(12) கணவர் செய்த கோமாளித்தனம்!
ரெயில்வே பிளாட்பாரத்தைப் பார்த்தேன்... அங்கே இந்தியப் பயணிகளிடமிருந்து கைப்பற்றிய பொருட்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. சூட்கேஸ்கள், கூடைகள், ட்ரங்க் பெட்டிகள், துணிமணிகள், ப்ளாஸ்குகள் என்று எவ்வளவோ பொருட்கள் அங்கே இறைந்து கிடந்தன. அந்தப் பொருட்களைப் பார்க்கும்போது அதன் பின்னால் அவற்றைப் பறிகொடுத்த பயணிகளின் அழுகை ஒலிதான் என் காதுகளில் ரீங்காரமிட்டது. எப்போது, எந்த வினாடி நம்முடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படுமோ என்கின்ற பயத்தினால் என் உடல் உறைந்து கொண்டிருந்தது. அப்படி ஒன்றும் நடப்பதற்குள் ரயில் புறப்பட மணி அடிக்கப்பட்டது. என் உயிர் மீண்டும் திரும்பிவந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒருவழியாக வண்டி பார்வதிபூரை விட்டு கௌஹாத்திக்கு வந்து சேர்ந்தது. பயத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, நாங்கள் தெய்வத்தின் துணையுடன் வந்து சேர்ந்தோம் என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.
மறுநாள்தான் ஷில்லாங்குக்கு பஸ் இருந்தது. எனவே அன்று இரவு கௌஹாத்திலேயே தங்கிவிட்டு. மறுநாள் ஷில்லாங் பஸ்ஸில் புறப்பட்டோம். எங்கள் பயணப் பாதை மலைப் பிரதேசமாக இருந்ததால் வளைந்து, வளைந்து மேடு... பள்ளம், ஏற்றமும் இறக்கமுமாய் இருந்தது பயணம். அதோடு சில்லென்று காற்றும் வீசியது. எந்த திசையில் பார்த்தாலும் கண்களைக் கவரும், இதயத்தைக் குளுமைப்படுத்தும் ரம்யமான இயற்கை காட்சிகள்... பசுமை படர்ந்த மலைப்பிரதேசம்.
நாங்கள் சென்ற பஸ் நாங்க்போ என்ற இடத்தில் நின்றது. அங்கே ஒரு சிறிய தேநீர் விடுதி யும் இருந்தது. நானும் அவரும் இறங்கிச்சென்று பிஸ்கட்டும் தேநீரும் அருந்தினோம். திடீரென்று என் உடம்பில் ஒரு நடுக்கம், சில்லென்று வீசிய காற்றின் வேகம் என் உடலை நடுங்க வைத்தது. கூடவே காய்ச்சல் வந்துவிட்டது போன்ற உணர்வு. என் கணவரிடம் சொன்னேன். "நெருப்பாக கொதிக்கிறதே' என்று என்னை தொட்டுப் பார்த்துவிட்டு அவர் சொன்னார். சூடான தேநீர் குடித்ததனால் உடலில் சற்று சுறுசுறுப்பு தெம்பு ஏற்பட்டது. வேகவேகமாக நடந்து போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது, மேலும் குளிர் அதிகரித்தது. அப்போது வெடவெடவென்று என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரை சமாளிப்பதற்கான கம்பளிச் சட்டையையோ, போர்வையையோ எதுவுமே நாங்கள் கொண்டு வரவில்லை. அவையெல்லாம் அப்போது அங்கு தேவைப்படும் என்று எனக்கும் தெரியாது. என் தந்தையும் அதைக் குறித்து எழுதவில்லை.
ஷில்லாங் பஸ் நிலையத்திற்கே என் தந்தை வந்திருந்தார். ஓவர் கோட்டும், கையில் குடையுமாக நின்று அவரைப் பார்த்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தாய்ப் பசுவை கண்ட கன்று வைப்போல உணர்ந்தேன். சில நேரங்களில் பிரிவுதான் பாசத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை அவர் கண்களின் ஓரத்தில் துளிர்த்து நின்ற இரண்டு முத்துக்களை பார்த்து தெரிந்துகொண்டேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/sowcarjanaki1-2025-11-24-17-31-08.jpg)
என் தந்தை ஒரு டாக்ஸியை அழைத்து அதில் மூவரும் வீட்டுக்கு போய் சேர்ந்தோம். என் தந்தைக்கு ஷில்லாங்கில் தரப்பட்டிருந்த வீடு பெரிய வீடு. அங்கெல்லாம் அடிக்கடி பூகம்பமும் மழை வெள்ளமும் வருவதால் இதற்காகவே தரை மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்திற்கு மேலே வீடு கட்டப்பட்டி ருந்தது. சிமெண்ட் தரை கிடையாது, மரப்பலகை களைக் கொண்டு அடிக்கப்பட்ட தரைதான். வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் இருந்தது "என்டி வில்லா' என்பது வீட்டின் பெயர்.
எங்களை வரவேற்க என் தாயார், தங்கை கிருஷ்ணா எல்லோரும் வாசலுக்கே ஓடி வந் தார்கள். அவர்களை ஒன்றாகப் பார்த்ததில் என் கண்கள், நெஞ்சம், சிந்தனை எல்லாமே நிறைந்து ஆனந்தக்கண்ணீர் வந்தது.
குசலம் விசாரிப்பு நடந்தது "எனக்கு உடம்பு சரியில்லை காய்ச்சல் வந்திருப்பது போல் இருக்கிறது' என்று சொன்னேன். "இப்போதைக்கு போய் நல்ல ரெஸ்ட் எடு, நாளைக்கு டாக்டரை பார்க்கலாம்' என்றார் என் கணவர்.
என் அப்பா என் கணவரை தனியாக அழைத்துச் சென்று அவரது வேலை மற்றும் இதர விவரங்களை கேட்டுக்கொண்டி ருந்தார்.
"வேறு வேலைக்கு தீவிரமாக முயற்சி பண்றேன். இதில் அவ்வளவாக முன்னேற வாய்ப்பு இல்லை' என்று என் கணவர் தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
"குளித்துவிட்டு வாருங்கள் சாப் பிடலாம்' என்றதும், என் கணவர் குளிக்க எழுந்தார் அவ ருக்கு தேவையான சோப்பு, டவல் எல்லாம் எடுத்து குளியலறையில் வைத்துவிட்டு வந்தேன். குளியலறையி லேயே தலைக்கு தேய்த்துக்கொள்ள ஷாம்பு வைத்திருப்பதாக என் தாயார் சொன்னார்.
சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும்... குளிக்கப்போன என் கணவர் வெளியே வந்தார். அவரைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். அவர் முகம் எல்லாம் சிவந்து கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல சிவப்பு நிறத்தில் பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் வெளியே வந்தார்.
என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
அவர் செய்த கோமாளித்தனம் ஷாம்பூ என்று நினைத்து அதற்கு பக்கத்தில் வைத்திருந்த டெட்டாலை எடுத்துத் தலையில் தேய்த்துக் கொண்டிருக்கிறார். நுரை வராமல் போகவே இன் னும் கொஞ்சம் அதிகமாகவே எடுத்து தலையில் தேய்த்துக்கொண்டிருக்கின்றார் அப்புறம் அது கண், முகம் என மற்ற இடத்திலும் சென்று சிவக்கச் செய்துவிட்டது. படித்தவருக்கு டெட்டாலுக்கும், ஷாம்பூவுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையே.
நான் அந்த ஜுரத்திலும் இதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்ததைப் பார்த்து அவருக்கு கோபம் வந்துவிட்டது... என்னிடம் சீறினார்.
"என்ன நடந்துவிட்டது இப்படி சிரிக்கிறே. பெண்கள் இந்த மாதிரி சிரிப்பது எனக்கு கட் டோடு பிடிக்காது'' என்று ஆத்திரத்தோடு சொன்னார்.
நான் அவருடன் வாழ்ந்த நாட்களில் கடைசியாக சிரித்தது அன்றுதான். அதன் பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நான் சிரித்ததே கிடையாது.
அப்புறம் என்ன நடந்தது...
(பேசுறேன்...)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/sowcarjanaki2-2025-11-24-17-31-20.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/sowcarjanaki-2025-11-24-17-30-58.jpg)