(10) நடு இரவில்... காட்டில் திகில் அனுபவம்!
அப்போதெல்லாம் என் மனதில் கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும். ஒருவேளை நாம் இப்படியே பழைய சம்பவங்களை மனதிலே நினைத்துக்கொண் டிருப்பதால்தான், என் கணவர் என்மீது எவ்வளவு அன்பு செலுத்தினாலும் எனக்கு பரிபூரணமாக அது கிடைக்க வில்லையோ என்று நினைக்கத் தோன்று கிறது. என் கணவர் எதைச் செய்தாலும் ஒரு குறை அதில் இருப்பதாக தெரிகிறது. இதனால் "திருப்தியால் நிரம்ப வேண்டிய என் இதயத்தில் ஒரு பகுதி சூன்யமாகவே இருக்கிறது' என்று நானே, என் கணவருக்காக வாதிட்டுக் கொள்வேன். ஆனாலும் என் இதயம் அதை ஏற்காது.
நினைத்துப் பார்க்கிறேன்... நான் ஒருத்தி தான் இப்படியா? எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள். அவர்கள் காதல் கைகூடாமல், வேறு ஒருவரை கணவராகப் பெற்றதும் உண்டு. தங்களை அடக்கியாளத்தக்க புருஷன் கிடைக் கும்போது அவர்கள் காலப்போக்கில் பழைய சம்பவங்களை மறந்துவிடுவதில்லையா? ஆனால் என் நிலை அப்படியில்லை. ஆரம்பத்திலிருந்தே என் இதயத்திலிருந்து பழைய சம்பவங்களைக் கிள்ளியெறிய நினைத்த போதும் என்னால் அது முடியவில்லை. அது புற்றுநோயாகவே பற்றிக் கொண்டுவிட்டது.
எப்படி நினைத்துக்கொண்டாலும், என்ன தான் என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டாலும், எனக்கும் என் கணவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்தது. அந்த இடைவெளியை என்னால் அளக்கவும் முடியவில்லை; அடைக்கவும் இயலவில்லை. அந்த இடைவெளி கடைசிவரையில் அப்படியே இருந்துவிட்டது. என் வாழ்க்கையிலே ஏதோ ஒரு குறை இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அது என்ன குறை? எதனால் அந்த குறை என்பதை என்னால் தனியே பிரித்தெடுத்து சொல்லவும் முடியவில்லை... ஏதோ ஒரு குறை அவ்வளவுதான். அதற்குமேல் ஆராய்ச்சி செய்யத் தோன்றவில்லை.
புரொவின்ஷியல் பிராட்காஸ்டிங் கார்ப்ப ரேஷனில் என் கணவருக்கு சூபர்வைசர் வேலை. இதற்காக இவர் ஏராளமான இடங்களுக்குப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. சாலை வசதி இல்லாத, பஸ் போகாத கரடுமுரடு பாதையில் காட்டு வழியாக பல ஊர்களுக்கு, குக்கிராமங் களுக்கு செல்லவேண்டிய வேலை அது. ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் சென்று பொது இடங்களில் ரேடியோவை நிர்மாணிப்பது, அவற்றை பழுது பார்ப்பது, ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கவனிப்பது போன்ற வேலைகள்தான் என் கணவருக்கு.
இதுபோன்ற சுற்றுப்பயணம் போக இவருக்கு ஒருநாள் உத்தரவு வந்தது. அரசு உத்தரவை மீற முடியுமா? ஒருமுறை கிளம்பிவிட்டால் திரும்பி வர சுமார் 20-30 நாட்களாகும். வீட்டில் என்னைத் தனியாக விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை... நானும் அதை விரும்பவில்லை. அவருடனே நானும் பயணம் கிளம்பிவிட்டேன். அது ஊர் சுற்றி வருவது போன்ற பயணமில்லை என்பது அப்போது புரியவில்லை.
சுமார் 12 கிராமங்களுக்குப் போகவேண்டும், அங்கு ரேடியோ பொருத்திவிட்டு வரவேண்டும். கூடவே சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண் டேன். ஒரு பெரிய மூட்டை சேர்ந்துவிட்டன. முதலில் பத்ராசலத்துக்கு அருகில் ஒரு கிராமம். மாட்டு வண்டியில் கொஞ்சம், ஆற்றில் படகில் கொஞ்சம், நடந்து கொஞ்சம்... இப்படியே எங்கள் பயணம் தொடர்ந்தது. ஆங்காங்கே பிரயாணிகள் விடுதிகள் இருக்கும். அதில் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு இளைப்பாறிக்கொள்வோம்.
ஒருசமயம் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு உடனே கிளம்பவேண்டிய சூழ்நிலை. காட்டுப்பாதை வழியே இரட்டை மாட்டு வண்டியில் இரவில் கிளம்பினோம். எனக்கு தூக்கமே வரவில்லை. அடர்ந்த காடு, ஒரே இரைச்சல்... பறவைகளின் சத்தம். நாங்கள் மூன்று பேர் மட்டுமே வண்டியில் போகிறோம். மை இருட்டு, அடர்ந்த மரங்கள். திருடர்கள் பயம் வேறு. அதனால் எனக்கு தூக்கம் வரவில்லை, ஆனால் அவரோ நன்றாகத் தூங்கிவிடுவார். வழியெல்லாம் இரவில் ஒலி எழுப்பும் விசித்திர வண்டுகளின் "ஙொய்' என்ற சத்தம் காதை துளைக்கும். நூற்றுக்கணக்கில் குப்பென்று பறந்து, ஒளியை விட்டு விட்டு சிதற வைத்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் ஒளி கண்களை நிரப்பும் அழகிய காட்சி. ஏதாவது மிருகங்கள் வந்து தாக்கினால் என்ன ஆகுமோ என்ற பயம் இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கும்!
பாதி தூரம் போயிருப்போம்... திடீரென்று குறுக்கே காட்டாற்றில் வெள்ளம் வந்துவிட்டது. அங்கேயே கரையோரம் தங்கி, இரவுப்பொழுதை கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டதுவிட்டது. மனித சஞ்சாரமே இல்லாத பயங்கரமான இந்தக் காடு களின் மத்தியில் அரண்மனை போன்ற பங்களாக் களை வெள்ளையர்கள் கட்டியிருந்தார்கள். சில சமயங்களில் இந்த மாதிரியான பங்களாக்களிலும் நாங்கள் தங்கினோம். அந்தக் காட்டாற்று வெள்ளம் குறையும்வரை அதன் ஒரு பகுதியில் விளக்குகளோ, மின்சார விசிறியோ எதுவுமின்றி... மிருகங்கள் வருமோ, பாம்பு, தேள் படை யெடுக்குமோ என்ற குலை நடுக்கத்துடன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு. இருண்ட இரவை கழிப்போம். திகிலும் இருந்தது... ஒருவகை த்ரில்லும் கூடவே இருந்தது.
ஒருநாள் இந்த மாதிரி இரட்டை மாட்டு வண்டியில் வெங்கடாபுரம் என்ற கிராமம் நோக்கி பயணப்பட்டோம். வழியிலே ஒரு பெரிய ஆறு. அதில் திடீரென்று வெள்ளப்பெருக்கு. வேறென்ன செய்ய, ஆற்றின் இக்கரை யில் தங்கும்படியாகி விட்டது.
சரி, சாப்பாட்டுக்கு என்ன வழி? நான் சமைத் துப் போடவேண்டும். சமையலுக்காக கொண்டு வந்திருந்த சாமான்கள் தீர்ந்துவிட்டன. "இங்கு ஏதாவது காய்கறிகள் கிடைக்குமா?'' என்று கேட்டேன். "கோழிமுட்டையும் வெங்காயமும் தவிர, சுற்று வட்டாரத்தில் ஒன்றுமே கிடையாது'' என்று சொல்லிவிட்டார்கள்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டின் காம்பவுண் டில் விளாமரங்கள் இருந்தன. அவற்றில் விளாம் பழங்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. வண்டிக்காரனைக் கூப்பிட்டு விளாம்பழங்களை பறித்துவரச் சொன்னேன். அதை வைத்து சட்னி செய்தேன். தேக்கு இலையில் உணவைப் பரிமாறினேன். இப்படியே இருபது நாட்கள் தனிமையில் நானும் அவருமாக பயணம் செய்தது... எனக்கும் என் கணவருக்கும் இடையே உள்ள இடைவெளியை கொஞ்சம் குறைக்க உதவியது. ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டிருந்த அபிப்பிராயங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தோம். இருபது நாள் பயணத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு, நாங்கள் விஜயவாடாவுக்குத் திரும்பினோம்.
என் வாழ்வில் சின்ன வயது முதல் இது போன்ற காடு மேடுகளில் இருட்டில் கிடந்த தில்லை. இது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந் தது. அதேசமயம் இப்படியே இருந்துவிடக்கூடாது என்றும் நினைக்கத் தோன்றியது. இந்தச் சூழலில் அவரது வேலைப்பளு அதிகமாகியது. ஒவ்வொரு நாள் இரவும் நான் தூங்குதற்கு நெடுநேரமாகும். அவர் வேலை முடிந்து வந்ததும் அவரை கவனித்துவிட்டு, இரவு அவர் படுத்ததும்... அவர் கால்களைப் பிடித்து விட வேண்டும். அவர் தூங்கிய பிறகுதான் நான் தூங்கப்போவேன்.
இருபது நாள் வண்டியில் ஓய்வின்றி பிரயாணம் செய்தது, வேளை தவறி சாப்பிட்டது, தூக்கம் இல்லாதது எல்லாம் சேர்ந்து என் உடல்நலத்தை பெரிதும் பாதித்து, அதனால் எனக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. விஜய வாடாவில் டாக்டர் சலபதிராவ் என்பவரிடம் என்னை அழைத்துப் போனார். நான் எல்லாவற்றையும் சொன்னேன்.
"உனக்கு இப்போது நல்ல ஓய்வு தேவை. இந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் போய் கொஞ்சநாள் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். ஏன் உன் பெற்றோர்களுடனே போய் சில நாட்கள் தங்கி வாயேன்'' என்றார் டாக்டர்.
நான் என் பெற்றோரை விட்டு வந்து சுமார் ஒன்பது மாதங்களாகிவிட்டன. எனக்கும் அவர் களை பார்க்க வேண்டும் என்ற ஆவல். என் கண வரிடம் டாக்டர் சொன்னதைக் கூறினேன். "சரி போய் வா' என்று அவரும் உடனே சம்மதித்தார்.
ஷில்லாங்கில் இருந்த என் தந்தைக்கு நான் கடிதம் எழுதினேன். "எனக்கு உடல் நலம் சரியில்லை. நீங்களும், அம்மாவும் விரும்பினால் அங்கே வந்து சிலநாட்கள் தங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் முடிவை சொன்னபிறகு, நான் புறப்பட்டு வருகிறேன்'' என்று எழுதியிருந்தேன்.
உடனே என் தந்தை பதில் போட்டார்.
ஆசையோடு புறப்பட்டு செல்லும் நாளில், என் கணவரின் செயல் கண்டு எனக்கு கோபம் வந்துவிட்டது.
அவர் அப்படி என்ன செய்தார்...?
(பேசுறேன்)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/17/sowcarjanaki-2025-11-17-16-39-55.jpg)