(11) கணவரின் பொருளாதாரம் கண்டு அதிர்ச்சி!
என் கடிதம் கண்டு என் தந்தை உடனே பதில் போட்டார். "ஷில்லாங்குக்கு எப்படி வர வேண்டும் என்பது பற்றியும், கொல்கத்தாவுக்கு வந்து அங்கிருந்து கௌஹாத்திக்கு வந்து, பின்னர் பஸ் பிடித்து ஷில்லாங் வரலாம் என எழுதியதோடு, நீ புறப்படும் முன் தந்தி கொடு' என்றும் எழுதியிருந்தார். ஷில்லாங்கில் ஒரு காகிதம் செய்யும் தொழிற்சாலையில் பெரிய உத்தியோகத்தில் என் தந்தை அப்போது இருந்தார். மாதச்சம்பளமாக 2000 ரூபாய் அவருக்கு கிடைத்துவந்தது.
நான் அந்த கடிதத்தைப் பல முறை படித்துப் பார்த்தேன் "நான் வருகிறேன்' என்று எழுதினதாலேயே, "என்னைப் புறப் பட்டு வா' என்று என் தந்தை எழுதியிருந்தது போல தோன்றியதே தவிர, உள்ளன்போடு பாசத்தோடு வலிய வா என்று சொல்லி எழுதவில்லை. பிரியத்தோடு அழைப்பது போல எழுதவில்லை என்ற ஒரு உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. இது நானாகவே வீணாக கற்பனை செய்துகொள்கிறேனோ என்று ஒரு எண்ணம் அடுத்த வினாடியே எனக்கு தோன்றியது. என்னிடமிருந்து அந்த எண்ணத்தை உடனே உதறிவிட்டேன் .
என் கணவரிடம் கடிதம் வந்த விஷயத்தைச் சொன்னேன்.
"பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்யணும், டிக்கெட் வாங்கணும்'' என்றேன்.
"டிக்கெட் வாங்க அவர்கள் பணம் அனுப்பவில்லையா?'' என்றார் அவர். அவரது கேள்வி என்னை தூக்கிவாரிப் போட்டது. என் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்பட்ட மற்றொரு பெரிய அதிர்ச்சி அது.
"அவர்கள் எப்படி பணம் அனுப்புவார்கள்? கல்யாணம் செய்து கொடுத்துவிட்ட பிறகு நீங்கள்தானே என் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்? அது தானே உலக வழக்கம்'' என்றேன்.
அப்போதுதான் என் கணவர் அவ ருடைய பொருளா தார நிலையைப் பற்றிய உண்மையை என்னிடம் சொன்னார். அவருக்கு மாதம் சம்பளம் எவ்வளவு வருகிறது, எவ்வளவு பற்றாக்குறை.. எவ்வளவு செலவாகிறது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
"ஆபீஸில் கொடுத்த பிரயாணப்படியாக வந்த பணம்கூட செலவாகிவிட்டது'' என்றார் பரிதாபமாக.
"நான் உங்கள் மனைவிதானே? என்னிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாமே! உங்கள் வருமானம் என்ன என்ற உண்மையைத் தெரிவித்திருக்கலாமே. நான் திரைச் சீலையெல்லாம் வாங்கியபோது, இதை ஏன் சொல்லாமல் இருந்தீர்கள்? இப்போது பணம் இல்லை என்கிறீர்களே'' என்று வேதனையும், ஆத்திரமும் கலந்த குரலில் கேட்டேன். என் கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
அவர் பதில் ஒன்றும் பேசவில்லை. ஏதோ யோசனையில் இருப்பது போல நின்றிருந்தார்.
இப்போது பயணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.
திருமணத்திற்காக எனக்குச் செய்து போட்டிருந்த தங்க வளையல்களில் இரண்டை கழற்றி அவரிடம் கொடுத்து "இதை விற்று, அந்தப் பணத்தில் டிக்கெட் வாங்கி பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்'' என்றேன்.
அப்போது வேண்டாம் என்று அவரால் சொல்ல முடியவில்லை, கைநீட்டி வாங்கவும் மனம் வரவில்லை, நிர்பந்தத்தின் சூழ்நிலை அவரது கைகளை நீட்டச் செய்து வாயைக் கட்டிப் போட்டுவிட்டது. மௌனமாக அதை அவர் வாங்கிக்கொண்டார்.
என்னுடன் அவரும் புறப்பட்டு வந்து என்னைப் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு, சில நாட்கள் மாமனார் வீட்டில் தங்கிவிட்டு, பின்னர் அவர் மட்டும் திரும்பிவிடுவது என்ற திட்டத்தில் பயணம் வகுக்கப்பட்டது. கல்கத்தாவுக்கு நாங்கள் இருவரும் பயணம் ஆனோம்.
என் குடும்பத்தாருடன் கழிந்த பழைய இன்பகரமான நாட்களும் காட்சிகளும் அப்போது என் கண் முன் நிழலாடின. என் அப்பா, அம்மா, தங்கை கிருஷ்ணா... ஒன்றாய் மகிழ்ந்திருந்த நாட்கள்.
ஆஹா, அவர்கள் எல்லோரும் இப்போது எப்படி இருப்பார்கள், என்னை எப்படி வரவேற்பார்கள், என்றெல்லாம் எனக்கே அலுத்துப்போகும் அளவு கேள்வி மேல் கேள்விகளாக கேட்டு, அதற்கான விடை களையும் ஒரு வகையாக கற்பனை வடிவில் கண்டுகளித்தபடியே இருந்தேன்.
நீண்ட பிரி வுக்குப்பின் பெற் றோர்களைக் காண மேற் கொண்ட பய ணம் அது. என் இத யத்துக்கும் இதமாக இருந்தது. ஆனால் அங்கே இப்போது போனால் எப்படி இருக்கும் என்ற யோசனையும் வந்தது. கல்கத்தா வரை எங்கள் பயணம் சுகமாக இருந்தது, களைப்பேற்படுத்தக்கூடிய நீண்ட பயணமாக இருந்தபோதும் ஒரு மன நிம்மதி இருந்தது.
"கோமளா விலாஸ்' என்ற தென்னிந்திய ஓட்டலில் நாங்கள் தங்கினோம். மறுநாள் கௌஹாத்திக்கு வண்டி ஏறவேண்டும். கௌஹாத்தி போகும்போது பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பார்வதிபூர் என்ற சிறு ஸ்டேஷன் தாண்டித்தான் போகவேண்டும். அப்போது தகராறுகள் அந்தப் பகுதியில் மிகவும் பயங்கரமாக இருந்தது. நாங்கள் கௌஹாத்தி போகப் போகிறோம் என்பதைக் கேள்விப்பட்டு எங்களுடன் பிரயாணம் செய்தவர்களும், கோமளா விலாஸ் ஓட்டலில் இருந்தவர்களும் அந்தக் கலவரங்களை கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
"நல்ல பொருளாகப் பார்த்துவிட்டால் போதும், அப்படியே அதைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள். பெண் கொஞ்சம் பார்க்க அழகாக, லட்சணமாக இருந்துவிட் டால் அவள் பாடு ஆபத்துதான்' என்றெல்லாம் சொன்னதைக் கேட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதேதோ பயங்கர எண்ணங்கள் என் நெஞ்சை வளைய வளைய வந்து அழுத்திக் கொண்டிருந்தன. நீண்ட இரவு முடிந் தது. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கௌ ஹாத்தி செல்ல வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண் டோம்.
"ஆண்டவனே அந்த ஸ்டேஷன் வராமலேயே வண்டி போய்விடக் கூடாதா? என்று மனதிற்குள் பிரார்த்தனைகள் செய்தேன். எந்த ஸ்டேஷனைப் பற்றி பல நூறு தடவைகள் வேண்டிக் கொண்டிருந்தேனோ அந்த ஸ்டேஷன் அதாவது பார்வதிபூர் என்ற ஸ்டேஷன் வந்தது; எங்கள் வண்டியும் அங்கே நின்றது.
என் உதடுகள் பல தெய்வங்களின் பெயரை முணுமுணுத்துக்கொண்டிருந்தன; கண்களோ பயத்தினால் மருண்டு, அங்கும் இங்குமாக பார்வையை அலையவிட்டுக்கொண்டிருந்தது.
மெதுவாக ஃபிளாட்பாரத்தைப் பார்த்தேன். திடுக்கிட்டேன்.
என்னாச்சு...
(பேசுறேன்...)
_______________
அழகாய் ஜொலிக்க பட்டு மாமி டிப்ஸ்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/sowcarjanakibox-2025-11-21-10-17-54.jpg)
ஒரு பெண் பேரழகியாக இல்லாவிட்டாலும் "ஓ ஷீ ஈஸ் சார்மிங்' என்று நாலு பேர் சொல்லும்படி அலங்காரம் செய்துகொள்ளலாம். பொருத்த மான உடை, மிகையில்லாத மேக்கப் போன்றவை இதற்கு உதவும். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு மூக்கு அவ்வளவு அழகாக இல்லை என்றே அபிப்பிராயம். அதனால், வைர மூக்குத்தி அணிய ஆரம்பித்தேன், மற்றவர் கவனத்தை மூக்குத்தி மேல் திருப்ப. அதிகமாக நீளவாட்டில் கோடுள்ள புடவைகளைத்தான் அணிவேன்... உயரத்தை அதிகமாகக் காட்ட.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/sowcarjanaki-2025-11-21-10-17-44.jpg)