(14)  எங்கிருந்தாலும் வாழ்க!

ன் திருமணம் எங்கே நடந்தது... என் புகுந்த வீடு எங்கே? அப்போது என் காதலர் என்ன செய் தார் என்பதை சொல்ல மறந்துவிட்டேன். அதை இந்தப் பகுதியில் சொல் கிறேன்...

Advertisment

என்னுடைய வாழ்வின் சில சிறப்பான நாட்கள் ஏதேனும் சிறந்தநாளில் தொடங்கி  இருக் கின்றன. ஊமைப்பட காலம் முடிந்து இந்திய சினிமா பேசத் தொடங்கிய ஆண்டில் நான் பிறந்தேன். நான் காதல்வயப் பட்டதும், அது கைநழுவிப் போனதும், என் வீட்டார் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டியதும், அந்த என் திருமண நாளும் சுதந்திர இந்தியாவின் முதல் ஆண்டில்.  1947ஆம் ஆண்டு நவம்பர்  ஐந்தாம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் பச்சையப்பன் தெருவிலுள்ள சத்திரத்தில் காலையில் சுபமுகூர்த்த வேளையில் எனக்கும் குண்டூர் சீனிவாசராவுக்கும் திருமணம் நடந்தது. 

Advertisment

அதிகாலையிலேயே எழுந்து மஞ்சள் நீராடிவிட்டு, பட்டுப் புடவையும், நகையும் அணிந்து. "நான் மணமேடையில் வந்து அமர்ந்துகொண்டேன். எனக்கு முன் தெய்வீக ஹோமம் வளர்க்கப்பட்டு கனல்விட்டு எரிந்துகொண்டிருந்தது. சிறிய ஹோமம்தான் அது, இருந்தாலும் அதன் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. உள்ளத்தில் ஓர் அக்னி. என் எதிரே ஒரு அக்னி. என் அகம், புறம் இரண்டுமே எரிந்து கொண்டிருந்தது. நான் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஊமையாகிவிட்ட என் நெஞ்சம் மரத்துக்கிடந்தது.

"ஜானகி...' மணமேடையில் என் பக்கத்தி லிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன், சாந்தா அங்கே இருந்தாள். அவள் பார்வையில் இருந்து ஏதோ ஒரு பெரிய உண்மையை அவள் சொல்லத் துடிப்பது தெரிந்தது. என் அன்பர் என் திருமண நிகழ்வுக்கு வந்திருக்கலாம், தூரத்திலிருந்து மானசீகமாக என்னை வாழ்த்தியிருக்கலாம், இனி அதுகுறித்து பேசிப்பயனில்லை. மாணவி ஜானகி... திருமதி ஜானகி ஆகிவிட்டேன். 

Advertisment

திருமணமான சில தினங்களில் விஜயவாடாவுக்கு என் கணவருடன் குடித்தனம் நடத்த கிளம்பியபோது என்னுடன் யாரும் வரவில்லை.  புதுமணத் தம்பதிகள் தனிக்குடித்தனம் நடத்தப் போகும் போது, பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர்களோ, பிள்ளை வீட்டைச் சேர்ந்த பெரியவர்களோ, அந்தத் தம்பதிகளுடன் சென்று சிறிதுகாலம் தங்கி, குடித்தனம் நடத்த உதவி செய்வது உண்டு.

புதிய உலகில், புதிய வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதிகளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற பிரமையை இது ஓரளவுக்கு குறைக்க உதவும். என்னுடன் என் நம்பிக்கையும், தெய்வமும் தான் துணைக்கு வந்தது.  விஜயவாடாவில் சத்திய நாராயணபுரத்தில் ஒரு வீடு ஏற்பாடு செய் திருந்தார்கள். அது ஒரு மாடி வீடு. கீழ்ப்பகுதியில் எங்களுக்கு இடம் விடப்பட்டிருந்தது.   ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை. இப்படி குடும்பம் நடத்த  போதுமான அளவுக்கு வசதியாக இருந்தது அந்த வீடு. மாத வாடகை 37 ரூபாய்.

புதிய இடம், புதிய மனிதர்கள், பயம், பிரமிப்பு, சந்தோஷம், சுதந்திரம் எல்லாம் கலந்த வாழ்க்கையாக எனக்கு அது இருந்தது. எனக்கு அப்போது சமைக்கத் தெரியாது. வீட்டில்கூட என் தாயார் சமைக்கும்போது, அவருக்கு உதவியாக என் தங்கை கிருஷ்ணாதான் இருப்பாள்.   அடுப்பில் சாதம் இருந்தால் அதை வடிக்கத் தெரியும். தேங்காயை துருவி சட்னி செய்யத் தெரியும் .இதுதான் நான் அறிந்திருந்த சமையல். இதுகூட நானாக விரும்பி கற்றுக்கொள்ளவில்லை. என் தாயார் அவசரமாக எங்காவது வெளியே போவதாக இருந்தால் "ஜானகி அடுப் பில் சாதம் வச்சிருக்கேன் வடிச்சிடு. தேங்காயை துருவி சட்னி செய்துவிடு'' என்று சொல்லிவிட்டுப் போவார். அந்த நிர்பந்தத்தால் நான் கற்றவை இவை.

தனிக்குடித்தனம் வந்ததும் நானே சமைக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் கலக்கம். ஏதோ சமைத்துப் போடுவேன். அவரோ, நான் எதைச் செய்து போட்டாலும். "நன்றாக இருக்கு. பிரமாதமாக சமையல் செய்கிறாயே'' என்று சொல்வாரே  தவிர, ஒரு குறையும் சொல்ல மாட்டார். ஆனால் நான் சாப்பிடும்போதுதான் அது எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியும். உப்பிருந்தால் புளிப்பு இருக்காது, இரண் டும் இருந்தால் காரம் இருக்காது. கத்திரிக்காய் பொரியலில் வெந்தயத்தைத் தாளித்திருப்பேன். அது ஒரேயடியாகக் கசக்கும்... இத்தனையும் அவர் பொறுத்துக்கொண்டு "என் சமையல் நன்றாக இருக்கிறது' என்று பாராட்டியதை இப்பவும் நினைத்துப் பார்க்கிறேன். அவரது பெருந்தன்மை யை இது காட்டியது. ஆயினும் எனக்குள் இது உறுத்தியபடி இருந்தது.

அப்போது ஷில்லாங்கில் இருந்த என் தாயாருக்கு கடிதங்கள் எழுதினேன். "எனக்குச் சமைக்க சரியாக வரவில்லை, எதையெதை எப்படிச் செய்ய வேண்டும்' என்று கேட்டு எழுதினேன்.

என் தாயார் விளக்கமாக  சமையல் குறிப்பு களை எழுதி அனுப்பி வைத்தார். அந்த குறிப்புக ளைக் கொண்டு சமைக்க ஆரம்பித்தேன். சொல்லப் போனால் ஒரே மாதத்தில் நான் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். தேவை ஏற்பட்டதால் கற்றுக்கொண்டேன்.    காலப்போக்கில் என் பழைய ஆசாபாசங்களை இதயத்தின் அடித்தளத்தில் புதைத்துவிட்டு நான் இந்தப் புதிய வாழ்க்கையில் என்னைப் பிணைத்துக்கொள்ள பலவந்தமாக முயற்சிகள் எடுத்து வந்தேன்.

மெல்ல மெல்ல நான் திருமதி ஜானகியாக மாறி, வீட்டை அழகு படுத்த ஆரம்பித்தேன். கடைவீதிக்குப் போய் ஜன்னல்களுக்குத் திரைச் சீலைகளை வாங்கித் தைத்தேன்.  என் இஷ்டப்படி கொஞ்சம் தாராளமாகவே செலவு செய்ய ஆரம்பித்தேன். 

நாங்கள் குடியிருந்த வீட்டுக்கும் அவரது அலுவலகத்திற்கும் ரொம்ப தூரம் இருந்தது. எனவே அவர் வேலை செய்யும் இடத்திற்கு கொஞ்சம் பக்கமாக உள்ள வீடாக பார்த்தார். நாங்கள் வேறு ஒரு வீட்டிற்கு குடியேறினோம். எங்களுக்குக் கிடைத்தது மாடிப் பகுதி, தண்ணீர் கீழே இருந்துதான் கொண்டுவர வேண்டும். அங்கே குடியிருந்தவர்கள் எல்லாம் பிராமணர்கள். வேலைக்காரி வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். எனவே நானே கீழே போய் குடத்தில் தண்ணீர் கொண்டுவருவேன். எனக்குப் பழக்கமில்லாத இம்மாதிரியான வேலைகளினாலும், போதுமான ஓய்வு இல்லாததாலும், என் உடல் நலம் சிறிது சிறிதாக பாதிக்க ஆரம்பித்தது. அதை பொருட்படுத்தவில்லை. "என் கடமை என் கணவரைத் திருப்திபடுத்துவது. அவருக்குச் சமைத்து போடுவது' என்ற எண்ணத்தில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

என் கணவர் காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவார். அவர்  சென்றதும் தனிமை வந்து என்னைச் சூழ்ந்துகொள்ளும். பொழுதைப் போக்க புத்தகங்களைப் படிப்பேன். கண்கள் சோர்ந்துவிடும் வரை படிப்பேன். அப்படியே விழிகளைத் திரை யிட்டு படுத்துவிடுவேன்.  பழைய சிந்தனைகள் நாம் வேண்டாம் வேண்டாம் என்று உதறிப் பிடித்துத் தள்ளினாலும், என்னைச் சுற்றி சுற்றி வந்து வட்ட மிடும். தனிமைதானே பழைய சிந்தனைகளுக்கு உரம்.

ஆந்திர மகிள சபாவில் படித்தது, டிராம் வண்டியில் என் காதலரை சந்தித்தது கடற்கரைக் குப் போனது, கடைசியாக என் தோழி சுகுணா விடம் அவர் "ஜானகி எங்கிருந்தாலும் வாழ்க... சௌகரியமாக இருக்கட்டும்' என்று வாழ்த்துச் சொல்லி அனுப்பியது எல்லாம் என் மூளையை அரித்தெடுக்க ஆரம்பித்துவிடும். 

நான் தாயான சந்தோஷ செய்தியை அறிந்த தருணத்தில் இதையெல்லாம் என் மனது நினைத்துப் பார்த்துக்கொண்டது. அப்போது ஒரு முடிவெடுத்தேன்.

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்

______________
நக்கீரன் செய்தி எதிரொலி!

களங்கத்தைத் துடைத்த காவல்துறை!   

sowcarjanaki1

கடந்த நவம்பர் 19-21 நக்கீரன் இதழில் "காக்கி சட்டையின் காமச் சேட்டை! -குமுறும் பெண்கள்!'’என்னும் தலைப்பில் விருதுநகர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தலைமைக் காவலர் சுந்தர்ராஜ் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். விருதுநகரில் அழகு நிலையமும் தையல் பயிற்சி நிறுவனமும் நடத்திவரும் ராஜாத்தி என்பவர், 14-10-2025 அன்று சுந்தர்ராஜ் மீது பண மோசடி மற்றும் பாலியல் மிரட்டல் புகாரினை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்திருந்தார். அந்தப் புகார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டு,  10 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. 

சுந்தர்ராஜ் போலீஸ்காரர் என்பதால் புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டதாகவும், பண பேரம் நடந்துகொண்டிருப்பதாகவும் நமக்குத் தகவல் கிடைக்க, களமிறங்கினோம். 

இந்த விவகாரம் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், 24-11-2025 அன்று தலைமைக் காவலர் சுந்தர்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பணியிடை நீக்க உத்தரவில், "திருமதி ராஜாத்தியுடன் சட்டவிரோத நெருக்கம் கொண்டி ருந்ததற்காகவும், இதனால் பொதுமக்களிடையே காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், இந்த விஷயம் 19-11-2025 அன்று நக்கீரன் இதழிலும் வெளியிடப்பட்டதற்காகவும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின் கடுமையான குற்றச் சாட்டு குறித்த விசாரணை பரிசீலனையில் உள்ளது'’என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார். 

அந்தக் கட்டுரையில், காமச் சேட்டைகளினால் காக்கிச் சட்டையின் மானம் காற்றில் பறக்கிறதே’என ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தது நக்கீரன். காவல்துறை மீதான இந்தக் களங்கத்தைத் துடைக்கும்விதமாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

-ராம்கி