ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்துக்கு எதிரே பிரமாண்டமாகக் கட்டி வந்த புதிய பங்களாவில் குடியேறுகிறார் சசிகலா. இதற்காக, புதிய பங்களாவில் கிரஹபிரவேசமும், பசு தானமும் நடந்து முடிந்திருக்கிறது. புதிய பங்களாவில் தனது அரசியலின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க சசிகலா சபதம் செய்திருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர் அவரது தரப்பினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi-house.jpg)
சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட் டார் சசிகலா. சிறையில் அவர் இருந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அப்போதைய எடப்பாடி அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. அதே சமயம், ஜெய லலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் அத்தை சொத்துக்களுக்கு உரிமை கோரி நீதி மன்றத்துக்குச் சென்றனர்.
ஜெயலலிதாவுடன் சுமார் 35 ஆண்டுகாலம் அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே வாழ்ந்திருந்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அந்த இல்லத்திலேயே தங்கி அரசியல் செய்ய ஆசைப்பட்டிருந்தார். ஆனால், வாரிசுகள் உரிமைகோரியதால், ஜெயலலிதாவின் பங்களா தனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து, அதே போயஸ் கார்டனில் குடியேற விரும்பி ஜெயலலிதாவுடன் வாழ்ந்த இல்லத்துக்கு எதிரே புதிய பங்களாவை கட்டத்தொடங்கினார் சசிகலா.
சிறையில் சசிகலா இருக்க, இந்த புதிய பங்களாவின் கட்டுமானப் பணிகளை சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் (இளவரசியின் மகன்) மற்றும் அவ ரது உறவினர் கார்த்திகேயன் ஆகியோர் கவனித்து வந்தனர். ஆனால், வரி ஏய்ப்பு விவகா ரங்களால் புதிய பங்களாவை கடந்த 2020, ஆகஸ்ட்டில் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை. தற்போது அந்த பங்களாவில் தான் குடியேறுகிறார் சசிகலா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi-house1.jpg)
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை (2016) தொடர்ந்து தம்மிடமிருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன் படுத்தி சுமார் 1,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பினாமிகளின் பெயரில் சசிகலா வாங்கிக் குவித்திருக்கிறார் என வருமானவரித்துறைக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சீக்ரெட் இன்வெஸ்டிகேஷனில், போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சசிகலா வின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதர வாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள் ளிட்ட 187 இடங்களில் கடந்த 2017-ல் அதி ரடி ரெய்டு நடத்தியது வருமானவரித்துறை.
இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத 5 கோடியே 50 லட்சம் ரூபாய் 1,500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 15 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 60-க்கும் மேற்பட்ட போலி கம்பெனிகள் நடத்தி வருவதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு நடத்தப்பட்டிருப்பதும் தெரிந்தது.
அதனடிப்படையில் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் என சசிகலாவுடன் தொடர்பிலிருந்த பலரிடமும் தீவிர விசாரணைகள் நடந்தன. இதில், இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியா, வழக்கறிஞர் நாமக்கல் செந்தில் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல வில்லங்கங்கள் தெரிய வந்தன. இதனையடுத்து, பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால், பினாமி சொத்து பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi-house2.jpg)
முதல்கட்டமாக, சென்னை பெரம்பூரில் உள்ள வணிகவளாகம், மதுரையில் உள்ள வணிக வளாகம், கோவையிலுள்ள தனியார் காற்றாலை மற்றும் பேப்பர் மில், சென்னையில் மென்பொருள் நிறுவனம், புதுச்சேரியிலுள்ள ஒரு பீச் ரெசார்ட், பிரபல நகைக்கடை உள்பட 7 நிறுவனங்களுக்கு சொந்தமான 1,500 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
இரண்டாம் கட்டமாக, போயஸ்கார்டனில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புதிய பங்களா (தற்போது கிரஹபிரவேசம் செய்துள்ள பங்களா), கொடநாடு எஸ்டேட், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பையனூர் பங்களா மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் ஆகியவைகளும் முடக்கப்பட்டன.
மூன்றாம் கட்டமாக, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனம் சசிகலாவின் பினாமியாக இருப்பது தெரியவந்ததும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டன. சொத்துக்கள் அடங்கியுள்ள சார்-பதி வாளர் அலுவலகங்களுக்கு, இந்த சொத்துக்களை விற் கவோ வாங்கவோ அனுமதிக்கக்கூடாது என்கிற உத்தர வும் வருமானவரித்துறையினரால் பிறப்பிக்கப்பட்டது.
ஆக, பினாமி சொத்து பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சசிகலாவின் 2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமானவரித்துறை. இதற்காக அவருக்கு சுமார் 480 கோடி ரூபாய் அபராதத் தொகையும் விதிக்கப் பட்டது''‘என்கிறார்கள் வருமானவரித் துறையினர்.
சசிகலா சிறையில் இருந்ததால் இந்த அபராத தொகையை கட்ட முடியவில்லை. சொத்துக்கள் முடக்கப்பட்டதால் அவைகளை விற்கவும் முடியவில்லை. இந்த நிலையில், போயஸ்கார்டனில் அவர் கட்டிவந்த புதிய பங்களாவை வருமானவரித்துறை முடக்கினாலும் கட்டிடப்பணிகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், அந்த பங்களாவை கட்டி முடிக்கும் பணிகளை துரிதப்படுத்தி வந்தார் விவேக்.
சிறையிலிருந்து விடுதலையாகி 2021, ஜனவரியில் சசிகலாவும் இளவரசியும் வெளியே வந்தனர். புதிய பங்களா முடக்கப்பட்டிருந்ததால் அதில் அவரால் குடியேற முடியாமல் தி.நகரிலுள்ள இளவரசி வீட்டில் தங்கினார் சசிகலா. இந்த நிலையில்தான், முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்க திவாகரன், தினகரன் உள்ளிட்ட ரத்த சொந்த உறவுகளிடம் பணம் கேட்டார் சசிகலா. 480 கோடி ரூபாயும் கருப்பு பணமாக இல்லாமல் வெள்ளையில் தேவைப்படுவதால் பணத்தை புரட்ட முடியவில்லை; உறவுகளும் கைவிட்டன. இப்படிப்பட்ட சூழலில்தான், விவேக்கின் மேற்பார்வையில் இருந்த ஜாஸ் சினிமா நிறுவனத்தை விற்கும் முடிவு எடுக்கப்பட்டு அந்த சொத்தினை விற்றார் சசி.
இதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து அபராதத் தொகை 480 கோடி ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு செலுத்தியிருக்கிறார் சசிகலா. இதனையடுத்து போயஸ்கார்டனின் புதிய பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட முடக்கப்பட்ட முக்கிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ஜனவரி 24-ந்தேதி இந்த புதிய பங்களாவில் பால் காய்ச்சி, பசு தானம் செய்து கிரஹபிரவேசம் செய்திருக்கிறார் சசிகலா.
இந்த நிகழ்ச்சிக்கு இளவரசி, விவேக் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். திவாகரன் மற்றும் தினகரன் குடும்பத் தினரை சசிகலா அழைக்கவில்லை.
புதிய பங்களாவின் மொத்த பரப்பளவு 22,460 சதுர அடி. தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று அடுக்குகளாக இந்த பங்களா கட்டப்பட்டுள் ளது. நிலத்தின் மதிப்பு மட்டுமே 100 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். கட்டுமான செலவுகளும் 20 கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.
பங்களாவின் கீழ்த்தளத்தில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அலுவலகம், தொண்டர்களை சந்தித்து விவாதிக்க கூட்ட அரங்கம் இருக்கிறது. முதல் தளத்தில் இளவரசி மற்றும் சசிகலா வும், இரண்டாம் தளத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் குடும்பத்தினரும் குடியேற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, "ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதி பால் காய்ச்சி அன்றைய தினமே புதிய பங்களாவில் குடியேறத் திட்டமிட்டி ருந்தார் சசிகலா. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் பணிகளை முன்னெடுக்க வாஸ்துபடி போயஸ்கார்டன் பங்களாதான் மிகச்சரியாக இருக்கும் என ஜோதிடர்கள் அறிவுறுத்திய தால் உடனடியாக கிரஹப்பிரவேசம் செய்திருக்கிறார் சசிகலா.
பால் காய்ச்சி முடித்து விட்டு ரிலாக்ஸ் மூடில் இருந்த அவர், "அரசியலில் என்னு டைய இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிருந்துதான் தொடங்கப் போகிறது. துரோகிகளுக்கு இனிதான் என்னுடைய அரசியல் புரியும். அ.தி.மு.க.வை மீட்காமல் விடமாட்டேன்' என சபதம் செய்திருக் கிறார்'' என்கிறார்கள் அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi-house-box.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-01/sasi-house-t.jpg)