திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி, ~கல்லூரியின் இணை பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதுபற்றி புகார் கூறியபோது உதவிப் பேராசிரியர்களும் வார்டன்களுமான புனிதா, மைதிலி இருவரும் கண்டுக்கொள்ளவில்லைஅ என புகார் தெரிவித்ததோடு, அதுபற்றிய ஆடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தி அதுபற்றிய அறிக்கையை காவல்துறைக்கு அனுப்பி "விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள்' என்றார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைச் குழு பேராசிரியர் சாந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழு கல்லூரிக்கு வந்து மாணவிகள், பேராசிரியர்கள், டீன் ராஜேந்திரன் போன்றோரிடம் விசாரணை நடத்தியதை வீடியோ பதிவு செய்துகொண்டு சென்றது. திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி வனிதா, அந்த மாணவியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அந்த மாணவி, ""காவல்துறையிடம் இரண்டு ஆடியோக்களை வழங்கியுள்ளேன். நான் சொன்ன குற்றச்சாட்டுகளை அவர்கள் கவனத்தில் எடுக்காமல், நான் ஏதோ தவறு செய்ததுபோல் என்னையே குற்றவாளியாக நினைத்து விசாரணை நடத்துகிறார்கள். தங்கபாண்டியன் சார் தரப்பில் இருந்து சிலர் என்னிடம் நேரடியாக வந்து "பணம் வாங்கித் தருகிறோம், பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொள்ளலாம் என கூறினார்கள். என்ன நடந்தாலும் நான் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை'' என்றார்.
இதுதொடர்பாக கல்லூரி டீன் ராஜேந்திரன் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""அந்த மாணவி மீதுள்ள புகாரை மறைக்கவே அந்த பெண்ணுக்கு உதவியாக உள்ளவர்கள் ஆலோசனைப்படி பாலியல் புகார் கூறுகிறார். அந்த புகார் பொய்யானது. அந்த ஆடியோ பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியது மிக்ஸிங் செய்யப்பட்டது. அந்தப் பெண் ஏதோ மனஅழுத்தத்தில் உள்ளார்'' என்கிறார்கள்.
அந்த மாணவிக்கு பக்கபலமாக உள்ள திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம். கட்சியினர், ""அந்த மாணவி தரும் ஆவணங்கள் பொய்யென்றால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் என அந்த மாணவியே கூறுகிறார். பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக் குழு, புகார் சொன்ன மாணவியிடம் பிரச்சினை பற்றி முதலில் கேட்காமல், கல்லூரி சென்று மாணவிகளிடம், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது. அதேபோல் இந்த விவகாரத்தை காவல்துறையும் சரியாக விசாரணை நடத்தவில்லை'' என்றனர்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 3-ந் தேதி, பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அந்த மாணவியிடம் விசாரணை நடத்த வருகிறது. அதன்பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை என்கிறது போலீஸ்.
-து. ராஜா