"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் சென்றுகொண்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர் பார்த்ததைக் காட்டிலும் அளப்பரிய எழுச்சியைக் கொடுத்திருக்கிறது தென்காசி மாவட்டம். தென்காசி, சங்கரன்கோவிலில் குவிந்த எழுச்சி அலையால் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம்!
எப்பொழுதும் கொங்கு பெல்ட் நமக்கு கை கொடுக்கும், நம்மை விட்டுப்போகாது என்கிற அடிப்படையில் சென்டிமெண்டாக கொங்கு பெல்ட்டி லுள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு தனது எழுச்சிப் பயணத் தை துவக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு பெல்ட் எப்படி நமக்கு கை கொடுக்கிறதோ, அதே அளவில் தென் மாவட்டங்களும் கை கொடுத்துவிட்டால் வருகிற ஆட்சி நமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் தென்மாவட்டங்களை டார்கெட் செய்து சுற்றுப்பய ணத்தை துவங்கியவருக்கு எதிர்பார்க்காத எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது தென்காசி மாவட்டம்.
தென்காசியிலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் நம் வசமே இருக்க வேண்டும் என்பதில் பழனிச்சாமி சிரத்தையுடன் பயணத்திட்டத்தில் சிலவற்றை மாற்றியமைத்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிவரும் தொழிலதிபர்களை பாராட்டுவது, மதிப்புமிகு உழைப்பினை கொடுத்த விவ சாயிகளையும், நெசவாளர்களையும் வாரியணைப்பது என்பன திட்டத்தில் புதிதாக அரங்கேறின. குற்றாலம் ஐந்தருவி பகுதியிலுள்ள இசக்கி ரிசார்ட்டில் தங்கிய எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குறை களைக் கேட்டு அவர்களுடன் உரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாற்றுத்திறனாளிகளை சந்திக்கையில், இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் அனைத்தும் செயலற்று இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் புகார் கூறினர். தங்களிடமிருந்த கோரிக்கை மனுக்களை எடப்பாடியிடம் கொடுக்க முண்டியடித்த மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தவர், "ப்ளீஸ் அங்கேயே இருங்க, சிரமப்படாதீங்க... நானே வருகின்றேன்'' எனக்கூறி எழுந்துவந்து மாற்றுத்திற னாளிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். தொடர்ந்து பேசியவர், "அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளி களுக்கு ஸ்கூட்டர், மின்சக்தியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், பார்வையற்றோருக்கு உதவ 10 வழித்தடங்களில் ஒலியெழுப்பும் சமிக்ஞை கருவி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என அத்தனை யையும் செய்துள்ளோம். கடினமான வாழ்வை மேற்கொள்ளும் நீங்கள் இந்த வாழ்க்கைப் போராட் டத்தில் வெற்றிபெற எனது அரசு அமைந்தவுடன் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன். எத்தனையோ பேரை சந்தித்தாலும் உங்களை பார்க்கும்போதுதான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் நீங்கள்தான் முழுமை பெற்றவர்கள்'' என்றாரே பார்க்கலாம். அந்த இடமே அதிர்ந்தது.
தொடர்ச்சியாக ழஞஐஞ அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டவர், "பெருநகரங்களைத் தாண்டி உலகத்தரம்வாய்ந்த தொழில்நுட்பம் செழிக்க முடியும் என்பதை நிரூபித்தமைக்கும், கிராமப்புறத் திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதற்கும் எனது பாராட்டுகள்'' என்றார். அடுத்து தென்காசியில் பரப்புரையை மேற்கொண்டவர், "சங்கரன்கோவி லில் ஜவுளி பூங்கா, கடையநல்லூரில் பாலிடெக்னிக், தென்காசியில் அரசு சட்டக் கல்லூரி, புளியங்குடி யில் குளிர்பதனக் கிடங்கு, கொப்பரை தேங்காய் மின்சார உலர் வசதி, தென்காசியில் சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவ கல்லூரி, மாம்பழச்சாறு உற்பத்தி நிலையம், எலுமிச்சை குளிர்பதன நிலையம், ராமநதி ஜம்புநதி திட்டம், அரசு வனக் கல்லூரி ஆகியவை நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. இவை எதையும் நிறைவேற்றவில்லை'' என தி.மு.க.வை ஒரு பிடிபிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வில் வென்று ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருக்கும் மனோஜ் பாண்டியனின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை செய்தார். கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு வந்தவருக்கு மா.செ.வும், சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி, வெள்ளியில் செங்கோலை வழங்கி கெத்து காட்டினார். ஆனால் எதிர்பார்த்ததைவிட கூட்டம் சற்று குறைவு என்பதை எடப்பாடியின் முகவாட் டத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த தாக, வாசுதேவநல்லூர் செல்லும் வழியில் புளியங் குடிக்கு சென்று புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையிலிருந்த விவசாயிகளுடன் கலந்துரை யாடினார். எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களது கோரிக்கைகளை வைத்த விவசாயி கள், "உங்கள் கையிலுள்ளது ராஜகனி. இது வெற்றிக்கனி. வெற்றி உங்களுக்குத்தான்'' என்றது குறிப்பிடத்தக்கது.
வாசுதேவநல்லூர் பரப்புரை முடிந்து சங்கரன்கோவில் தொகுதிக்குள் வந்த எடப் பாடி பழனிச்சாமியை உற்சாகமாக வர வேற்றனர் சங்கரன்கோவில் அ.தி.மு.க.வினர். மறுநாள் சங்கர நாராயணர் கோவிலில் உலகப்புகழ்பெற்ற ஆடித் தபசு என்பதால் பக்தர்கள் முகம் சுழிக்கக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டது முன்னாள் அமைச் சர் ராஜலெட்சுமி தலைமையிலான டீம். அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு வெள்ளி வேல், ஏலக்காய் மாலை, முருகக்கடவுள் என பல நினைவுப் பரிசுகளை வழங்கியது சங்கரன்கோவில் அ.தி.மு.க. கூட்டமும் கட்டுக்கடங்காத கூட்டம். குஷியான எடப்பாடி பழனிச்சாமியோ, "நெசவாளர்களுக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு அ.தி. மு.க. ஆட்சியில் செய்ததுபோல் இன்றுவரை யாரும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவேன். உங்கள் துயர் தீர்ப்பேன். நீங்கள் தான் ஒவ்வொரு மக்களுக்கும், எனக்கும் நெருக்கமானவர்கள்'' என்றார். அடுத்து ஆட்சிக்கு வரமுடியுமாவென்ற மனச்சங்கடத்தை தென்காசியும், சங்கரன்கோவிலும் அகற்றியதால், மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்திற்குள் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
-வேகா