(6) எனக்கு எதிராக வந்த கடிதம் அப்பா  கையில்!


திடீர் என்று ஒரு எண்ணம் தோன்றியது "நாம் ஏன் அவரை நம் வீட்டுக்கு அழைக்கக் கூடாது' என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இரண்டு காரணங்களுக்காக நான் அவரை என் வீட்டுக்கு அழைக்க விரும்பினேன். அவர் என் இதயத்தை கவர்ந்தவர் என்பது முதல் விஷயம்.

Advertisment

இரண்டாவது, அவர் எங்கள் வீட்டுக்கு வந்ததைப் பார்த்துவிட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில்  யாராவது.. அப்படியாவது, இந்த விஷயத்தை எங்கள் வீட்டாரிடம் சொல்லி, விஷயம் உடைபட்டு எனக்கு அதன்மூலம் ஏதாவது நல்ல முடிவு கிடைக்கும் என்ற உள்நோக்கமும் இருந்தது.

Advertisment

அவரும் என் வீட்டுக்கு வர ஒப்புக்கொண்டார். அந்த நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். அந்தநாளும் வந்தது. அன்று மாலை சுமார் ஏழு மணி இருக்கும். எனக்குப் பிடித்தமான மல்லிகைப் பூவை வாங்கிக்கொண்டு என் அன்பர் வந்தார்.

அவரை வரவேற்று முன்அறையில் உட்கார வைத்தேன். அவர் வாங்கி வந்த மல்லிகைப் பூவை என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூல் மேல் வைத்தேன். அன்றைய தினம் நான்தான் சமையல் செய்திருந்தேன். அவரைச் சாப்பிட அழைத்தேன்.  முதலில் மறுத்தவர்,  வீட்டுக்கு போய் அவசியம்  சாப்பிட வேண்டும் என்பதால், ஏதாவது கொஞ்சமாக சாப்பிடுவதாக சொன்னார்.

Advertisment

பயப்படாமல் சாப்பிடலாம், நான் நல்லா சமைப்பேன் என்று சொல்லி, நான் சாப்பிட்ட தட்டிலேயே கொஞ்சம் தயிர் சாதத்தை வைத்து பக்கத்தில் துவையல் வைத்தேன். அவர் மிகவும் ரசித்து விரும்பிச் சாப்பிட்டார். என் அன்பருக்கு நான் சமைத்து, என் கையால் பரிமாறுவது இதுதான் முதல் முறை. கையலம்பிக் கொண்டு, அவர் புறப்படுவதற்கு முன்பாக, ஸ்டூல் மேல் வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து என் தலையில் சூட்டினார் அதுதான் அவர் முதல்முறையாக என்னைத் தொட்டு பூ வைத்தது.

திருமணத்துக்கு முன்பாக இப்படி என் கொண்டையில் அவர் பூ வைத்ததுகூட அப்போது எனக்குத் தப்பாகத்தான் பட்டது. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பேசிப் பழகிய அந்த நாட்களில் தவறாக நடந்துகொண்டதே கிடையாது. ஒருவரையொருவர் தொட்டது கூட கிடையாது. அவரும் கண்ணியத்தைக் கடைப்பிடித்தார். நானும்  பண்பை விட்டு விலகவில்லை. எனவேதான் அவர் அன்றைய தினம் பூ வைத்ததுகூட எனக்கு கொஞ்சம் தப்பாகவே பட்டது.

பள்ளி விடுமுறை நாட்களில் நான் அவரைச் சந்தித்து பேச முடியாமல் போய்விடும். அப்போது நான்  எங்கள் வீட்டு மாடியில் வந்து நின்று கொள்வேன். நான் மாடியில் நிற்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்னைப் பார்ப்பதற்காகவே அவர் எனக்காகவே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என் கண்ணில் படும்வகையில் போய்வருவார். அந்த நேரத்தில் எங்கள் கண்கள் மௌன மொழியில் பேசிக் கொள்ளும். புன்னகை பரிமாறல் நடக்கும். இரண்டு தடவை இப்படியும் அப்படியும் தெருவில் நடந்துவிட்டு புன்னகையுடன் பிரியா விடை கொடுக்கும்.

ஒரு சமயம் வண்டிக்காக நானும் அவரும் சாலையோரம் காத்திருந்தோம். அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த திருமதி துர்காபாய் (எனது தலைமை ஆசிரியை) நானும் அவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். 

அவருக்கு நான் இம்மாதிரி ஒரு வாலிபருடன் பேசுவது பற்றி ஏதோ தோன்றியிருக்க வேண்டும். அவர் என்னை அழைத்து விசாரிக்கவில்லை. ஆனால்  என் தந்தைக்கு உடனே ஒரு கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதமும் வீட்டுக்கு வந்துவிட்டது. நல்லவேளை அப்போது என் தந்தையார் ராமேஸ்வர யாத்திரையில் இருந்தார். அந்தக் கடிதம் என் கைக்கு வந்தது. நான் பிரித்துப் பார்த்து இருக்க லாம் அல்லது கிழித்துப் போட்டு விடலாம் ஆனால். நான் அப்படி செய்யவில்லை. என் தந்தையார் பெயருக்கு வந்த அந்தக் கடிதத்தை அப்படியே கொண்டு போய் அவர் மேஜை மேல் வைத்துவிட்டேன். சாதாரணமாக எங்கள் வீட்டுக்கு யார் பெயருக்கு கடிதம் வருகிறதோ அவர்தான் அதை பிரித்துப் படிப்பார். மற்றவர்களது கடிதங்களை பிரிக்கவோ படிக்கவோ மாட்டோம்.

ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பிய என் தந்தையார் அந்தக் கடிதத்தை பிரித்துப் படித் தார். பின்னர் என்னை அழைத்து. "ஜீன்... (என் னை அப்படித்தான் என் அப்பா அழைப்பார்)  இந்தா இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்'' என்று சொல்லி, திருமதி துர்காபாய் அம்மையார் எழுதிய கடிதத்தை கொடுத்தார். நான் எனக்குள் இருந்த பதட்டத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல். வாங்கிப் படித்தேன். அது சற்று நீளமான கடிதமாக இருந்தது. 

sowcarjanaki1

நான் அதை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.  அன்புள்ள வெங்கோஜி என்று ஆரம்பித்து.   'உங்கள் மகள் ஜானகியை நான் ஒரு வாலிபனுடன் பார்க்க நேரிட்டது. அவர்கள் பார்த்துப் பழகிய தோரணையிலிருந்து உங்கள் மகள் ஏதோ தவறு செய்துவிடு வாள் என்றே என்னை எண்ண வைக் கிறது. உங்கள் மகள் மிகவும் கெட்டிக் காரி. அதுவும் அவள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய தன்மையுடையவள், எனவே அவளை அதட்டிக் கேட்டு எதை யும் மிரட்டிவிடாதீர்கள். எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்'' என்று பொருள்படும் வகையில் எழுதி இருந்தார். 

 கடிதத்தை படித்துவிட்டு நான் என் தந்தையாரிடமே திருப்பிக் கொடுத்தேன்.   அவர் என்னை கோபமாகப் பார்க்க வில்லை அதட்டிப் பேசவில்லை சற்று மென்மை யாக.   "என்னம்மா  ஒழுங்காக படித்து வரு கிறாய் அல்லவா'' என்று மட்டும் கேட்டார். 

"ஓ... நல்லா படித்து வருகிறேன் அப்பா'' என்றேன். மேற்கொண்டு அவர் எதையும் கேட்கவே இல்லை. 

"நீ போகலாம்'' என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்.

அவர் லண்டனில் படித்தவர். அங்கு மூன் றாண்டுகள் வாழ்ந்தவர், எனவே ஆங்கிலேயர்கள் பாணியில் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். 

மறுநாள் இதன் எதிரொலியாக பெரிய பூகம்பம்  வெடிக்கும் என்பது தெரியாமல் நான் படுக்கச் சென்றுவிட்டேன்.

(பேசுறேன்...)


_____________
கிச்சன் பியூட்டி! 

கிச்சன் டாக்டர் என்றுதான் பட்டு மாமியை சொல்ல வேண்டும். அவர் சமையலறையில் தயாரிப்பவை எல்லாம் ஆரோக்கியமான மருத்துவ குணமுள்ள ரசங்களே! அவர் வைக்கின்ற பூண்டு ரசம், தக்காளி ரசம் தனி ஸ்பெஷல். புளிக்காத தயிரில் அவர் செய்யும் தயிர் சாதம் தனி ருசி. "புளிக்காத தயிர், மிருதுவான தோலுக்கு ரொம்பவும் நல்லது' என்பார் பட்டுமாமி!