(17) அம்மா போட்ட குண்டு.?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

Advertisment

என் மாமா பூர்ண பிரக்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே என் மீது தனி பிரியம் உண்டு. எனவே அவரது மனைவி திருமதி லீலா பாய்க்கு அசாம் சில்க்ஸ்  துணிகளை வாங்கியிருந்தேன் அதையும் என்னுடைய திருமணத்திற்காக செய்த நகைகள், புடவைகள் எல்லாவற்றையும் பெட்டியில் போட்டு ரயிலில் ஏற்றியிருந்தோம்.

Advertisment

சென்னைக்கு வந்து பார்த்தபோது அந்தப் பெட்டிகளை காணவில்லை. ஆரம் பத்திலேயே நான் சொல்லியிருந்தேனே? எங்கள் வண்டி பாகிஸ்தானில் உள்ள பார்வதிபூர் ஸ்டேஷன் வழியாகத்தான் போகவேண்டும். அப்போது பல பொருட்கள் சூறையாடப்படுவது உண்டு என்று சொன்னேன் அல்லவா, எங்கள் பெட்டியும் அப்படித்தான்  சூறையாடப்பட்டிருக்க வேண்டும். "ஷில்லாங்கிலிருந்து வரும்போது கூடவே என் தரித்திரமும் அதிர்ஷ்டமில்லாத தன்மையும் என்னை தொடர்ந்து வரவேண்டுமா' என்று என்னை நானே நொந்துகொண்டேன். கண்களில் நீர் கசிந்தது. நடக்க இயலாதவரின் கையிலிருந்த ஒரே ஆஸ்தியான அவனது கைக்கம்பும் பறிபோய் விட்ட கதை போல் ஆகிவிட்டது என் நிலை.

நடந்ததை, என் தந்தைக்கு  தந்தியடித்து "ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டேன். அவரோ, "செல்லாராம் (பிரபல துணிக்கடை) பொருட்கள் கூட இப்படித் தான் சூறையாடப்பட்டுவிட்டது. செல்வாக்கு உள்ள அவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியாத போது நாம் எம்மாத்திரம். நடந்ததை மறந்துவிடு' என்று பதில் கொடுத்திருந்தார். அவர் சொல்வதும் சரிதான். சாதாரணமான நம்மால் என்ன செய்ய முடியும்..? நடந்து விட்டதற்காக வருத்தப்படுவதைத் தவிர. 1949 ஜூன் மாதத்தில் இது நடந்தது. என் நினைவை விட்டு விரட்ட முடியாத சம்பவம் இது.

Advertisment

சென்னைக்கு வந்ததும் வீட்டில் மாமியை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. அவர் எப்போது வீட்டுக்கு வருகிறார், எப்போது கிளம்புகிறார் என்பதெல்லாம் ஒரே மர்மமாகவே இருந்தது.   அதே நேரத்தில் என் தங்கை கிருஷ்ணாவை சினிமாவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் படுமும்முர மாக நடந்தது. சில மேக்கப் டெஸ்ட்களும் நடந்தன. அப்போது தெலுங்கு டைரக்டர் சி.புல்லையா (பானுமதியை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர்) ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார் அவரிடம் ஒரு நாள் கிருஷ்ணாவை  அழைத்து சென்றார்கள்.

அவளைப் பார்த்த டைரக்டரும் மற்றவர் களும் "கிருஷ்ணா இன்னும் சின்னப் பெண்ணாக இருக்கிறார். நல்ல வளர்ச்சி அடைய வேண்டும்' என்று சொல்லிவிட்டார்கள். எனக்கும் என் தங்கை கிருஷ்ணாவுக்கும் ஒரு வருஷம் மூன்று மாதங்கள்தான் வித்தியாசம். அவள் ரொம்ப மெலிந்து எலும்பும் தோலுமாகத்தான் அப்போது இருந்தாள். "பார்க்க ரொம்ப ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கு... நல்ல ஆகாரம் கொடுத்து உடம்பு பிடிக்கவேண் டும். அப்போதுதான் முகத்தில் புது அழகு தெரியும்' என்று சில டைரக்டர்கள் சொன்னதும்...

அப்போது அவர்களுக்குள்  சினிமா மோகம் வந்துவிடவே, கர்ப்பிணியான என்னை  விட்டு, தங்கை கிருஷ்ணாவை விழுந்து விழுந்து கவனித்தார்கள். பழரசம், சத்துள்ள உணவு வகைகள், கால்ஷியம் ஊசி, டானிக்... இப்படியாக சினிமாவில் சேர்வதற்கு முன்பாகவே கிருஷ்ணாவுக்கு ராஜ உபசாரம் நடக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் மசக்கையான என்னை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏதாவது ஆசைப்பட்டு கேட்டாலும் கிடைக்காத நிலை எனக்கு. என் கண்களில் நீர் பெருகி, மனதில் துயரம் வந்து முட்டியது. 

ஒரு பெண் பிரசவ காலத்தில் இருக்கும் போது அவளை எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு சந்தோஷமாக நடத்த  வேண்டும். அவள் ஆசைப்பட்டதை வாங்கித் தரவேண்டும் என்று சொல்ல நான் கேள்விப்பட்டிருக் கிறேன். ஒரு கர்ப்பிணியான எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் விரும்பியதை வாங்கிக் கொடுக்கவும், சந்தோஷமாக பார்த்துக்கொள்ளவும் என் தாயாரும், அண்ணாவும் நினைக்கவில்லை, என் கணவரும்  எண்ணவில்லை. வேலைக்குப் போகாதவரின் மனைவியால் என்ன செய்ய முடியும்.? இந்த நிலைக்கு காரணம் என் கணவர் தானே அவரை ஆத்திரத்தோடு பார்ப் பேன்.  அவரோ "பொறுமை யாக இரு. இன்னும் நல்ல காலம் பிறக்கவில்லை' என்று காரணம் காட்டுவார். இந்தச் சூழலில், என் பலவீனமான உடல் நிலையைக் கண்டு என் மாமா எனக்கு ஹார்லிக்ஸ், ஓவல் டின் வாங்கி வந்து கொடுப்பார். அப்போது இதைப் பார்த்த என் அம்மா, ஒரு கொடுமைக்கார மாமியாரைப் போல பேசிவிட்டார். "இதையெல் லாம் அவளுக்கு வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி விடாதீர்கள், நாளைக்கே எங்களுக்கு கஷ்டமாகி விடும்' என்று என் அம்மா சொன்னதைக் கேட்டு என் மனம் குமுறியது... வேதனையால் துடித்தது.

வேலைக்குப் போய் சம்பாதித்து மனைவிக்கு ஆசை தீர வாங்கித் தரவேண்டிய கணவர்,  வீட்டில் சும்மாயிருந்தால் இப்படித்தானே மாமியார் வீட்டில் பேசத் தோன்றும். ஆனால் என் மாமா அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. எனக்குத் தேவையான மருந்துகள், டானிக் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார். என்னை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்  கொண்டார். அது மட்டு மல்ல, செலவோடு செலவாக சீமந்தத்தையும் அவரேதான் சிறப்பாக செய்துவைத்தார். எனக்கு பிரசவ வலி எடுத்ததும் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டிய சூழல் வந்ததும், இன்னொரு பிரச்சனை தலையெடுத்தது. என் அம்மா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.    "இவளை  டாக்டரிடம் அழைத்துப் போவதற்கு முன், யார் பில் கொடுப்பது? எப்படி கொடுப்பது?' என்ற  கேள்வியை என் தாயார் எழுப்பினார். கடைசியில் அந்தச் செலவையும் என் மாமாவே ஏற்றுக்கொண்டார். 

டாக்டர் மதுரநாயகம்தான் எனக்குப் பிரசவம் பார்த்தார். 1949ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி 4:30 மணிக்கு நான் தாயானேன். குழந்தை பிறந்ததும் ஏழு பவுண்டு இருந்தது.  செக்கச் செவேல் என்றும், கொழு கொழுவென்றும் என் குழந்தையைப் பார்த்த துமே என் வேதனை, வலி, வருத்தமெல்லாம் பறந்தோடிவிட்டது. தாய்மைக்குத்தான் எத்தனை சக்தி! கண்ணீரைத் துடைத்துவிடும் தனி சக்தி அதற்கு நிறைய உண்டு. நாளைய பற்றிய நம்பிக்கை தருவது தாய்மைதானே! என் கனவுகள், கற்பனைகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன. "குழந்தை பிறந்த நேரம் நமது கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். என் குழந்தைக்கு நல்ல துணிமணி வாங்கித் தரணும், குழந்தையை நல்லா படிக்க வைக்கணும், நாலு பேர் முன்னாடி நாமும் கௌரவமாக தலை நிமிர்ந்து நடக்கணும்' என்றெல்லாம் என் மனம் பல வகைகளில் இனிய கனவுகளை காணத் தொடங்கியது.

அந்தத் தருணத்தில்  இன்னொரு பெரிய மகிழ்ச்சியும் ஏற்பட்டது. எனக்கு பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக  இருக்கவேண்டும் என்ற என் விருப்பப்படியே பெண் குழந்தையாக பிறந்ததில் தனி மகிழ்ச்சி. "மிக்க நன்றி இறைவா' எனச் சொல்லிக்கொண்டேன். பதினோராம் நாள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. என் கணவரின் அக்கா பெயர் "யக்ஞா'. அவர்தான் அந்த குடும்பத்துக்கு குலதெய்வமாக மதிக்கப் பட்டவர். எனவே என் குழந்தைக்கு "யக்ஞ பிரபா' என்று பெயர் வைத் தோம்.  ஆனாலும் பேபி என்றுதான் அவளை எல்லோரும் அழைத்து வந்தோம். அவள் வளர்ந்து பெரியவளானபோதும், நான் அவளை பேபி என்றே செல்லமாக அழைத்து வந்தேன். பெரும்பாலான நேரம் நான் என் தாயாருடன்தான் இருந்தேன். குழந்தையை வளர்ப்பதற்கான எல்லா குறிப்புகளையும் அவர் எனக்கு சொல்லித் தந்தார்.

ஒரு மாதம்  உருண்டோடிய நிலையில் என் கணவர் என்னி டம் அதுவரை சொல்லாத ஒரு விஷயத்தைச் சொன்னார்.

அதென்ன விஷயம்?

(பேசுறேன்...)


__________________
பத்மஸ்ரீ பட்டு மாமி!

sowcarjanaki1

* 2007ல் "அமூலம்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது.

* கர்நாடக அரசு வழங்கிய  ஸ்ரீ கிருஷ்ண தேவராய விருது.

* 2015ல் கர்நாடக அரசின் ராஜ்யோத்சா விருது.

* 2019ல் ஸ்ரீ ரத்னா (பெண்களில் திலகம்) விருது.

* 2019ல் இந்திய சினிமாவின் பசுமை யான பொழுது போக் குக்கான "வொண்டர் வுமன் விருது' பெற்றார்.

* 2022ஆம் ஆண் டில் இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெற்றார் சௌகார் ஜானகி.