(35) உண்மையில் சிவாஜி எப்படிப்பட்டவர்?


டிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நடிப்பதற்குப் பெரிய அதிர்ஷ்டம்  செய்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வத்தோடு நடிக்கிறவர்களை அவர் கொண்டாடுவார். சிவாஜி பழகுவதற்கு மிக இனிமையானவர். "படப்பிடிப்பின்போது நடிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்' என்பார். அதாவது  வேலை நேரத்தில் வேலை, விளையாட்டின்போது விளையாட்டு -இதுதான் அவர் சொல்வார். லஞ்ச் பிரேக்கில் ஒன்றாக அவருடன் உட் கார்ந்து சாப்பிடும் போது, அரட்டை அடித்துச் சிரித்துக் கொண்டிருப்போம். அவரும் ரொம்ப ஜாலியாக அரட்டை யடிப்பார், கல கலப்பாக ஜோக் அடிப்பார்... சிரிப் பார். அவர் வீட்டிலிருந்து ஸ்பெஷலாக பத்துபேர் சாப்பிடும் அளவுக்கு உணவு வரும். எங்களோடு அவர் உணவைப் பகிர்ந்துகொள்வார். அதேபோல நாங்கள் கொண்டுவந்த உணவையும் வாங்கி சாப்பிட்டுப் பார்ப் பார். நான் கைப்பட சமைத்துக் கொண்டு போகும் கூட்டு, பொரியல் போன்ற வற்றை வாங்கி சாப்பிட்டு, "நன்றாக யிருக்கிறது, இதே போல செய்ய சொல்ல வேண்டும் கமலாவிடம்' என்பார்.

Advertisment

உணவு இடைவேளை முடிந்து சிவாஜி செட்டுக்கு போய்விட்டார் என்றதும், பரபரப்பு தொற்றிக்கொள்ளும் (சிங்கம் கிளம்பிடுச்சு  என்பது போல). அப்போது சிரிப்பு, அரட்டை எதற்கும் இடமில்லை. அவர் நடிப்பில் ஒரு தவம்போல் ஆழ்ந்துவிடுவார். அவ்வளவு ஏன், சில நேரங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். நான் லஞ்ச் பிரேக்கில் அவருடன் அரட்டையடித்து, சிரித்து கிண்டல் செய்து எத்தனை பேசினாலும் சிரித்துக்கொண்டு நம்மை கலாய்ப்பார். அவருடன் நடிப்பது என்று வந்துவிட்டால்,  நான் பயப்படுவேன். காரணம் அவருடைய அசாதாரணமான திறமை, அபரிமிதமான தொழில் பக்தி. யுத்த களத்துக்குப் போவது போல என்னை நான் தயார்நிலையில் வைத்துக்கொள்வேன்.  உணவு இடை வேளையில் நம்முடன் அரட்டையடித்த சிவாஜியா இவர்? என்று பிரமித்து பார்க்கும் அளவுக்கு... அந்தப் பாத்திரமாகவே மாறி இருப்பார். அந்த ஷாட் நடித்து முடித்த பிறகுதான், அவர் சகஜ நிலைக்கு திரும்புவார். கிண்டல் பண்ணி தமாஷாக பேசுவார். சிரிக்காமலேயே கிண்டல் பண்ணுவார், நாங்கள் அதை ரசிப்போம்.

Advertisment

நான் சில சமயங்களில் தாமதமாக படப்பிடிப்புக்குச் சென்றால், நேராக அவரிடம் சென்று "ஸாரி' கேட்டுக்கொள்வேன். வீட்டில் பிரச்சினை அதனால்தான் தாமதமாகிவிட்டது என்பேன்.    சரி என்பது போல மெது வாக தலையசைப்பார், அதிலும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும்.    சினிமாவில் "வசனம் பேசு வதில் தனிப் பாணியை உருவாக்கியவர் அவர்தான்'.  எந்த வசனத்தை எந்த மாதிரி பேச வேண்டும். எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்பதற்கு அவர் ஒரு டிக்ஸ்னரி. 

"திருவிளையாடல்' படத்தில்  கடற் கரையில் சிவாஜி நடந்துபோவாரே, பார்த்திருக்கிறீர்களா? மறுபடியும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள். "வாட் எ ஷாட்' என்ன நடை அழகு!  எத்தனை அற்புதமான ஷாட் அது. ஒரு மாபெரும் கலைஞராகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன். அவர் கதாபாத்திரங்களை ஸ்டெடி பண்ணுவதில்லை. கதை வசனகர்த்தாக்களை ஸ்டெடி  பண்ணுவார். அவர்கள் தங்கள் மனதில் என்ன நினைத்து அந்தக் கதாபாத்திரத்தை, காட்சியை, அந்த வசனத்தை எழுதியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து அதை உள்வாங்கி, அதற்கு தன் நடிப்பால் வடிவம் கொடுப்பார்.

Advertisment

"பாபு' படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் சிவாஜி பேசும்போது என்னைக் குறித்து சொன்ன திருக்குறள் போன்ற இரு வரி பாராட்டு. 

"இவளை சாதாரணமாக நினைக்காதீங்க, விட்டால் நடிப்பில் நம்மைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவா'' -மனம் திறந்து அவர் (சிவாஜி)  சொன்ன இந்த பாராட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. 

நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர் இனிய நண்பர் ஏ.சி. திருலோகச்சந்தர் எழுதி இயக்கி தயாரித்த முதல் படம் "பாபு'. இதில் பேபி ஸ்ரீதேவி எனக்கு மகளாக நடித்தார். பாபு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது நடந்த ஒரு சம்பவம். சிவாஜி ஓடிவந்து என் கைப்பிடித்து பாராட்டிய சம்பவம் அது. படத்தில் என் மகள் அம்மு (ஸ்ரீதேவி) அவரை (சிவாஜியை)  "ஏய் ரிக்ஷாக்காரா'' என்று கூப்பிடுவாள். அப்படிக் கூப்பிடாதேன்னு உனக்குச் சொல்லி யிருக்கேன்ல'' என்று சொல்லி மகளை நான் அடிக்கிற மாதிரி ஒரு காட்சியை அன்று படமாக்கவிருந்தார்கள். அப்போது சிவாஜி என்னைக் கூப்பிட்டு தன் அருகில் உட்கார வைத்து  "பால்முனி படம் பார்த்திருக்கீங்களா? அதுல இதேபோல ஒரு சீன் வரும். அதே மாதிரியான நடிப் பை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார். 

"முயற்சி பண் றேன் சார்'' என்று அவரிடம் சொல்லி விட்டு வந்து கேமரா முன் நின்றேன்.   மனதில் ஆயிரம் எண்ணங்கள். சிவாஜி சொன்ன மாதிரி நடிக்கவேண்டும். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டு   நடித்தேன். அந்த காட்சி ஒரே டேக்கில் ஓ.கே. ஆயிடுச்சு. உடனே சிவாஜி ஓடிவந்து "நான் எதிர்பார்த்த மாதிரியே பண்ணிருக்கே'' என்று கூறி, கைகுலுக்கி பாராட்டினார். 

நடிப்பின் பல்கலைக்கழகமே ஒரு மாணவியான எனக்கு நற்சான்றிதழ் கொடுத்தது போல ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

பாலும் பழமும் படத்தில் எனக்கு சிவாஜியின் இரண்டாம் மனைவி வேடம் என்றாலும், அந்தப் படத்தில் ஒரு சின்ன வருத்தம் எனக்கு. அது எதிர்பாராத நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படத்தில் எனக்காக  பி.சுசீலா குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பாடலில் நான் நடனம் ஆடுவது போன்ற காட்சி இருந்தது. அதற்காக நடன ஒத்திகைக்குச் சென்றேன். 

முறையாக நடனமும் பயின்று வந்து "தென்றல் வரும்' என்ற அந்தப் பாடல் காட்சியில் நான் நடனமாடுவது படமாக்கப்பட்டது. என்ன காரணமோ படத்தில் அது இடம்பெறவில்லை படத்தின் நீளம்தான் காரணம் என்று டைரக்டர் சொன்னார். இதுகுறித்து சிவாஜியிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.

அப்புறம்...?

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்

sowcarjanaki1