(36) "ஜானகி எனக்கு நல்ல பார்ட்னர்'' -சிவாஜிகணேசன்

சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரிய அனுபவம். உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகர்களில் சிவாஜியும் ஒருவர். வேறு எந்த நடிகரும் "உத்தம புத்திரன்' போல இரட்டை வேடங்களில், "தெய்வமகன்' போல மூன்று வேடங்களில், "நவராத்திரி' போல  ஒன்பது வேடங்களை ஏற்று வித்தியாசமாக நடித்திருக்கமாட்டார்கள். அந்த நடிப்புச் சக்கரவர்த்திக்கு "தாதா சாகேப் பால்கே' விருது கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம். இது தமிழ்த் திரையுலகத்திற்கே கிடைத்த விருது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு சன் டிவியில் "முதல் மரியாதை' பார்த்தேன். எவ்வளவு கிளாஸிக்கலான படம். அது என்னை உலுக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர் நடித்த படங்களில் எனக்கு "முதல் மரியாதை' ரொம்ப பிடித்திருந்தது. அந்த க்ளைமேக்ஸ் சீன் அற்புதம். 

Advertisment

 ஒரு சமயம் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர்களில் பொருத்தமான ஜோடி யார் என்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் சொன்ன ஒரு வரி பதிலில்...  "ஜானகி எனக்கு நல்ல பார்ட்னர்' என்று பாராட்டியது,  என்னால் மறக்கவே முடியாத பாராட்டு. ஒரு பெரிய நடிகரிடம் தனக்கு பொருத்தமான ஜோடி என்று பாராட்டுப் பெற்றதை பெருமைக்குரிய விருதாகக் கருதுகிறேன்.

Advertisment

என்னுடைய சுதந்திரமான செயல்பாடுகள், நேர்படப் பேசும் தன்மை ஆகியவை அவரைப் பெரிதும் கவர்ந்தன. நாடகத்தில், சினிமாவில் பத்மஸ்ரீ சிவாஜிகணேசன்  எவ்வளவு பெரிய நடிகர் என்பது  எல்லோருக்கும் தெரியும், ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் நடிக்கவே தெரியாத ஒரு அப்பாவி நடிகர்.

அவர் அரசியலில் ஈடுபட்டபோது எனக்கு பகீரென்றிருந்தது. எங்கே அவருடைய நடிப்பை இழக்க நேரிடுமோ என்று பயந்தேன். சிவாஜி கூட்டுக் குடும்ப கொள்கையில் பெரும் நம்பிக்கை கொண்டவர். குடும்பத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். எல்லோரிடமும் பாசமாக இருப்பார். 

Advertisment

சிவாஜி கணேசன் ஏற்று நடித்த ஒவ்வொரு வேடமும் மணிமணியானவை. சிவாஜியுடன் நடிக்கும்போது நம்முடைய நடிப்புத் திறன் மேலும் மெருகேற்றப் படுகிறது என்றால் மிகையில்லை. "படிக்காத மேதை'யில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போட்டிகளுக்கு இடையில்தான் நான் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய கதாநாயகி களே அப்போது அவருக்கு தேவைப்பட்டார்கள்.    "படிக்காத மேதை'யில் அவரை மிகவும் ரசித்தேன். மறுநாள் நடிக்கவேண்டிய காட்சியை இரவு வீட்டிலேயே ஹோம்வொர்க் பண்ணுகிறாரோ என்றுகூட நினைத்ததுண்டு. சிவாஜி ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார் என்று விமர்சிப்பதும் உண்டு. அது அவசியம் என்றுகூட சொல்லலாம். கேரக்டருக்கு தேவைப்பட்டால்தான் அந்த மாதிரி செய்வார். மூன்று வேடங்களில், ஒன்பது வேடங்களில் நடிக்கின்றபோது ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் அந்த மாதிரி (ஓவர் ஆக்ட்) பண்ணவேண்டியது அவசியம்.

"பாலும் பழமும்' படத்தில் சிவாஜியின் முறைப்பெண் ணாக நடித்திருந்தேன். எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கும்போது, வெறும் பார்வையாலேயே நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டலைப் பெற்றுவிடுவார். அப்படியொரு ரொமாண்டிக் லுக் கொடுப்பார். அவர் தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக இருந்தால்போதும் என்று எண்ணாமல், தன்னுடன் நடிக்கும் மற்றவர்கள் கேரக்டரும் சிறப்பாக வரவேண்டும் என்று நினைப்பார். உடன் நடிப்பவர்களை "இப்படி நடி, இப்படி பேசு' என்று டிப்ஸ் கொடுப்பார்... சிவாஜி தி கிரேட்! 

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த "புதிய பறவை' படம், தமிழில் எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் நான் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந் தாலும், "புதிய பறவை'யில் அதுவரைக்கும் யாருமே செய்யாத ரொம்ப வித்தியாசமான டூயல் ரோல் எனக்கு கிடைத்தது. அந்த டூயல் ரோலில் ஒரு ரோல், அப்போது யாருமே நடிக்க தயங்கிய நெகட்டிவ் ரோல். நான் நடிப்பதற்கு ஓ.கே. சொன்ன பிறகும்கூட, அதற்கு அந்தப் பட டைரக்டர் சம்மதிக்கவில்லை.

அதற்குக் காரணம், முன்பு நான் நடித்த ஹோம்லியான வேடங்கள். குடும்பப் பாங்கான நடிகை என்று எனக்கிருந்த இமேஜை  வைத்து அந்த ரோலில் என்னைப் போடுவதற்கு  படத்தின் டைரக்டர் மிகவும் தயங்கினார். ஆனால் அந்த ரோலை என்னால் நிச்சயமாக சக்சஸ்ஃபுல்லாக பண்ண முடியும் என்று நம்பி அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்துத்தான் பார்க்கலாமே என்று முழு நம்பிக்கையோடு சொன்னவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவர்களின் நம்பிக்கையை அந்தப் படத்தில் நான் காப்பாற்றினேன் என்பது, அந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை ரசிகர்களும் பத்திரிகைகளும் பாராட்டும் போது தெரிந்தது.  அந்த அளவுக்கு அந்தக்காலத்தில் தன்னுடன்  நடிக்கின்றவர்கள் மீது  மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அரிய குணங்கள் அவர்களிடம்  இருந்ததனால்தான் அப்போது இருந்த சினிமா ஸ்டார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம்நசீர் போன்ற நடிகர்களால் அவ்வளவு வருஷங்கள் சினிமா இண்டஸ்ட்ரியில்  ரூல் பண்ண முடிந்தது. சிறந்த ஆளுமைகளாக அவர்கள் திகழ்ந்தார்கள். இதை நான் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

பிரபல ஹிந்தி நடிகை மீனாகுமாரி போல மாறுபட்ட கேரக்டர்களில், அதிலும் குறிப்பாக டிராஜடி வேடங்களில்தான் சௌகார் ஜானகி நன்கு சோபிப்பார் என்று சில சினிமா ஆர்வலர்கள் அந்தநாளில் கூறி வந்த தருணத்தில்... அந்த கருத்தை உடைத்தார் ஒரு டைரக்டர். எனக்கான புதிய பாதையை வகுத்துக் கொடுத்தார் அந்த டைரக்டர். 

யார் அந்த டைரக்டர்?              

  (பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்

sowcarjanki1