(15) மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்!
சந்தோஷத்திலும் பெரிய சந்தோஷம் ஒரு பெண் தாய்மை அடைவது. வருங்கால சந்ததியை சுமக்கின்ற அந்த அழகிய தருணம் அது. நான் தாயாகப் போகிறேன் என்பதை என்னைப் பரிசோதித்த டாக்டர் சொன்னபோது, இனம் தெரியாத ஒரு பெருமையும் பூரிப்பும், எனக்குள் உண்டானது. என் இதயத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆயிரமாயிரம் வாச மலர்களை சேர்ந்து முகர்ந்த சுகமான அனுபவம் எனக்குள் ஏற்பட்டது. உலகின் சிறந்த இசை யெல்லாம் ஒன்றாகத் திரண்டு என் செவிகளில் ஒலிப்பது போன்ற ஒரு சுக அனுபவம் உண்டாகியது.
ஒரு பெண் எத்தனை பெரிய பணக்காரியாக இருந்தாலும், மிகவும் ஏழையாயிருந்தாலும் எத்தனை மகிழ்ச்சிக்கிடையே இருந்தாலும், ரொம்ப சோகமயமான வாழ்க்கை வாழ்ந்த போதிலும், தாயாகப் போகிறோம் என்கிற செய்தி முதன்முதலாக அவள் வாழ்வில் கேட்கும் போது அவளது இதயத்தில் இவை அத்தனையும் மறைந்துபோய் புதிதாக ஓர் உணர்வும் சலனமும் ஏற்படுமே, அந்தச் சலனமும் உணர்வும்தான் எனக்கு அந்த வினாடி ஏற்பட்டது. விவரித்துச் சொல்ல முடியாத புல்லரிப்பு அது. வார்த்தைகளில் வடிக்க முடியாத உணர்வு அது. பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? கருப்பா? சிவப்பா? யாரைப் போல அதன் ஜாடை இருக்கும்? நம்மால் அதை சரியாகக் காப்பாற்ற முடியுமா? போன்று கேள்விகளுக்கு மேலே கேள்வி பிறக் கும். தாயாகப் போகிறோம் என்ற பெருமை யான உணர்வுதான் தலைதூக்கி நின்றது.
என்னுடைய நிச்சயமற்ற அந்த வாழ்க்கையிலும் எந்தப் பெற் றோர்களிடம் அதே பழைய அன்பு இருக்கும் என்று எண்ணி ஏமாற்றமடைந்த நிலையில் நின்றுகொண்டு இருந்த போதிலும், தாயா கப் போகிறோம் என்கின்ற இந்த பெருமைதான் எனக்கு பெரும் மன நிறைவை கொடுத்தது. புது நம்பிக்கையை விதைத்தது. ஆனால் அந்தச் செய்தி எனக்கு எத்தனை மகிழ்ச்சியை தந்ததோ அதே அளவுக்கு என் பெற்றோருக்கு அது பேரதிர்ச்சியைத் தந்தது.
""கல்யாணம் ஆகி பதினோரு மாசத்திற்குள் அவளுக்கு குழந்தை எதற்கு?'' என்று என் தந்தை கேட்டார். குழந்தை பிறக்காமல் தடுத்து விடலாம் என்றும் யோசனை தெரிவித்தார்கள். இம்மாதிரி செய்வது ஒரு பெரிய பாவகரமான செயல் என்று எனக்குப்பட்டது.
திருமணம் செய்து வைத்த பிறகு பெண்களின் பெற்றோர் அடுத்தபடியாக மிகமிக விரும்பி எதிர்பார்க்கும் நிகழ்ச்சி தங்கள் பெண் தாய்மை யடையப்போகும் நிகழ்ச்சியை தான். ஆனால் எனக்கு முதல் குழந்தை பிறக்கப்போகும்போது என் பெற்றோர் இப்படி சொன்னது எனக்கு ஆச்சரிய மாகவும், வேதனையாகவும் இருந்தது. இரண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்ற பிறகு இப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அவர்களது பேச்சு நியாயமானது என்று எனக்குப் பட்டிருக்கும். என் பெற்றோர் எனக்கு நல்லதையே நினைத்து இதை சொல்லியிருக்கலாம். இவ்வளவு சிறிய வயதில் குழந்தையைப் பெற்றுக்கொண்டு கஷ்டப்படு வானேன் என்ற கருத்திலும் சொல்லியிருக்கலாம். ஆனாலும் பனிரெண்டு குழந்தைகளைப் பெற் றெடுத்தவர்களான என் பெற்றோர்களிடமிருந்து இப்படிப்பட்ட எண்ணம் எழும் என்று என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
என் கணவரிடம் இதைச் சொன்னேன். ""நல்லது நடப்பதைத் தடுப்பது பாவம்'' என்று அவரும் என் கருத்தை ஆமோதித்தார். அதே சமயத்தில் என் பெற்றோர்களைப் பற்றி எந்த வகையில் முடிவெடுப் பது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/sowcarjanaki1-2025-12-06-02-48-15.jpg)
என் கணவர் ஊருக்கு புறப்பட வேண்டிய நாளும் வந்தது. நானும் அவருடனேயே திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தேன். எனக்கு என் பெற்றோர் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.
என் எண்ணத்தை கணவரிடம் தெரிவித் தேன். ""பழையபடி என்னை வரவேற்பார்கள். அன்பை காட்டுவார்கள் என்று நினைத்துதான் நான் வந்தேன். ஆனால் அந்த அன்பை நான் இங்கே காண முடியவில்லை. இப்போது அவர் களுக்கு விருப்பமில்லாமலேயே குழந்தையையும் பெறப் போகிறோம். எனக்கு என்னவோ இந்தச் சூழ்நிலையில் நானும் உங்களுடன் வருவது தான் சரியென்றுபடுகிறது'' என்றேன்.
""இவ்வளவு செலவு செய்து இங்கே வந்திருக்கிறோம். உனக்கும் உடம்பு இன்னும் பூரணமாக குணமாகவில்லை, அது மட்டுமல்ல... இப்படித் திடுதிப்பென்று கிளம்பிவிட்டால், அவர்களுக்கும் ஒரு மாதிரியாக இருக்கும். எனவே உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு இன் னும் சில நாட்கள் தங்கி இரு. நீ குணமடைந்ததும் எழுது. நானே உன்னை வந்து மீண்டும் அழைத்துப் போகிறேன்'' என்று சொல்லி என் கணவர் என்னைச் சமாதானப்படுத்தினார். அன்றைய தினம் என் கணவர் மட்டும் சரி என்று சொல்லியிருந்தால் நானும் உடனே கிளம்பி இருப்பேன். அவரை வழியனுப்பி வைத்தேன். என் வேதனைதான் எனக்கு துணையாக இப்போது நின்றது .
இரண்டு மாதங்கள் கழிந்ததும், விஜயவாடா வுக்குத் திரும்பிப் போய் விடலாம் என்று நான் நினைத்துக் கொண்டி ருந்த நேரத்தில்... என் கணவரிடம் இருந்து கடிதம் வந்தது. அவரே ஷில்லாங்குக்குப் புறப்பட்டு வருவதாக அதில் எழுதி இருந்தார். அவருக்கு அந்தப் பழைய வேலையில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்றும், அதனால் வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் என் தந்தையின் யோசனைப்படி ஒரு வியாபாரத்தில் ஈடுபடப் போவதாகவும் எனக்கு அவர் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்ததே தவிர, கணவன் வரப்போகிறாரே என்கின்ற சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.
விருந்தினராக வந்திருக்கும்போதே இருந்தாற்போல ஒரு சில மாதங்கள் நிம்மதியாக தங்கியிருக்க முடியாத என் பெற்றோர்களுடன் நிரந் தரமாக தங்கியிருப்ப தென்பது எவ்வளவு கஷ்ட மாக இருக்கும் என்பதை என் மனம் கற்பனை செய்து பார்த்துக் கொண் டது. ஆனால் நான் என்ன நினைத்து என்ன பயன்? காரியம் மிஞ்சிப் போய் விட்டது. ஏனெனில் அவர் தன் வேலையை ராஜி னாமா செய்துவிட்டு ஷில்லாங் வரும் நோக் கத்தில் இருந்தார். பழையபடி என் விதியை நான் நொந்து கொண்டேன்.
என் கணவர் வந்து சேர்ந்தார். ""நீங்கள் வேலையை ராஜினாமா செய்வதில் இவ்வளவு அவசரப்பட்டு இருக்க வேண்டாம்'' என்றேன். அவரோ, என் தந்தையின் வார்த்தை களில் தனக்குப் பூரண நம்பிக்கை இருந்ததாலேயே அப்படி செய்ததாக சொன்னார். ""உன் தந்தை விரைவிலேயே என்னை ஒரு வியாபாரத்தில் ஈடுபடுத்திவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக் கிறது'' என்றார்.
நான் பேச முயன்றும் வார்த்தைகள் நெஞ்சி லேயே சிறைப்பட்டுவிட்டன. கால தேவன் நாட்களை அடுக்கிக்கொண்டே போய்க்கொண்டி ருந்தான். வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து கொண்டு நேரத்தை வீணாக்க என் மனம் ஒப்பவில்லை. என் தங்கை கிருஷ்ணா அப்போது கான்வென்டில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் பரீட் சைக்கு படித்துக்கொண்டிருந் தாள். நான் என் தந்தையிடம் சென்று ""அப்பா கிருஷ்ணாவுடன் சேர்ந்து நானும் மெட்ரிக் படிக்கட்டுமா?'' என்று கேட் டேன். என் தந்தை தன் சம்மதத்தை தெரிவித்தார். என் கணவரும் "சரி' என்றார்.
என் கையில் இருந்த பணத்தைக்கொண்டு ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் வாங்கிக் கொண்டேன். இரவு நேரத்தில், கிருஷ்ணா படிக்காமல் இருக் கும்போது, அவளது புத்தகங் களை இரவல் வாங்கி படிப்பேன். என் கணவர் எனக்கு உதவியாக இருந்து பாடங்களை சொல்லிக் கொடுப்பார். குறிப்பாக கணக்கும் சரித்திரமும் எனக்கு அவ்வளவாக வராது. இன்றும் கணக்கைப் பொறுத்தவரை நான் அதே நிலையில் தான் இருக்கிறேன்.
காலத்துடன் சேர்ந்து என் வயிற்றில் உள்ள குழந்தையும் வளர ஆரம்பித்தது. அதன் அடை யாளங்கள் என் வெளி உடலில் தோன்ற ஆரம்பித்த போது எனக்கே அந்த நிலையில் பள்ளிக்கூடம் போய் வருவதற்கு கூச்சமாகவும், லஜ்ஜையாகவும் இருந்ததால், வீட்டிலேயே தங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது குடும்பத்தில் என்னை அவமானப்படுத்தும்விதமான ஒரு செயல் நடந்தது அதற்கு தனி விளக்கம் வேறு கொடுத்து என்னை மேலும் சங்கடப்படுத்தினார் என் தந்தை.
அப்படி என்ன நடந்தது..?
(பேசுறேன்)
படம் உதவி: ஞானம்
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/sowcarjanaki2-2025-12-06-02-48-37.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/sowcarjanaki-2025-12-06-02-48-02.jpg)