கோவை பனைமரத்தூரை களேபரப்படுத்தியது அந்தக் கொலை. கத்தியால் குத்தப்பட்டு ரமேஷ் என்கிற இளைஞன் கொல்லப்பட்டது குறித்தும், விசாரணை என்ற பேரில் ஊர்க்காரர்களை போலீசார் தூக்கிச் சென்றதையும் செய்தியாக எழுதியிருந்தோம்.
கவின் என்பவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ரமேஷ் அழைத்திருக்கிறான். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், ரமேஷைக் குத்திக் கொலை செய்தான் கவின். இதனை, கோவில் வாசலில் படுத்துக் கொண்டிருந்த கஜேந்திரன் பார்த்திருக்கிறான்’என இதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை சாட்சியாக சேர்த்திருக்கிறது செல்வபுரம் போலீஸ்.
சாட்சியான கஜேந்திரனைச் சந்தித்து நாம் விசாரித்தோம். ""சார், கொல்லப்பட்ட அந்தப் பையனை நான் முன்னப் பின்ன பார்த்ததுகூட கிடையாது. அந்தக் கொலையையும் நான் பார்க்கல. மொதல்ல மாரியாத்தா கோவில் வாசல்ல நான் படுக்கவேயில்ல. அன்னைக்கி நல்ல போதையில, கன்னியப்பனோட வண்டியில தான் படுத்துட்டு இருந் தேன். விடியக்காலை மூன்றரை மணி இருக்கும். யூரின் போறதுக்காக வண்டியிலிருந்து இறங்கி, குப்பைப் பெட்டிக்கிட்ட வந்தேன். அப்போ இந்தக் கவின் பையன் எதிரில் வந்து, என்னமோ பேசினான். நான் மறுபடியும் வண்டியில் ஏறிபடுத்துட்டேன். இதுதான் நடந்தது.
மறுநாள் காலையிலேயே வேலைக்குப் போயிட்டேன். அன்னைக்கி மதியம் வீட்டுக்கு வந்த கவின், என் பொண்ணுக்கிட்ட அப்பா எங்கேன்னு கேட்டிருக்கான். போலீஸ் கூட்டிப்போன போதும் இதையேதான் சொன்னேன். அடி வெளுத்துட்டாங்க.
அப்புறம் என்கிட்ட, மாரியத்தா கோவில் வாசல்லபடுத்துக் கிடந்தேன். அப்போ ஐயோன்னு சத்தம் கேட்டு, கண்முழிச்சி பார்த்தேன். ரமேஷைக் கவின் கத்தியால் அறுத்துட்டு இருந்தான்னு சொல்லச் சொன்னாங்க. அதெப்படி சார், பார்க்காததை சொல்றதுன்னு கேட்டேன். பைப்பை வச்சு அடிச்சு, சொல்றதை மட்டும் சொல்லுன்னு மறுபடியும் வெளுத்தாங்க. அடி தாங்கமா சரின்னு ஒத்துக் கிட்டேன்.
அந்தக் கவின், போலீஸ் கிட்ட நான் ஒருத்தன்தான் சார் ரமேஷை மட்டை அடிச்சேன் (கொலை பண்ணினேன்). சரக்கு அடிச்சிட்டு கன்னியாத்தா கோவில் வாசல்ல படுத்துட்டு இருந்தேன். அப்போ அங்கவந்த ரமேஷ், என் தலையை அமுக்கி செக்ஸ் பண்ணச் சொன்னான். எனக்குப் பிடிக்கல. நேரா வீட்டுக்குப் போனேன். அங்க வௌவாலை அடிச்சு சாப்பிட, வெங்காயம் மிளகாய் நறுக்க வச்சிருந்த கத்தியைக் கொண்டுவந்து, ரமேஷை அரிஞ்சிட்டேன்னு சொல்லியிருக்கான். அந்தக் கத்தியையும் மப்புல.. எங்கே வீசினேன்னு தெரியலைன்னு சொல்லிட்டான்.
பிறகு போலீஸே ஒரு கத்தியைக் கொண்டுவந்தாங்க. ஒருத்தன் பண்ணின தப்புக்காக ஊரையே கூட்டிப்போன போலீஸ், அந்தக் கொலையைப் பார்க்காத என்னை யே சாட்சியாகவும் நிறுத்துறாங்க'' என்றார் கஜேந்திரன்.
-அ.அருள்குமார்