பானுமதி கொடுத்த முத்தம்!
வாழ்க்கை என்பது ஒரு தொடர் நாவல். சோகத்தில் முடியும் நாவல்களும் உண்டு. இன்பத்தில் முடிக்கப்படும் நாவல்களும் உண்டு. இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் நாவல்களும் உண்டு. இயற்கை எனக்கு தந்த பரிசுகளோ... அதை எண்ணி என் இதயமே விம்முகிறது. நான் தலைவணங்குகிறேன் அந்த தாய்க்கு!
என் வாழ்க்கையை ஒப்பிடுவதானால் தற்சமயம் மூன்றாவது வகை நாவலோடுதான் ஒப்பிட வேண்டும். முதல் ரகத்தில் அது முடியுமோ, இரண்டாவது வகையில் அது முடிக்கப்படுமோ அது "அவன்' கையில்தானே இருக்கிறது. அதை இப்போதே எப்படிச் சொல்ல முடியும்!
என் சிந்தனைகள் எங்கெல்லாமோ இப்போது பறக்கிறது. என் வாழ்நாளில் இளமைப் பருவத்திற்குப் பறக்கிறது. அங்கேயே வட்டமிடுகிறது. பின்னர் மீண்டும் மெல்ல, மெல்ல நகர்ந்து என் தற்போதைய வாழ்க்கைக்கு வருகிறது. என் மனமோ எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கிறது. கையளவு உள்ள இதயத்தில் தான் எத்தனை எண்ணங்கள். எத்தனை ஆசைகள். எத்தனை விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. எல்லையற்ற கடலைவிட இந்த வகையில் பெரியது அது. தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்துவந்த நான், எதிர்பாராத ஒரு சம்பவத்தை எதிர் கொள்ளவேண்டியிருந்தது. நாடக உல கிலும் என்னை இயங்க வைத்துவிட்டது.
படவுலகில் நான் சௌகார்!
நாடக உலகில் ஒரு "பட்டு மாமி!' என்று பேச ஆரம்பித்திருந்தனர்.
என்னைப் பொறுத்தவரை "பட்டு மாமி'யைப் போன்ற ஒரு பாத்திரம் நாடக உலகில் எனக்கு இனி வாய்க்குமா என்பதே தற்சமயம் கேள்விக்குறியாகத்தான் இருக் கிறது. "எதிர்நீச்சல்' நாடகமாக வந்த போதும், திரைப்படமாக வந்தபோதும் பட்டு மாமி கதாபாத்திரம் அந்தளவுக்கு கொண்டாடப்பட்டது, ரசிக்கப்பட்டது. பெண்களுக்கு பட்டு மாமி, மடிசார் கட்டிய ஸ்டைல் ரொம்ப பிடித்திருந்தது.
நாடக உலகில் எனக்கு (பட்டு மாமி) இது ஒரு துருப்புச் சீட்டு.
ஒருசமயம் சென்னை மியூசிக் அகாடமி ஹாலில் "எதிர்நீச்சல்' நாடகம் நடந்தது. அப்போது மிகப்பெரிய ஒரு நட்சத்திரம் மேடைக்கு வந்து செய்த சம்பவம் என்னை திக்குமுக்காட வைத்த இன்ப அதிர்ச்சி அது. நாடகம் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த திரளான கூட்டத்தைச் சமாளித்துக்கொண்டு நேராக என்னிடம் வந்து, என்னைக் கட்டித் தழுவி என் கன்னத்தில் முத்தமிட்டார். ஒரு கன்னத்தில் பட்டு மாமி நடிப்புக்காகவும், இன்னொரு கன்னத்தில் நான் கட்டியிருந்த மடிசார் புடவைக்காகவும் இரண்டு முத்தம் கொடுத்து என்னை இன்ப அதிர்ச்சி கொள்ள வைத்துவிட்டார். திரையுலகில் சகலகலா வல்லியான அந்த நட்சத்திரம்.
"உன் நடிப்பு அபாரம். அது மட்டுமல்ல... நீ மடிசார் புடவை கட்டிய அழகே தனி. நீ மடிசார் கட்டியிருக்கும் படத்தை ஒரு புடவைக் கடையில் வைத்திருக்கிறார்கள். அதை அப்படியே எடுத் துக்கொண்டு போய்விட வேண்டும் என்ற வெறிகூட எனக்கு வந்துவிட்டது. பட்டு மாமியாக ரொம்ப வும் நன்றாக நடித்திருக் கிறாய்'' என்று என்னை மனம் திறந்து பாராட்டிய அந்த நட்சத்திரம் பத்மஸ்ரீ பானுமதி அம்மாதான்.
எவ்வளவு பெரிய நடிகை. எவ்வளவு திறமைவாய்ந்த நடிகை. எவ்வளவு பெரிய அனுபவசாலி அவர். நிறைகுடமான அவரது உள்ளத்திலிருந்து வந்த இந்த பாராட்டை எனக்குக் கிடைத்த பெரிய பரிசுகளில் ஒன்றாகவே நான் நினைக்கிறேன். கலைஞனைப் பாராட்டும்போது அவன் வளர்கிறான், கலையும் வளர்கிறது. ஒரு திறமைவாய்ந்த கலைஞர் மற்றொரு கலைஞரைப் பாராட்டும்போதே... இருவருமே உயர்ந்துவிடுகிறார்கள். என்னை இந்த உயர்ந்த நிலைக்கு ஏற்றிவைத்த பானுமதிக்கு என் நெஞ்சில் ஓரிடம் என்றென்றும் உண்டு. இவையெல்லாம்தான் என்னுடைய சொத்துக்கள்.
நான் ஏழை என்று சொல்லிக்கொள்ள வில்லை. அதேசமயம் ஏராளமான பணம் என்னிடம் கொட்டிக்கிடப்பதாகவும் சொல்ல வில்லை. ஆனால் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்திருக்கும் அனுபவம், மன திருப்தி இவற்றைக் கணக்கெடுக்கும்போது என்னிடம் உள்ள பணத்தின் மதிப்பைவிட, இவை பல மடங்கு உயர்ந்தவை. அந்த வகையில் நான் சொல்கிறேன்... "நான் ஒரு செல்வச் சீமாட்டி.'
என்னை "பட்டு மாமி'யாக்கியது கே.பாலசந்தர். என் திரையுலக சகோதரர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என் மகன்கள் போன்ற ரஜினி, கமல் என்று, எனது 70 வருட திரையுலகப் பயணத்தில் நான் சந்தித்ததும், சாதித்ததும் என்னை சந்தோஷப்படுத்திய, சங்கடப்படுத்திய, காயப்படுத்திய விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
என்னைப் பாராட்டி முத்தமிட்ட பானுமதி அவர்களுக்கும், எனக்கும் ஒரு படத்தில் நடிப்பில் கடும் போட்டி வந்தது.
யார் பக்கம் வெற்றி வந்தது...?
(சொல்கிறேன்...)