ரிஹர சுதாகரன்.… கோவை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட மக்கள் சக்தி நகரைச் சேர்ந்த இளைஞன். வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடக்கிறார்.

என்ன நடந்தது?

cc

Advertisment

"நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன். மேஜர் ராமசாமி கவுண்டர் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மாடு மேய்ப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகள் எனக்கு. அங்கேயே தங்க எனக்கு இடமும் உண்டு. எங்கள் ஊரில் பலர் மேஜர் இராமசாமி தோட்டத்தில்தான் வேலை செய்து வந்தோம். மேஜர் இராமசாமி வீட்டில் வேலை செய்யும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இரஞ்சிதாவை நான் காதலிக்கத் தொடங்கினேன். அவளும் என்னை விரும்பினாள்.

இதையறிந்த மேஜர் இராமசாமி, அவரது மனைவி ரதிமாலா, மகள் ஐஸ்வர்யா ஆகியோர், என்னையும் நான் காதலித்துவந்த இரஞ்சிதாவையும் மிகவும் மோசமாக நடத்தத் தொடங்கினார்கள். இரஞ்சிதா எதைச் செய்தாலும் "அவனைப் பார்க்க போறீயா?' போன்ற வார்த்தைகளை வீசி மனதைப் புண்படுத்துவது இராமசாமி குடும்பத்தாருக்கு வழக்கமானது. இதனால் ஆறு மாதம் முன்னால், நான் அந்தப் பண்ணையிலிருந்து வேலையை விட்டு நின்றுவிட்டேன்.

இரஞ்சிதா எட்டு ஆண்டுகளாக மேஜர் இராமசாமி பண்ணையில் வேலைசெய்து வருகிறாள். அவளை ஒரு கொத்தடிமை போல் வைத்திருக்கின்றனர். கேள்விகேட்க யாருமில்லாத தால் இரண்டு வருட காலமாக அவளுக்குக் கூலியே கொடுக்கவில்லை. அதைக் கேட்டாலோ அல்லது என்னை இங்கிருந்து அனுப்புங்கள் என்றாலோ அவள் மீது திருட்டுப் பட்டம் கட்டுவது, அடிப்பது, உதைப்பது, கட்டி வைப்பது, பூட்டி வைப்பது, மற்ற ஆண்கள் முன்பு பெண் தொழிலாளியைக் கொண்டு அவர் ஆடைக்குள் கைவிட்டு சோதிப்பது என அவளை இழிவாக நடத்துவர்.

cccc

Advertisment

இதைத் தாங்கமுடியாமல் இரஞ்சிதா 2022 ஜனவரி 1 அன்று அவர்களுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது,… மேஜர் இராமசாமியின் அடியாட்கள் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அடித்து மிரட்டி அவளுக்கு நான் வாங்கிக்கொடுத்த செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நான் மட்டை வேலைக்குச் சென்று திரும்பும்போது இரவு 9 மணிக்கு மேஜர் இராமசாமி எதிரே வந்தார். அப்போது என்னை சாதிப் பெயர் சொல்லி இழிவாய்த் திட்டியதுடன், “"எதுக்குடா இரஞ்சிதாகிட்டயிருந்து பணத் தையெல்லாம் திருடிக்கிட்டுப் போற?''’என்று கேட்டார். நான் அதிர்ந்துபோனேன். ’"நான் திருடன் என்றால் காவல் நிலையத்தில் வழக்குக் கொடுங்கள், இரஞ்சிதாவை அழைத்து வாருங்கள், அவள் சொல்லட்டும்'' என்று நான் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஆறு நாட்களாக இரஞ்சிதாவிடம் பேசாததால் நேரில் சென்று கேட்டு வருவோம் என்று மேஜர் வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்று "இரஞ்சிதாவைக் கூப்பிடுங்கள் நான் பணம் எடுத்ததாக அவள் சொன்னாளா? என்று நான் கேட்கிறேன்''”என்று சொன்னேன். அவர்கள் போலீசுக்கு போன் செய்துவிட்டனர். மூன்று போலீசார் வந்தனர். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.

அன்றிரவு காளி என்கிற காளிமுத்து எனக்கு போன்செய்து, "தம்பி இங்க வாடா. யாரும் இல்லை பேசித் தீர்த்துக்கலாம்'' என்றார். நானும் நம்பி போனபோது, என் கைகளைக் கட்டி மேஜர் இராமசாமி தோட்டத்துக்குக் கொண்டுபோயினர். “கீழ் சாதிப் பையன் உனக்கு எதுக்குடா காதல்?” என்று சொல்லி இந்திக்காரங்க இரண்டு பேர், கேசவன், ராசாத்தி, காளிமுத்து, ராமன் ஆகியோர் அடியோ அடி என்று கட்டையால் அடித்தார்கள். மேஜர் இராமசாமி, அவரது மனைவி ரதிமாலா, அவரது மகள் ஐஸ்வர்யா எல்லோரும் அங்கே இருந்தார்கள். “நான் "அடிக்காதீங்கண்ணா... வலிக்குதுண்ணா''’என்று கதறியழுதேன். பாதத்தில் லாடம் கட்டி அடித்தார்கள். கை நகக்கணுக்களில் ஊசியால் குத்தினார்கள். கடைசியாக கத்தியை எடுத்துக் குத்த வரும்போது நான் தப்பியோடி விட்டேன். அடுத்த நாள் காலையில என் வீட்டிற்கு ராசாத்தி, ராமன், காளிமுத்து, கேசவன், இந்திக்காரங்க இரண்டு பேர் எல்லோரும் வந்து ”மேஜர் இராமசாமி கூப்புட்றாரு வாடா” என்று கூப்பிட்டார்கள். வரமறுத்தபோது... என்னை அடித்து தரதரவென இழுத்துக்கொண்டு போனார்கள். எனது பெரியம்மா வும், அண்ணன்களும் வந்து எப்படியோ என்னை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார்கள். நான் காதலிக்கும் பெண் மேல்சமு தாயத்தில் பிறந்தவள் என்பதா லும் நான் அருந்ததியர் என்ப தாலும் என்னை அடித்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவங்க காதலிக்கவே கூடாதா?''’என அழுதபடியே கேட்டார் ஹரிஹர சுதாகரன்.

cc

இந்த வழக்கைக் கையி லெடுத்து போராடும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனோ “"வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இயற்கையாய் வரக்கூடிய காதலை சாதிசொல்லி அடக்குவது ஏற்கமுடியாதது. அந்த இளம்பெண் ணுக்கு சம்பளம் தராமல் விட்டிருப்பதை கொத்தடிமைச் சட்டத்தில் கொண்டுவந்து அவர் கள் தண்டிக்கப்படவேண்டும். காவல்துறையிலுள்ள கீழ்மட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதிப்புகளை உதாசீனப்படுத்திவிடுகிறார்கள். இந்த சம்பவத்திற்குட்பட்ட ஆனைமலை போலீசார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மேஜர் ராமசாமி, அவரது மனைவி, மகள்மேல் வழக்கு பதியாமல் தப்பவிட்டிருக்கின்றனர். காவல்துறையின் இந்த செயல்களைத் தடுக்கவில்லை என்றால் வன்கொடுமை தாக்குதல்கள் தொடர்ந்தபடிதான் இருக்கும்''’என்கிறார் வேதனையாய்.