திருச்சி எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனும், அ.ம.முக. கட்சியின் சார்பில் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாவும், நாம் தமிழர் கட்சியில் கார்த்தியும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆனந்தராஜும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற... தொடக்கத்திலேயே காங்கிரஸ் லீடிங் காட்டியது. இதில் 2 சுற்று முடிவில் காங்கிரஸ் 59,254, தே.மு.தி.க. 15,711, மக்கள் நீதி மய்யம் 3,582, அ.ம.மு.க. 10,478, நாம் தமிழர் 6,845, நோட்டா 1,407. திருநாவுக்கரசர் 43,543 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
இந்த நிலையில்... வாக்கு எண்ணும் மையத்திற்கு தி.மு.க. மா.செ. கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒருசேர வந்து பார்வை யிட்டனர்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ""தமிழகம் முழுவதும் வரும் செய்திகள் நம்பிக்கை தருவதாக இருக் கின்றன. என்னுடைய வெற்றிக்கு உழைத்த தி.மு.க. மா.செ. கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ராகுல்காந்திக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை என்றால் அடுத்தமுறை கண்டிப்பாக அவர் பிரதமராக வருவார். ஏனென்றால் அவருக்கு வயது இருக்கிறது. கடந்தமுறை மன்மோகன் சிங் இரண்டாவது முறையாகப் பிரதமராக வரும் போதே ராகுல்காந்தியிடம் கேட் டார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். 100 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பதால் பெரிய திட்டமிடல் இருக்கிறது.
என்னுடைய வெற்றியைப் பொறுத்த வரையில் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு 1 ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் திருச்சி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
திருச்சி தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசருக்கும் குஷ்புவுக்கும் கடும் போட்டி இருந்தது. மேலிடத்தில் மல்லுக்கட்டி சீட் வாங்கி னார் திருநாவுக்கரசர். தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தி.மு.க. தரப்பில் ஆர்வம் காட்டப்பட்டது. இந்த சிக்கல் களையெல்லாம் கடந்து சிக்கனமான செலவில் ஜெயித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
-ஜெ.டி.ஆர்.
படம் : அசோக்