(37) என்னை உயர்த்திய இரு கோடுகள்!

சௌகார் ஜானகி என்றாலே அவர் குடும்பப் பாங்கான வேடங்களில் நன்றாக நடிப்பார், துயரமான காட்சிகளில், குடும்பத்தின் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக நடிப்பார் என்று சில டைரக்டர்கள் என்னைப் பற்றி முடிவுசெய்து அதைப்போன்ற வேடங்களில் என்னை நடிக்க வைக்க தேடிவந்தனர்.

Advertisment

ஒரு அழகான பெண் அழுது கண் கலங்கும்போது, எல்லோரும் அவருக்காக அனுதாபப்படுவார்கள்.        இவருக்கா இந்த நிலை என்று கலங்குவார்கள் என்றிருந்த காலகட்டத்தில்,    என்னைக் கலகலப்பான நடிகையாக அடையாளம் காட்டியவர் இயக்குனர் சிகரம்                          கே.பாலசந்தர்தான். 

Advertisment

"எதிர் நீச்சல்' பட்டு மாமியை என்னால்  மறக்க முடியாது. அதேபோன்று இயக்குனர்             கே.பாலசந்தர் என் வாழ்வில் மறக்க முடியாத டைரக்டர். பாலசந்தர் சார் எனக்கு அறிமுகமானது நாடகங்கள் வாயிலாகத்தான். அப்போது அவர் "ராகினி கிரியேஷன்ஸ்' என்கிற அமெச்சூர் நாடகக் குழு வைத்திருந்தார். நான் திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தபோது என்னை எதிர்பாராத ஒரு சம்பவம் நாடக உலகில் நுழைய வைத்துவிட்டது. 

திரையுலகில் நான் சௌகார் என்றால் நாடக உலகில் நான் "பட்டு மாமி' என்று புகழ் பெற்றேன். மடிசார் கட் டிண்டு பிரா மின் ஸ்லாங் பேசி நடிக்க நான் தயங் கியபோது, என்னை அசல் பட்டு மாமியாக மாத்திய       வர் பாலசந்தர்தான். அவர்தான் பிராமண பாஷையை அழகாகப் பேச எனக்குப் பயிற்சி கொடுத்தார். 

Advertisment

எனக்கும் நாடகங்களில் நடிப்பதென்றால் ரொம்பப் பிடிக்கும். ஒருசமயம் நான் "உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பில் நடித்துக்கொண்டி ருந்தபோது  ஒருநாள் மாலையில், சிவாஜி சாரிடம் சென்று, "சார் எனக்கு நாடகத்துக்கு நேரமாச்சு! கொஞ்சம் சீக்கிரமா கிளம்புறேன்'' என்று சொன்னேன்.

"எதிர்நீச்சல்' நாடகத்தில் "பட்டு மாமியா  நடிக்கப்போறியா? போய் வா'' என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தை அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை உணரவைத்தது. கலையை எந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதைப் புரிய வைத்தன. "நானும் பிராமின் ஸ்லாங் பேச கத்துக்கிட்டு, அசத்தப்போறேன் பாரு'' என்று சிவாஜி சார் அன்று சொன்னது போலவே, "வியட்நாம் வீடு', "கௌரவம்' படங்களில்  பிராமின் ஸ்லாங்கில் பேசி அவர் அசத்திவிட்டார். அதுதான் அவருடைய தொழில் பக்தி. 

தொடர்ந்து பாலசந்தரின் "மெழுகுவர்த்தி', "நீர்க்குமிழி', "நாணல்', "எதிர்நீச்சல்' போன்ற புகழ்பெற்ற நாடகங்களில்  முக்கியமான வேடங்களில் நடித்தேன். நாடக உலகில் பட்டு மாமியாக பேசப்பட்டேன். நான் நாடகங் களில் நடித்தபோது சம்பளம் எதுவும் வாங்கியதில்லை, என்னுடைய காரிலேயே சென்று நடித்துக் கொடுத்து வந்தேன். காரணம், நாடகங்கள் மீது எனக்கிருந்த ஈர்ப்பு. ரசிகர்களின் பாராட்டை, கைத்தட்டலை நேருக்கு நேராக பெறுவது மகிழ்ச்சியே!

"பாமா விஜயம்'. இதிலும் எனக்கு நகைச் சுவை கலந்த கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் பாலசந்தர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் என்னையே நடிக்க வைத்தார். அது மட்டுமல்ல இந்த மூன்று மொழிகளிலும் நானேதான் சொந்தக் குரலில் பேசினேன். 

" "எதிர்நீச்சல்', "பாமா விஜயம்' போன்ற படங்களில் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்து சபாஷ் வாங்கிவிட்டீர்கள். அடுத்து ஒரு சீரியஸ் படம் பண்ணுவோம்'' என்று சொல்லி   "இரு கோடுகள்' படத்தினை இயக்கினார் கே.பாலசந்தர். 

தனது படங்களில் பல புது முயற்சிகள் மேற்கொள்வதில்  அவர் திரையுலக மேதை. இந்தப் படம் பற்றி அன்று 'பேசும் படம்' பேசியதை இங்கு தருகிறேன்.

"தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் சென்று பிழைக்கும் தமிழாசிரியர். அவரின் ஒரே மகள் காசியிலே வளர்கிறாள்.  அங்கு அவள் புதிய தமிழ் குரல்  கேட்கிறாள். குரலுக்குரியவன் ஒரு தமிழ் மகன். அவன் கன்னித்தமிழில் பேசி, அந்தக் கன்னியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டான். அவள் அவனை மணந்தாள். யாரும் அறியாத திருமணம் அது. தமிழாசிரியர் கொதித்தார், ஆசி கூற மறுத்தார்.  இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். "தமிழ் வரலாறு' கூறி ஆசி பெற்றாள்.

sowcarjanaki1

ஒரு நாள் அவளை விட்டு கணவன் பிரிந்து போய்விட்டான். ஆனால் அவன் அன்பின் சின்னம் அவள் வயிற்றிலே... அவனைப் பிரிந்த துயரம் நெஞ்சிலே! அவள் படித்தாள், பட்டம் பெற்றாள், கலெக்டர் ஆனாள்.  அலுவலகத் திற்கு முதல்நாள் சென்ற போது...  கலெக்டரான அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட குமாஸ்தாக்களில் அவளுடைய கணவனும் ஒருவன்.    அவனைக் கண்டதும் திகைத்தாள், உள்ளத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சி. அதே சமயத்தில் கொண்டவனை கண்டுவிட்ட மகிழ்ச்சி. கைபிடித்தவன் அன்று கைவிட்டுப் போனவன்தானே என்கிற வேதனை. முதல் சந்திப்பிலே அவனிடம் அவள் கொண்ட மகிழ்ச்சி, பல ஆண்டு கள் சென்றபின் இப்போது ஏற்பட்ட உணர்ச்சி... அப்பப்பா! வர்ணிக்க வார்த்தை இல்லை.

தான் தலை குனிந்து நின்றபோது தாலி கட்டியவன், இப்போது ஃபைலை தொலைத்து விட்டு, தன் முன் தலைகுனிந்து நின்றபோது, அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனாலும் கடமை தடுத்தது அவளை. ஒரு கலெக்டராக அவனை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்துகிறாள். லஞ்ச குற்றத்திற்காக, பணம் வாங்கியதற்காக, கவனக் குறைவுக்காக. இந்தத் தற்காலிக பணிநீக்கம்.

 பழிவாங்கும் உணர்ச்சியில்லாத அவள், அவனை தண்டிக்க நேரு கிறது. மனதால் இணைந்து மணத்தால் பிணைந்து சூழ்நிலையால் பிரிந்து கிடந்த அவர் களை, புதிதாக  எழுந்த ஒரு வதந்தி  இணைத்தது. தன் இதயத்தில் அமர்ந் தவனின் சந்தேகம் ஒருபுறம். மாமனாரே மருமகனை பழிவாங்க முற்பட்ட கொடுமை ஒரு புறம். எதிரே நிற்கும் கணவனிடம் மனைவி என்று உரிமை கொண் டாட முடியாத துயரம் ஒரு புறம். அவளுக்கு எதையும்  தாங்கும் இதயம். அதனால் தான் பைத்தியம் பிடிக்க வில்லை, துன்பம் தொடர்கிறது.

" "இரு கோடுகள்' படத்தில் உயர்ந்து நின்ற கோடு சவுகார் ஜானகியின்  பாத்திரப் படைப்பு. சராசரி பெண் ஜானகியின், கலெக்டர் ஜானகியின் அற்புதமான நடிப்பில் நாம் கட்டுண்டு கிடந்தது அரிய அனுபவம். ஜானகியின் நடிப்பை வெகுவாக பாராட்டி யவர் பலர்.  "பாத்தி ரங்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு நம்மிடம் உள்ள திறமையை வெளிப்படுத்தி நடித்தால் வெற்றி நிச்சயம்'' என்று சௌகார்ஜானகி சாதாரணமாகக் கூறிவிட்டார். ஆனால் அதைச் செயல்படுத்தி காட்டும் திறமையை சவுகார் ஜானகியிடம் மட்டும்தானே நாம் சமீப ஆண்டுகளில் காண்கிறோம்'' என்று பேசும் படம்  சொன்னது... மகிழ்ந்தேன்.

ஒரு தாயாக என் இரண்டாம் மகளுக்கு வரன் தேடியபொழுது நடந்தவை என்ன?

(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்

________
எனது கதாநாயகர்கள்!

தமிழில் சிவாஜிகணேசன் .ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர்., ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன்,  முத்துராமன். போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்ததுபோல, தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான என்டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், பிரேம்நசீர், தேவ்ஆனந்த், ராஜ்குமார் போன்ற ஸ்டார் களின் கதாநாயகியாக நடித்தது மறக்க முடியாதது.