TN- 02. A.S-0222. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசார மேடைகளில் அதிக முறை சொல்லிய கார் நம்பர் இது. இந்த கார் நம்பர் பொள்ளாச்சி அ.தி.மு.கவினரிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது... என்கிறார் அந்த காவல் துறை போலீஸ் நண்பர்.
அந்த போலீஸ் நண்பர்தான் பொள்ளாச்சி வீடியோக்களை நமக்களித்தவர். அவர் நம்மிடம், "தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சியில் பிரச்சாரத்திற்கு வந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்... பொள்ளாச்சி பிரச்சாரத்தின் போது... இந்த எண் கொண்ட காரை தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக் குற்றவாளிகள் பெண்களை சீரழிப்பதில் மிக முக்கியமாக உபயோகப்படுத்தினார்கள்.. என இந்த வாரம் வெளியாகி இருக்கக் கூடிய நக்கீரனில் கட்டுரையாக வெளியே வந்திருக்கிறது. விசாரிக்கும் சி.பி.ஐ.யும் அந்த எண் கொண்ட காரைத்தான் இரவோடு இரவாக தூக்கிப் போயிருக்கிறது.
அந்த கார் அ.தி.மு.க எக்ஸ் கவுன்சிலரான ஜேம்ஸ் ராஜா பெயரில் இருக்கிறது. அந்த காரை இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் ஆகியோர் உபயோகப்படுத்தி இருக் கின்றனர்.. எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவக் குற்றவாளிகள் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். பெண்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவார்கள்... என ஸ்டாலின் சொல்லியது... என்னைப் போன்ற போலீசாருக்கு பெரிய உற்சாகமாய் இருந்தது.
அந்த உற்சாகம் தொடர... சி.பி.ஐ.யின் விசாரணை வேகத்தை துரிதப்படுத்த வேண்டும்.. என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாய் மொழிய வேண்டும். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வீடியோக்களில், பெண்கள் எவ்வளவு துன்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை பார்த்தவன் நான் என்பதால்தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
கண்ணில் பார்த்துவிட்டு தாங்க முடியாமல் தான் அந்த இரண்டு வீடியோக்களை உங்களிடம் கொடுத்தேன்... என்கிற அந்த நெஞ்சில் ஈரமுள்ள போலீஸ்காரர்... இன்னொரு தகவலை உங்களுக்கு சொல்லி விடுகிறேன்'' என்றார்.
ஜேம்ஸ் ராஜா பெண்கள் விஷயத்தில் வீக்னஸ் என்பதால் அருளானந்தத்துடன் நெருக்கம் பாராட்டி.. காரை உபயோகப்படுத்த கொடுத்து இருக்கிறான். இப்போது அந்த காரை எப்படியாவது... இந்த பெண்கள் சம்பவத்தில் சம்பந்தப் படவில்லை... என்று "சரி'' செய்ய ஜேம்ஸ் அல்லாடுகிறான்.
லோக்கலில் இருக்கும் வக்கீல்கள் வேறு... அருளானந்தத் திற்கு ஆதரவாக வாதாட மாட்டோம்... எனச் சொல்லிவிட்டபடியால், திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான வக்கீலிடம்... வாதாட எவ்வளவு பணம் வேணாலும் தருகிறேன்... என சொல்லி ஓ.கே செய்து விட்டானாம் ஜேம்ஸ்.
இந்த நிலையில் பொள்ளாச்சி முக்கியப் புள்ளியிடம்... எனக்கு உதவுங்கள்... என ஜேம்ஸ் நின்ற போது... எந்தப் பதிலையும் சொல்லாமல் போய் விட்டாராம் அந்த முக்கியப் புள்ளி.
அந்த முக்கியப் புள்ளியின் மகன் கைது செய்யப்படும் நாளையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளையும் எதிர் நோக்கி இருக்கிறேன்... நானும் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாவாய்...என்கிறார் கண்களில் நீர் முட்ட.
இந்நிலையில் அந்த முக்கியப் புள்ளியிடமிருந்து விலகி நிற்கும் பொள்ளாச்சி அ.தி.மு.க.வினர்... இந்தத் தொகுதியில் நின்று எப்படியாவது ஜெயிக்க வேண்டும்... அதற்காக எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை... என்று அந்த பொள்ளாச்சி முக்கியப் புள்ளி எங்களிடம் சொல்லி புலம்பி தவமே கிடந்தார்.
ஆனால் எப்படி ஜெயிப்பது? பெயர் நாடு முழுக்க கெட்டுக் கிடக்கிறதே...? என்கிற தேம்பலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட நேரத்தில் தான்... கொரோனோ தொற்று அவருக்கு கை கொடுத்தது.
நாடே ஊரடங்கால் கட்டுண்டு, வேலை யின்றி, உணவின்றி பசியில் சிக்குண்டு தவிக்க ஆரம்பித்துவிட்டது. தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும் என்கிற நிலை இருக்கும் போது... பசிக்கு முன்னால் அடுத்த வீட்டு பெண்கள் குறித்த கவலை நமக்கெதுக்கு? என்கிற மனநிலைக்கு மக்கள் வந்த போது தான் அந்தப் பொள்ளாச்சி முக்கியப் புள்ளி... தினமும் உணவு இலவசமாய் கொடுத்தார். தொகுதி மக்கள் உணவோடு சேர்த்து பொள்ளாச்சி உண்மையையும் தின்று செரிமானம் செய்து விட்டார்கள்.
தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளும் அவருக்கு சாதகமாகவே இருந்ததால், பொள்ளாச்சியை தன்வசப்படுத்திவிட்டார்.
இப்போதும் கொரோனா தொற்று தாக்கிக் கொண்டிருக்கிறது. முன்பைப் போல இப்போதும் தொகுதி மக்களுக்கு உணவிடலாமே..? எனச் சொன்னால்... இவனுககிட்ட இருந்து ஓட்டு வாங்கறதுக்கு எவ்வளவு கொட்டி அழிச்சு இருக்கறேன்னு தெரியுமா? அது தெரியாம மனுசன வாட்டாதீங்க.. என கோபித்துக் கொண்டு தினமும் குடும்பத்தோடு கோவைக்கு வந்து விடுகிறார் என்கிறார்கள் அதிருப்தியாய்.
விசாரணை வேகமெடுத்து, நீதி நிலை நாட்டப்பட்டால், அத்தனை அயோக்கியத்தனமும் அம்பலமாகும்.