டுத்த பிரதமர் யார் என்று விவாதம் ஓடிக்கொண்டிருக்க, காவிரி டெல்டா விவசாயிகளோ தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டுவைக்கப்போகும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தும் கவலையில் இருக்கிறார்கள். மக்களவை தேர்தல் அறிக்கையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கூறியிருந்தன. ஆனால், தேர்தல் முடிந்த கையோடு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்துக்கு தயாராகி வரும் நிலையில் அ.தி.மு.க. அரசாங்கமோ போராட்டக்காரர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

hydro

இந்தத் திட்டத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 5094 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2 சதுர கிலோமீட்டர் மட்டுமே இருக்கிறது. 2 சதுர கிலோமீட்டர் ஆனாலும் அனுமதி கொடுக்க மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டார். தமிழக முதல்வரோ இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரப்படுத்தி இருக்கிறது.

Advertisment

காவிரிப் படுகையை குறிவைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்தத் திட்டத்தினால், பல லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் அகதிகளாக மாறிவிடக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அறிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தாமாகவே வெகுண்டெழுந்து மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கி அந்த திட்டத்தை கைவிட வைத்தனர். என்றாலும் காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டே வருகிறது.

ds

Advertisment

இந்த நிலையில் காவிரிப்படுகை முழுவதிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, ஒற்றை அனுமதி முறையில் அனுமதி வழங்கியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். இந்த ஒப்புதல் வழங்கி இருப்பதால் இந்த நிறுவனம் உடனடியாக காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டும் பணிகளை தொடங்கும் முனைப்பில் உள்ளது. காவிரிப்படுகையை இரண்டாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. முதல் பிரிவில் விழுப்புரம், கடலூர் பகுதிகளை சுற்றி 116 ஹைட்ரோகார்பன் கிணறுகளும், பிரிவு இரண்டில் கடலூர் முதல் காரைக்கால், நாகை மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் அமைக்க உள்ளனர். இந்தக் கிணறுகள் 3500 மீட்டர் முதல் 4500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். மக்கள் அடர்த்தியாக வாழும் பூம்புகார், வேளாங்கண்ணி, நாகை, காரைக்கால், புதுச்சேரி, பகுதிகளிலும், உலக புகழ்பெற்ற பிச்சாவரம் அலையாத்திக்காடுகளுக்கு இடையிலும் கிணறுகள் அமைய இருக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் வ.சேதுராமனிடம் கேட்டோம், “""விழுப்புரத்தில் தொடங்கி புதுச்சேரி வரையிலான முதல் பிரிவு திட்டத்தின்படி ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 106 கோடி ரூபாய் செலவில் ஆய்வறிக்கை தயார்செய்து, கிணறு ஒன்றுக்கு 49 கோடி என்று மதிப்பிட்டுள்ளனராம். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். காவிரி டெல்டா பகுதி மக்கள் ஏற்கனவே குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும் தண்ணீர் எடுத்தால் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், நிச்சயம் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதோடு பூமிக்கு கீழ் பாறைகளில் உள்ள வாயுவை அகற்றும் போது கடல் நீர் புகுந்து நல்லநிலம் உப்பு நிலமாக மாறும். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் கூட எடுக்க மறுக்கும் திட்டத்தை விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு எடுக்க முடிவு செய்திருப்பது வேதனை. இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவார்கள், இதனால் தமிழர்களின் கலாச்சாரமும் சேர்ந்து அழியும்''’என்கிறார் கவலையுடன்.

hy

திட்டத்திற்கு எதிராக கிராமங்களுக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்திவரும் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் கூறுகையில், ""மீத்தேன் உள்ளிட்ட மக்களுக்கு ஆபத்தான திட்டத்திற்கு 2013 இல் தற்காலிக தடையும் 2015 இல் நிரந்தர தடையும் விதித்து அரசாணை வெளியிட்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அரசிடமும், மக்களிடமும் கருத்து கேட்காமல் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்று விட வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கிறது. hyதமிழக அரசு வாய்மூடி மௌனியாக இருக்கிறது. தொடர்ந்து மவுனமாக இருந்தால் மக்கள் போராட்டமே அவர்களை வெளியேற்றும்''’என்கிறார்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசும்போது, “""டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியில் தொடர்ந்து இது போன்ற திட்டங்களை செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. அதற்கு மாநில அரசு துணைபோகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி 2016-ல் இருந்து ஒற்றை அனுமதி முறையை புகுத்தி திட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறது. பகையை மறந்து அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலோடு போராட முன்வரவேண்டும், இல்லையென்றால் டெல்டாவை யாராலும் காப்பாற்ற முடியாது''’ என்கிறார்.

நிலங்களும், கடல் வளங்களும் பறிபோக போகிறது என்கிற கவலையில் இருக்கும் விவசாயிகளையும், மீனவர்களையும் ஒன்றிணைத்துவருகிறார் கிள்ளை பேரூராட்சி முன்னாள் தலைவரும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன். அவரிடம் விசாரித்தோம்.’’2004 சுனாமியில் பிச்சாவரம் காடுகள் உள்ள பகுதியில் ஒரு உயிர் கூட பலியாகவில்லை. அந்த அளவுக்கு அந்த காடுகள் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அரியவகை தாவரங்களும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தல விருட்சமான தில்லை மரமும் இருக்கிற இந்த காடுகளை வேதாந்தா நிறுவனம் அழிக்க முயற்சிக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்''’என்கிறார்.

இது ஒருபுறம் இருக்க கெயில் நிறுவனம் சார்பில் விவசாயத்தை அழித்து குழாய் பதிக்கும் வேலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. "நெல் நாற்றங்கால், நடவு வயல், பருத்தி விளைந்த நிலம் இங்கெல்லாம் குழாய் பதிப்பதால், வளர்ந்து நிற்கும் பயிர் சேதமடைகிறது' என குமுறுகிறார்கள் விவசாயிகள். கெயில் நிறுவனத்தின் நடவடிக்கையை எதிர்த்து வயல் சேற்றில் இறங்கிப் போராடும் விவசாயிகளை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது அ.தி.மு.க. அரசு.

இதுகுறித்து நிலம்நீர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இரணியனிடம் கேட்டோம், “""ஏற்கனவே எண்ணெய்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நிலம் மலடாகி விட்டது. இந்நிலையில் தேர்தல் முடியும்வரை காத்திருந்து இப்போது மீண்டும் குழாய்களை பதித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கெயில் நிறுவனத்திற்கு காவல்துறையும், அரசு அதிகாரிகளும் ஆதரவாக இருப்பது வேதனை''’என்கிறார்.

இந்த திட்டத்துக்கு எதிராக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டம் அறிவித்து மக்களை திரட்டுகின்றன. அ.தி.மு.க.வைத் தவிர, தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டிய டெல்டா பகுதிகளை ஹைட்ரோகார்பன் மண்டலமாக அறிவித்து கார்ப்பரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன மத்திய-மாநில அரசுகள்.

-க.செல்வகுமார்