக அமரும் வகையில் இடம் ஒதுக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்திலேயே, 200 சைவ, அசைவ உணவகங்களும் இருக்கும். புத்தகம், கொடி, பேட்ஜ் விற்பனை கடைகளும் இருக்கும்.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வசதியாக, சில கல்லூரி மைதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, பெரியார் திடல், ஜி.கே.தொழிற்பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் பார்க்கிங் வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

இந்த 11வது மாநில மாநாடு ஒரே ஒரு நாள் மட்டும் நடக்கும் எனவும், காலை சுமார் 10 மணிக்கு துவங்கவிருக்கும் அதில், நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும், மதியத்திற்கு மேல் நடக்கும் நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சிகளை ஒருங் கிணைக்கும் ஐ பேக் டீமிடம் கடந்த 2-ந் தேதி மாநாட்டு மைதானம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்தத் திடலையே ஹைடெக் வணிக வளாகம் போல் அமைக்க இருக்கிறார்களாம். மாநாடு நடைபெறும் நாளில், தேர்தல் ஆணையத்திடமிருந்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Advertisment