(3) துணிச்சல் மிகுந்த பெண்!


நாடக உலகில் கலக்கிக்கொண்டிருந்த கே.பாலசந்தர் எழுதி, இயக்கிய முதல் படம் "நீர்க்குமிழி'. அவர் படத்தில் முதல் கதை நாயகி நான்தான் என்பது பெருமைக்குரிய விஷயம். என்னை இயக்கிய அரிய தருணங்களை அவர் சொன்னதை அப்படியே தருகிறேன்...

Advertisment

" "நீர்க்குமிழி' படத்தில் படகில் செல்வதாக ஒரு காட்சி யமைக்கப்பட்டிருந்தது.    ஆனால் சௌகார் அவர்களோ, அந்தக் காட்சியில் நடிக்கத் தயங்கினார். உடனே நான், "உங்களுக்குப் பதிலாக டூப் போட்டு எடுத்துக்கொள்கிறேன்' என்று அவரிடம் தெரிவித்தது தான் தாமதம்... சற்று நேரத்தில் "நானே நடிக்கிறேன்' என்று நடிக்கத் தொடங்கிவிட்டார்.

Advertisment

தனக்குப் பதிலாக பிறர் நடிப்பதை சகிக்க முடியாத நிலையில், அது எப்படிப்பட்ட ஆபத்தான காட்சியானாலும், தானே நடிக்க வேண்டும் என்ற தனித்தன்மை அவரிடம் எப்போதும் இருந்தது. 

"நாணல்' நாடகமாக நடத்தப்பட்டபோது, அதில் நடித்திராத சௌகார், "நாணல்' படத்தில் நடித்தது அனை வருக்கும் நினைவிருக்கலாம். "பாமா விஜயம்' படத்தில் அவர் ஏற்றது நகைச்சுவை வேடம். அதிலும் அசத்தினார். புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொண்டி ருக்கும் சௌகார், தனக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதை தெரிவிக்கும் வகையில் அதாவது பெருமையடித்துக்கொள்ளும் வகையான காட்சி அமைக்கப் பட்டிருந்தது. 

Advertisment

"மேட்' விரிக்கிறேன் உட்காருங்கள்! வீட்டிலே "ரேட்' அதிகம், அதுக்காகத்தான் "கேட்' வளர்க்கிறேன் என்பார். அப்போது அவரைச் சீண்டிவிடும் நோக்கில் "அதுக்கு டிராப்தான் வேணும்' என்பார் காஞ்சனா. டிராப்பா? என்று கேட்டு சௌகார் விழிப்பது வேடிக்கையாக இருக்கும். 

ஜோசப் ஆனந்தன் எழுதிய "இரு கோடுகள்' நாடகத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கினோம். நகைச்சுவையாக நடித்தது போதும் என்கிற அளவில் சௌகார் அவர்களை, "கலெக்டர் ஜானகி'யாக நடிக்க வைத்தோம்.  ஆனால் அவரோ, அந்த கதா பாத்திரமாக மாறி, கலெக்டர் ஜானகியாகவே வாழ்ந்து காண்பித்தார். ஒரு கலெக்டருக்குரிய மிடுக்கும், பேச்சும் அவரிடம் இம்மி குறையாது காணப்பட்டன. லைஃப் ஃபைல் சௌகார் அவர்களும், ஜெமினி அவர்களும் உரையாடும் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

வங்காளத்திலும், பின்னர் இந்தியிலும் வெளிவந்த "மம்தா' படத்தை தமிழில்          தயாரிக்கத் திட்டமிட்டார் சௌகார். அந்தப் படத்தை டைரக்ஷன் செய்யும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதுதான் "காவியத் தலைவி' படமாக உருவானது. ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. படப் பிடிப்புக்காக நான் கேட்டதை யெல்லாம் உடனுக்குடன் செய்து தருவார். அது முழுக்க, முழுக்க செட் போட்டு எடுக்கப்பட்ட படம். படத்தின் தயாரிப்பாளர் அவரேதான் என்றபோதும், பத்து... பதினைந்து நிமிடங்கள் தாதமதாக வருவதாகயிருந்தால்          கூட உடனே எனக்குத் தகவல் கொடுத்து விடுவார்.

"காவியத் தலைவி' எனக்குப் பிடித்த படம். கணவனையே ஒரு மனைவி சுட்டுக் கொல்கிறாள் என்ற விஷயமே புதுமையாக இருந்த நேரம் அது. சௌகார் ஜானகியும், எம்.ஆர்.ஆர்.வாசுவும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். 

sowcarjanaki1

"காவியத் தலைவி' படத்தைப் பொறுத்தவரை சௌகார் அவர்கள், ஒரு சிறந்த தயாரிப்பாளராக என்னிடம் நடந்து கொண்டதை இப்போது நினைத்தாலும், அவரது நாகரிக உள்ளத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

சௌகார் அவர்களின் விருந்தோம்பல் பண்பைச் சொல்-க்கொண்டேயிருக்கலாம். "நீர்க்குமிழி' படப்பிடிப்பு அருணாசலம் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தபோது, தன்னோடு மதிய உணவு உண்ணும்படி              என்னை அழைப்பார். நானும் பலமுறை அவரது சுவையான சமையலை பெரிதும் விரும்பிச் சாப்பிட்டிருக்கேன். அப்போதெல்லாம் வீட்டில் என் மனைவியிடம், அவளது சமை யலைப் பற்றி ஏதேனும் குறை சொல்வதுண்டு. அப்படி நான் குறை சொல்லும்போது... "சௌகார் அம்மாவின் சமையலை சாப்பிட்டு உங்களுக்கு நாக்கு நீளமாகிவிட்டது' என்று என் மனைவி வேடிக்கையாகச் சொல்வார். வீட்டை அழகாக வைத்திருப்பது எப்படி என்று சௌகார் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அலங் காரப் பொருட்களாக அங் கங்கே இடம்பிடித்துக் கொண்டிருக்கும். ஒவ் வொரு பொருளுமே கவிதை சொல்லும்! வர வேற்பறையில் நான் கண்ட சிறு வாசகம்:  'I am not hard of hearing... I ignore you!'.

sowcarjanaki2

அவர் என்னதான் வெளியுலகில் சிரித்து மகிழ்வாகக் காட்டிக்கொண்டாலும் அவரது உள்மனம் இசைக்கும் சோககீதத்தின் மெல்-ய ஒ-யையும் கூடவே கேட்க முடிகிறது.  வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைக் கண்டு, கூடவே சோதனைகளையும் ஒருமுக மாகத் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சலையும் இன்முகத்தோடு போட்டுக்கொண்டு வாழ்ந்து காட்டும் இவரைப் போன்ற துணிச்சல் மிகுந்த பெண்மணியைக் காண்பது அபூர்வம்தான். பாரதி கண்ட புதுமைப் பெண்... இவரைப் போல்தான் இருக்கவேண்டும்.

என்னை இயக்கியவர்களில் சௌகார் அவர்களும் ஒருவர் என்பதை பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகிறேன். எத்தனையோ பேர் வந்துபோகும் திரையுலகில், ஏதோ வந்தோம், போனோம் என்றில் லாமல், இன்னும் தான் ஒரு நடிகை என்ற மதிப்போடு, மரியாதையோடு வாழ்ந்துவருபவர் இவர்.

sowcarjanaki3

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் டைரக்ட் செய்த "தில்லுமுல்லு' படத்தில் நகைச்சுவை கேரக்டரில் நடிக்கும்படி சௌகார் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டு சிறப்பாக அந்த பாத்திரத்தில் நடித்து மகிழவைத்தார். 

சௌகார் அவர்களிடம் உள்ள மற்றொரு தனிச்சிறப்பு, அவர் ஆங்கிலம் பேசுவது. அவர் ஆங்கிலம்  பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். உச்சரிப்பில் உள்ள இனிமை, சினிமா, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசும் திறன், இவை சௌகார் அவர்களுக்கு கைவந்த கலை. வெகுசரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்களில் சௌகார் அவர்களும் ஒருவர்'' -இவை என்னைக் குறித்து "இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் சொன்ன வார்த்தைகள்.

சரி,  இனி சின்ன வயதில் நான் எப்படி? என் படிப்பு, நட்பு, காதல், திருமணம், சினிமா பற்றியெல்லாம்...

(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்