"கல்வியில் சிறந்த தமிழ்நாடு' எனும் தமிழகத்தின் கல்வி எழுச்சியினைக் கொண்டாடும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க. துணைபொதுச் செயலாளர் கனிமொழி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்குவது குறித்து இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பாலா உள்ளிட்ட பலரும் பாராட்டிப் பேசினர்.
விழாவில் முன்னிலை வகித்த துணைமுதல் வர் உதயநிதி பேசும்போது, “"நம் முதல்வர் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். கல்வி ஒன்றே அழிக்கமுடி யாத சொத்து. நான் சொல்கிறேன், இங்கு அமர்ந் திருக்கிற மாணவர்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து. கல்விக்கு மட்டுமின்றி உடற்கல்விக்கும் நம் அரசு முக்கியத்துவம் தந்துவருகிறது. கல்வியோடு, விளையாட்டு வீரர்களுக்கும் மேடையில் இட மளித்த முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன்''’என்றார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “"விழாவில் மாணவர்களின் பேச்சைக்கேட்டு நான் எமோஷனலாகிவிட்டேன். நமது உழைப்புக்கான பலன் நம் கண்முன்னாலேயே தெரிகிறது. இந்த விழா எங்களைப் பாராட்ட அல்ல. மாணவர்களைக் கொண்டாடுவதற்கானது. இதைப் பார்த்து அடுத்த பேட்ஜ் மாணவர்கள் உத்வேகம் கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம். ஆயிரம் ஆண்டுகளாக சாதி என்னும் சதி சமூகத்தை ஆட்கொண்டதால் நம்மு டைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த சதிக்கெதிராக புரட்சியாளர்கள் கலகம் செய்தனர். அந்தத் தொடர்ச்சியின் உச்சமே திராவிட இயக்கம். சென்னை மாகாணப் பள்ளிகளில் நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட் டம் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு நம்மு டைய திராவிட மாடல் அரசு கொண்டுவந்திருக் கும் காலை உணவுத் திட்டமாகியிருக்கிறது.
இலவச பஸ் பாஸ் திட்டம், கல்விக்கூடங் களில் இடஒதுக்கீடு, தற்போது புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாதிரிப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறை கள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பு கவனிப்பு என ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக் கிறோம். மாணவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொண்டு உயர உயரப் பறக்கவேண்டும். உங்களுடைய படிப்புக்குத் துணையாக, உங்களுக் கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்''’என்றார்.
விழாவில் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்துள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறு வனங்கள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. அத்துடன் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களை அவர்களது குரலிலே தாங்கள் அடைந்த பயன்களை பகிர்ந்துகொள்ள அனுமதித்தது தாக்கம் ஏற்படுத்துவதாக இருந்தது.
விழாவில் பேசிய சிவகார்த்திகேயேன், “"இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. மேடையில் பேசியவர்களின் பேச்சு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இங்கு பேசிய ஒவ்வொரு மாணவர்களின் பேச்சும் கதையும், வாழ்க்கையில் இன்னும் சிறப்பாகச் செயல் படவேண்டும் என்ற எண்ணமேற்படுத்தியுள்ளது. அரசு இவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்துறது, அதேயளவு எப்படியாவது படிச்சு மேல வந்துடணும்கிற இவர்களோட துடிப்பையும் நான் பார்க்கிறேன்.
"கேடில் விழுச்செல் வம்'’குறளில், மிகப்பெரிய செல்வம் கல்வின்னு வள்ளுவர் சொல்றார். எங்கப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குப் போனதால, நான் மூணு வேளையும் சாப்பிட்டுதான் பள்ளிக்குப் போனேன். எங்கப்பா நடந்து ஸ்கூலுக்குப் போனதால நான் ஆட்டோ, சைக்கிள்லதான் ஸ்கூலுக்குப் போனேன்.. ஒரு தலைமுறைல ஒருத்தர் நல்லா படிச்சா, அதுக்கடுத்த தலைமுறைகள் நல்லா யிருக்கும்கிறதை என் குடும்பத்துல பார்த்திருக்கேன். உங்கள் எல்லோராலும் நீங்கள் செய்துகொண்டி ருப்பதைத் தாண்டி சாதிக்கமுடியும். என்னாலே முடியும்போது உங்களால இன்னும் நிறைய செய்யமுடியும். நிறைய தலைமுறைகள் இந்தத் திட்டத்தால பயனடையும் என்பது எனது நம்பிக்கை''’என்று பேசியமர்ந்தார்.
புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைந்த சுப்புலட்சுமி என்ற மாணவி, பொட்டப்புள்ளை எதுக்குப் படிக்கணும் என தந்தையால் படிப்புக்குத் தடைவந்தபோது, மூன்று நாட்கள் பட்டினி கிடந்து கல்லூரியில் சேர்ந்த கதையை விவரித்தார். கல்லூரியில் சேர்ந்தபின் புதுமைப் பெண் திட்டத்தில் வரும் பணம் அவரது கல்விக் கனவுக்கு உதவியாக இருப்பதாகவும் கணித ஆசிரியராவதே தனது கனவு எனவும் உருக்கமாகப் பேசினார். அவரது பேச்சால் மனம்நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின் அவரை அழைத்து தனது பேனாவை வழங்கி, அவரது கனவு நிறைவேற ஆசிர்வதித்தது விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழவைத்தது.
தொகுப்பு: சூர்யன்