(4) அண்ணலும் நோக்கினார், அவளும்...!


சினிமாவுக்கும் எனக்கும் பூர்வஜென்ம பந்தம் இருக்குமோ என்னவோ. தென்னிந்திய சினிமா பேசத் தொடங்கிய அதே வருடத்தில், 1931 டிசம்பர் 12ஆம் நாளில் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் வெங்கோஜிராவ் -சசிதேவி தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக உலகம் பார்க்க வந்தேன். என்னுடன் ஒரு அண்ணா ராமு, ஒரு தங்கை கிருஷ்ணகுமாரி (இவரும் நடிகைதான்) இன்னும் இரண்டு குட்டித் தங்கைகள் தேவகி, சாய்லட்சுமியும் உண்டு.

Advertisment

வீட்டில் எனக்கு வைத்த பெயர் சங்கரமஞ்சி ஜானகி. நான் சௌகார் ஜானகி ஆனது எப்படி என்கிறீர்களா? தெலுங்கில் "சௌகார்' என்ற படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக முதன் முதலில் அறிமுகமானேன். தமிழில் நடிக்க வந்தபோது, இங்கு ஏற்கனவே ஒரு ஜானகி (வி.என்.ஜானகி எம்.ஜி.ஆர்.) இருந்ததால், என் பெயருக்கு முன்னால் "சௌகார்' என பட டைட்டிலில் சேர்த்துவிட்டனர். நான் சௌகார் ஜானகியானது இப்படித்தான்.

Advertisment

என் தகப்பனார் லண்டனில் சிறிதுகாலம் தங்கி மேற்படிப்பு படித்தவர். பேப்பர் டெக்னாலஜி படித்து இங்கிலாந்தில் மூன்று வருடங்கள் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியவர். அவருடைய நடை, உடை, பாவனையெல்லாம் ஆங்கிலேயர் பாணியில் இருக்கும்.  என் தகப்பனார் மிக அழகாக ஆங்கிலம் பேசுவார். அவரைப்போல நானும் ஆங்கிலம் பேசுவேன். ஏன்... குழந்தைகளுக்கு உணவு, உடை விஷயங்களிலும், கல்வி போதிப்பதிலும் கூட ஆங்கிலேயர் முறையில் கடைப்பிடிப்பவர் என்று என் அம்மா சொல்வார். 

தொழில்நிமித்தமாக அப்பாவுக்கு அடிக்கடி இடமாற்றம் வந்துகொண்டேயிருக்கும். பல்வேறு இடங்களுக்கு அப்பாவின் வேலை காரணமாக அடிக்கடி மாறிவந்ததால், பள்ளிப் படிப்பை ஒழுங்காக நானும் மற்றவர்களும் தொடர முடியவில்லை. வீட்டிலேய சில சமயம் படிக்க ஆரம்பித்தோம்.

Advertisment

சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்ததும் இப்படித்தான் தியாகராய நகர் மேற்கு போக் ரோட்டில் எங்கள் குடும்பம் வாடகைக்கு குடிவந்தது. என் ஆரம்பக் கல்வி சாரதா வித்யாலயா வில் தொடங்கியது. "படிப்பில் நான் கெட்டிக்காரி. எதையும் சட்டென்று புரிந்துகொள்ளும் கற்பூர புத்தி, சுட்டித்தனம், துறுதுறுவென்று இருப்பேன்' என்று அம்மா சொல்வார். மெட்ரிக் படிக்க ஆரம்பித்த அந்த சமயத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் குறுக்கிட்டது.

sowcarjanaki2

எதிர்பாராத சம்பவம் என்று நான் சொன்னேன் அல்லவா. உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரை அது அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான். அவள் ஒரு சம்பவம் செஞ்சுட்டான்னு சொல்ற மாதிரியான சம்பவம்தான். அதைப்பற்றி விவரமாகவே சொல்கிறேன்.  

தியாகராய நகரில் இருந்த நாங்கள், அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு குடிவந்திருந்தோம். அருணாசல நாயக்கன் தெரு, 9ஆம் நம்பர் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். நாங்கள் அந்த இடத்திற்கு குடிவந்தபோது அங்கு ஏராளமான பெரிய பலகைகளும், இன்னும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் காணப்படும் பல பொருட்களும் இருந்தன. ஒருக்கால் அங்கிருந்து ஏதாவது பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இப்போது லட்சுமி லாட்ஜ் (நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் பழைய வீடு) இருக்கும் இடத்திற்கு அருகில்தான் ஆந்திர மகிளா சபாவின் பள்ளி இருந்தது. இந்தப் பள்ளியில்தான் நானும், என் தங்கை கிருஷ்ணாவும் (நடிகை கிருஷ்ணகுமாரி) படித்துவந்தோம்.

அருணாசலநாயக்கன் தெருவிலுள்ள எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, நேப்பியர் பூங்கா வழியாக ஹிந்து பத்திரிகை அலுவலகம் இருக்கும் இடத்திற்கு நடந்து வருவோம். இப்ப பெரியார் சிலை இருக்கே அங்கேதான் டிராம் வண்டி நிற்கும். அதில் ஏறிக்கொண்டு, மயிலாப்பூரில் உள்ள எங்கள் பள்ளிக்குச் செல்வோம்.

பிற்பகல் எங்களுக்கு வேண்டிய மதிய  சாப்பாட்டை ஒரு கேரியரில் போட்டுக் கொடுப்பார் அம்மா. "நான் இதை எடுத்துக்கொண்டு வரமாட்டேன். என் கை வலிக்கிறது' என்பாள் தங்கை கிருஷ்ணா. "எனக்கும்தான் கை வலிக்கிறது, எடுத்துக்கொள்ளமாட்டேன்' என்று பதிலுக்கு நானும் சொல்வேன். சாப்பாட்டு கேரியரால் அடிக்கடி எங்க ளுக்குள் இப்படிச் சண்டை வந்துவிடும்.

பிறகு ஒருநாள் எங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தோம். அதாவது ஷிஃப்ட் முறையை ஏற்படுத்திக்கொண்டோம். முதல்நாள் அவள் கேரியர் சுமந்துவந்தால், மறுநாள் நான் கேரியரைத் தூக்கி வரவேண்டும். நடுவில் விடுமுறை வந்துவிடும். "இப்போது என்ன செய்வது?' என்று தங்கை கிருஷ்ணா கேட்பாள். "முதலிலிருந்து பழையபடி ஆரம்பிக்க வேண்டியதுதான்' என்று பிடிவாதமாக நான் சொல்லிவிடுவேன். சாப்பாடு கேரியர் விஷயத்தில் நாங்கள் அன்று நடந்துகொண்ட இந்தச் செயலை இப் போது நினைத்துப் பார்த்தால் எனக்கு சிரிப்பாகவும், சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டோமே என்பதும் தெரி கிறது. அப்போது நாங்கள் சிறுபிள்ளை கள்தானே? அப்படி நடக்காமல் வேறு எப்படி நடந்திருக்க முடியும்?

ஒருநாள்... பள்ளியிலிருந்து நானும், தங்கை கிருஷ்ணாவும் வீட்டுக்குத் திரும்ப டிராம் வண்டிக்காக காத்திருந்தோம். 1946ஆம் ஆண்டின் துவக்கம் அது என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு 15 வயசு. உலக யுத்தம் முடிந்து பழையபடி சென்னை களைகட்ட ஆரம்பித்த நேரம். எங்கே பார்த்தாலும் ராணுவ உடையில் பல சிப்பாய்கள். எந்த வண்டியில் பார்த்தாலும் ஜே... ஜே..வென்று ஒரே கூட்டம். 

sowcarjanaki1

அப்போது ஒரு வண்டி வந்தது. நானும் கிருஷ்ணாவும் ஓடிப்போய் முண்டியடித்துக்கொண்டு அந்த டிராம் வண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டிக்குள் தாராளமாக நிற்கக்கூட இடமில்லை. ஒரு கையில் புத்தகம், மறு கையால் தலைக்கு மேலே இருந்த டிராம் வண்டியில் தொங்கிக் கொண்டிருந்த தோல்பட் டையை நான் கீழே விழுந்துவிடாமல் இருப்ப தற்காகப் பிடித்துக் கொண்டிருந்தேன். கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்தார்.

என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தவரைக் கண்டதும், தோல் பட்டையிலிருந்து கையை எடுத்து டிக் கெட் வாங்க சில்லறையை எடுத்து அந்தக் கையில் தயா ராக வைத்துக்கொண்டிருந் தேன். அப்போது திடீரென்று ஒரு பிரேக். டிராம் வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. எந்தவித பிடிப்புமில்லாமல் நின்றுகொண்டிருந்த நான், கால் இடறித் தடுமாற, என் கையிலிருந்த சில்லறை பூரா வும் அப்படியே வண்டிக்குள் விழுந்துவிட்டது. கண்டக்டர் என்னிடம் வந்துவிட்டார். நான் கீழே விழுந்த சில்லறையை எடுப்பதற்காக வேகமாகக் குனிந்தேன். அதேசமயம், என் அருகில் நின்றிருந்த வாலிபர்... என் நிலையைக் கண்டு அவர் சில்லறைக் காசை எடுத்துக் கொடுக்க குனிந்தார். அவர் கீழே குனிந்து காசை தேடிக் கொண்டிருந்தார். நான் அவ ரையே பார்த்துக்கொண்டிருந் தேன். சிதறிய காசை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் "நன்றி' என்ற சொல்லை உதிர்த்துவிட்டு கை நீட்டி வாங்கிக்கொண்டேன். 

அப்போதுதான் நான் அந்த வாலிபரின் முகத்தை முதன்முதலாகப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். ராமனும், சீதையும் மிதிலையில் முதன்முதலில் பார்த்துக்கொண் டார்களே அப்படித்தான் நாங் களும் பார்த்துக்கொண்டோம்.

அப்புறம் நடந்தது என்ன?

(பேசுறேன்...)