(16) அம்மாவின் திட்டம்! அப்பாவின் காட்டம்
ஷில்லாங் அன்றைக்கே சற்று நவநாகரிகமான இடம், அங்கே ஏராளமான அமெரிக் கர்கள் தங்கியிருந்தார்கள். பெரும்பாலான நாட்களில் ஏதாவது விருந்து நடக்கும். அப்போதெல்லாம் என் தந்தைக்கும் அழைப்பு வரும்.
அதேபோன்று ஒரு விருந்திற்கு அழைப்பு வந்தது. என் தந்தை, தாயார், தங்கை கிருஷ்ணா எல்லோரும் விருந்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த என்னை "நீயும் வருகிறாயா என்று சம்பிரதாயத்திற்குக் கூட கூப்பிட வில்லை. என்னை ஏன் புறக்கணிக் கிறார்கள்' என வேதனையால் என் நெஞ்சம் ஏக்கத்தில் புழுங்கும்.
ஒருநாள் இதற்கான காரணம் எனக்குத் தெரியவந்தது. நான் தாயாகப்போகிறேன். அந்த "தாய்மையின் சின்னத்தைத் தாங்கியிருக்கும் என்னை அவர்களுடன் அழைத்துப் போக வெட்கமாக இருக்கிறதாம்.'
"இத்தனை சின்ன வயது பெண் இதற்குள்ளாகவா தாய்மையை அடைந்து விட்டாள்?' என்று விருந்தில் யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயமே, என்னை அவர்கள் வீட்டில் தனியே விட்டுவிட்டு செல்ல காரணம் என்பதை உணர்ந்தேன். நான் ஏதோ ஒரு பாவத்தை, செய்யக்கூடாத ஒரு காரியத்தைச் செய்துவிட்டவளாகக் கருதப்பட்டு, அந்தக் கோணத்திலேயே நான் நடத்தப் பட்டேன். ஷில்லாங்கில் அடிக்கடி பூகம்பம் வரும். அதேபோல என் இதயத்திலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வகையில் பூகம்பம் ஏற்பட்டபடியே இருக்கும்.
சிலசமயம் எந்த பூகம்பத்தின் எண்ணிக்கை அதிகம் இருந்தது என்பதை கணக்கிட்டுப் பார்ப்பேன்... ஷில்லாங் தோற்று விடும். இத்தனைக்கும் காரணம் யார்?
"என்னை இந்த அவலநிலைக்குக் கொண்டுவந்து விட்டவர் யார்?' இப்படி என் பெற்றோர்களிடம் என்னை வேதனை படத்தக்க ஒரு சூழலில் சிக்க வைத்தவர் யார்? என்பதை எண்ணிப் பார்க்கும்போது என் கணவர் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
"இதற்கெல்லாம் நீங்கள்தான் காரணம்'' என்று கணவர் மீது எரிந்து விழுவேன்.
"வியாபார விஷயமெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் நம் கஷ்டங்கள் நீங்கி, நாம் சுதந்திரமாக வாழ ஆரம்பித்துவிடுவோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்'' என்பார் அவர். அவர் பேச்சு எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்துக்களாகவே இருந்தன.
இந்தச் சமயத்தில் சென்னையில் இருந்த என் அண்ணன் ராமு இங்கே வந்துசேர்ந்தான். நாங்கள் சென்னையில் முன்பு தங்கியிருந்த சிந்தாதிரிப்பேட்டை வீட்டில் (நம்பர் 9 அருணாசலநாயக்கன் தெரு) இதன் எதிரில் ஒரு பெரிய மாதா கோயிலும் இருக்கும். என் மாமா பூரணபிரக்யா, அவரது மனைவி திருமதி லீலாபாயுடன் தங்கிருந்தார்.
என் மாமாவுக்கு சென்னையில் சொந்தத்தில் கொஞ்சம் நிலம் இருந்தது. தவிர, ஓரளவுக்கு அவர்கள் வசதியாக, செல்வாக்காக வாழ்க்கையை நடத்திவந்தார்கள். என் மாமி லீலாபாய் சினிமாவில் சேர அப்போது முயற்சித்துக்கொண்டிருந்தார். இரண்டொரு பட கம்பெனிகளில் அவருக்கு மேக்கப் டெஸ்ட் போட்டு எடுத்து பார்த்திருந்தார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/09/sowcarjanaki1-2025-12-09-12-22-54.jpg)
சென்னையில் இருந்துவந்த என் சகோதரன் ராமு, என் மாமியைப் பற்றி என் தாயாரிடம் ஒரேயடியாக கதைகளாக அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அவருடைய அருமை பெருமைகள் எல்லாம் அடுக்கிக்கொண்டிருந்தான்.
"மாமி காலையில் போட்ட செருப்பை மாலையில் போடுவதில்லை. காலையில் கட்டிய புடவையை சாயங்காலம் கட்டுவதில்லை. வேளைக்கு ஒரு உடை, வேளைக்கு ஒரு நகை சொர்க்க லோகத்தில் இருப்பதுபோல வாழ்க்கையை நடத்துகிறார்'' என்று கதைகளாகத் தட்டிவிட்டான்.
ராமுவின் பேச்சை கேட்கக் கேட்க என் தாயாருக்கு சபலம் வந்துவிட்டது. பேராசை யாரைவிட்டது.
"நம்ம பெண் கிருஷ்ணாவையும் சினிமாவில் சேர்த்துவிட்டால், எவ்வளவு சொகுசான வாழ்க்கையை (தன் நாத்தியைப் போல) நடத்தலாம் என்று ஒரு ஆசை அவருக்கு இதயத்தில் கிளைவிட ஆரம் பித்தது. எனவே என் தங்கை கிருஷ்ணாவை சினிமாவில் சேர்ப்பதற்காக முடிவு செய்து என் தாயாரும் என் அண்ணனும் சேர்ந்து திட்டம் போட ஆரம் பித்தார்கள். இது என் தந்தைக்குத் தெரியவே தெரியாது.
நாம் ஷில்லாங்கில் இருந்தால் கிருஷ்ணாவை எப்படி சினிமாவில் சேர்க்க முடியும்? சென்னைக்குப் போனால்தான் அது நடக்கும். சரி, சென்னைக்கு இப்போது திடீரென்று போக வேண்டும் என்றால் எதை ஆதாரமாகக் காட்டி புறப்படுவது? என்று யோசித்தார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்களது திட்டத்திற்கு உதவியாக நான் ஒரு பகடைக்காயாக உருட்டப்பட்டேன்.
நான் மெட்ரிக் பரீட்சை எழுதும் சமயம் நெருங்கியது. தங்கை கிருஷ்ணாவின் ஓவர் கோட்டை இரவலாக வாங்கி அணிந்து கொண்டு, அந்தக் குளிர் நாட்களிலும் நான் பரீட்சை ஹாலுக்கு சென்று பரீட்சை எழுத ஆரம்பித் தேன்.
என் வயிற்றில் குழந்தையின் துள் ளல் லேசாக தெரிந் தது. அது ஒரு வகை யில் ஆனந்தமாகவே இருந்தது. எப்படி யோ ஒரு வழியாக பரீட்சை எழுதி முடித்தேன். இப் போது என்னுடைய அடுத்த கவலை என் பிரசவம்தான். என் முதல் குழந்தையின் பிரசவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்ற கவலையே முன்னே வந்துநின்றது. இந்தத் தருணத்தில்தான் நான் பகடைக் காயாக ஆக்கப்பட்டேன்.
ஷில்லாங்கில் அடிக்கடி பூகம் பங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்ததால், பெரிய காகிதத் தொழிற்சாலை எதையும் அங்கே கட்ட முடியவில்லை. இதனால் என் தந்தையின் தொழிலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருந்தது.
இதையும், கூடவே குழந்தைகளின் படிப்பையும் இணைத்து "உங்கள் உத்தியோகமும் இங்கு நிரந்தரமாகவில்லை. பசங்களின் படிப்பும் சரியாக அமையாமல் இருக்கிறது என்று தந்தையிடம் சொல்லி கடைசியாக "ஜானகிக்கும் பிரசவநாள் நெருங்கிவிட்டது. இங்கே ஒரே குளிராக இருக்கிறது. சென்னைக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறேன்'' என்று தூபம் போட்டார் என் தாயார்.
ஆனால் இந்தக் காரணங்கள் எல்லா வற்றையும்விட மேலாகவும், முக்கிய மானதாகவும் இருந்த "கிருஷ்ணாவை சினிமாவில் சேர்க்க வேண்டும்' என்பதை மட்டும் என் தந்தையிடம் அவர்கள் ஜாடையாக கூட சொல்லவில்லை. என் தந்தைக்கு என் தாயாரின் காரணங்கள் போதுமான சமாதானத்தை தரவில்லை.
எனவே... "என் உத்தியோகத்தைப் பற்றி இப்ப ஏன் திடீரென்று நீ கவலைப்பட வேண்டும். இது இல்லாவிட்டால் என்ன வேறு ஏதாவது வேலை இருக்காதா என்ன? தவிர, நான் எங்கு இருக்கிறேனோ அங்கே இருக்க வேண்டியதுதான் உன் கடமை. உனக்கு என்னைவிட உன் பசங்கதான் முக்கியம் என்றால் நீ போகலாம்'' என்று சற்று கோபமாக என் தந்தை பேசிவிட்டார். என் தந்தை முதல் முதலாக இப்படி கடுமையாக பேசியதை அன்று தான் நான் பார்த்தேன். எப்படியோ என் தாயார், தன் திட்டத்தில் வெற்றி பெற்று விட்டாள்.
மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நாங்கள் சென்னைக்குப் பயணமானோம். எந்த வேலையிலும் இல்லாத என் கணவரும் எங்களுடன் புறப்பட்டுவிட்டார்.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை... என்னை கைவிட்டு விடுமா?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/sowcarjanaki-2025-12-09-12-22-40.jpg)