தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடக்கும் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நாற்பது தொகுதிகளிலும் ஜெயிப்பதற்காக முதல்வர் ஸ்டா லின், உதயநிதி, கனிமொழி, மூத்த அமைச்சர்கள் என பலரும் களமிறங்கியுள்ள நிலையில், தற்போதைய களநிலவரம் தி.மு.க.வுக்கு சாதகமா? என்கிற கேள்விகள் பல இடங்களில் எதிரொலிக்கிறது. தி.மு.க.விலும், தி.மு.க. கூட்டணியிலும் நடக்கும் உள்ளடிகள்தான் இதற்கு காரணமாக இருக்கின்றன.
கள நிலவரத்தையறிய உளவுத்துறையினரை முடுக்கிவிட்டுள்ளது தி.மு.க. அரசு. அந்த வகையில், தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் தனியாகவும், சபரீசன் தலைமையில் இயங்கும் பென் என்ற அமைப்பினர் தனியாகவும் கள நிலவரத்தை அறிந்து வருகின்றனர். இதில் உளவுத் துறைக்கு கிடைக்கும் தகவல்கள் 65 சதவீதம் தான் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்கிறார்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘’தி.மு.க.வில் நிலவும் அதிருப்திகள் ஒரு புறமும், மாற்றுக் கட்சியினரின் பர்ச்சேஸ் ஒருபுறமும் என இரண்டு உள்ளடிகள் இப்போதைக்கு தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறது. அதாவது, சீட் கேட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது. அதனால் அவர்கள் தேர்தல் பணிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பட்டும் படாமலே இருக்கிறார்கள்.
வாக்காளர்களைச் சந்தித்து களப்பணி செய்வதில் 50 சதவீதம்தான் தாண்டியிருக்கிறது தி.மு.க. அந்தளவுக்கு ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வினரின் தேர்தல் பணி எப்போதுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். இந்தமுறை சுவாரஸ்யமாகக் கூட இல்லை. அப்புறம் எங்கே பிரமிக்க வைப்பது? முன்பெல்லாம் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை எனில் அப்போதே அதை மறந்துவிட்டு, என் தலைவனும் (கலைஞர்) கழகமும் ஜெயிக்க வேண்டும் என உறுதியுடன் களத்தில் இறங்கிவிடுவர். அத்தகைய உணர்வும் இந்த தேர்தலில் குறைந்துவிட்டது.
உதாரணமாக… கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் முதல் 3 தொகுதியும் சேலத்தை ஒட்டி இருக்கிறது. மற்ற மூன்றும் கள்ளக்குறிச்சியை ஒட்டியிருக்கிறது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் மலையரசன் போட்டியிடுகிறார். சங்கரபுரம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனின் சிபாரிசில் இவருக்கு சீட் தரப்பட்டது.
ஆனால், மலையரசனை கள்ளக்குறிச்சிக்கு மேற்கே உள்ள ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளில் கட்சியினருக்கே தெரியவில்லை. மேற்கு பகுதியிலிருக்கும் தி.மு.க. நிர்வாகிகளிடம் எந்த தொடர்பும் மலையரசனுக்கு இல்லை. அதேசமயம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் இந்தமுறை சீட் கேட்டிருந்தார். அவருக்குத்தான் முடிவாகியிருந்தது.
கடைசி நேரத்தில் அவருக்கு சீட் மறுக்கப் பட்டதால், ஏகத்துக்கும் அதிருப்தியில் இருந்து வருகிறார் சிவலிங்கம். மா.செ.பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்கிற அளவுக்கு அவருக்கு அதிருப்தியிருக்கிறது. இந்த மனநிலையில் உள்ள மா.செ. பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் அவரது ஆதரவாளர்களான நிர்வாகிகளும் அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளில் தி.மு.க.வினரின் தேர்தல் பணி சுணக்கமாக இருக்கிறது.
அதேபோல, நெல்லை தொகுதியில் தனது மகனுக்கு சீட் கேட்டிருந்தார் சபாநாயகர் அப்பாவு. கிடைக்கவில்லை. தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டது தி.மு.க.. இதன் வேட்பாளராக கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட்புரூஸை நெல்லைக்கு இறக்குமதி செய்திருக்கிறது காங்கிரஸ். அவருக்கு தி.மு.க.வில் ஒத்துழைப்பு இல்லை. அப்பாவுவின் ஆதரவை கேட்பதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராபர்ட்புரூஸ். நேரமும் தரப்பட்டது. அப்பாவு கொடுத்திருந்த நேரத்திற்கு முன்பாகவே சென்றார் ராபர்ட். ஆனால், கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்தும் ராபர்ட்டை சந்திக்கவில்லை அப்பாவு. காத்திருந்து விட்டுக் கிளம்பிவிட்டார். இடையில் பலமுறை ராபர்ட் போன் செய்தும் அதனை அப்பாவு அட்டெண்ட் பண்ணவில்லை. அன்றைய தினம் இரவு அவரை அப்பாவு வரச் சொல்ல, தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் ராபர்ட் செல்லவில்லை.
அப்பாவு செய்கை, தி.மு.க.வின் ஒத்துழை யாமை ஆகியவற்றால் நொந்துபோன ராபர்ட், தான் சார்ந்திருந்த கிறிஸ்துவ மிஷனரியிடம் ஆதங்கப்பட, மிஷனரியில் இருந்த பாதிரியார்கள் இதனை ராகுல்காந்திக்கு தெரியப்படுத்தியிருக் கிறார்கள். உடனே சோனியாவின் கவனத்துக் கொண்டு போனார் ராகுல். இதனையடுத்து தி.மு.க. தலைமையிடம் காங்கிரஸ் பேச, மாவட்ட பொறுப்பு மந்திரியான தங்கம் தென்னரசுவிடம் விவாதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில் சிலபல விசயங்கள் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டது.
உடனே தூத்துக்குடி பொறுப்பு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசிய ஸ்டாலின், "நெல்லையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள்தான் காங்கிரசை ஜெயிக்க வைக்க வேண்டும்' என சொல்ல, பொறுப்பை ஏற்றிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.
நெல்லையில் 42 சதவீதம் இந்து நாடார் களும், 18 சதவீதம் கிறிஸ்துவ நாடார்களும் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார் அனிதா. இதற்கிடையே, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தொகுதியிலுள்ள தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களை பர்ச்சேஸ் செய்துகொண்டிருக் கிறார். இதனையறிந்து, அதற்கு செக் வைக்கும் வகை யில் சில அதிரடிகளை எடுத்துள்ளார் அனிதா.
அதேபோல, விழுப்புரம் தொகுதியை மீண்டும் சிறுத்தைகளுக்கே தி.மு.க. கொடுத்துள் ளது. சிறுத்தைகள் சார்பில் மீண்டும் ரவிக்குமாரே போட்டியிடுகிறார். கடந்த தேர்தலின்போதே, விழுப்புரத்தை சிறுத்தைக்கு கொடுக்கக்கூடாது என மன்றாடினார் அமைச்சர் பொன்முடி. மீறி கொடுக்கப்பட்டது. ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் அவரை தி.மு.க.வாக கருதி ஜெயிக்கவைத்தார் பொன்முடி. உதயசூரியன் சின்னம் என்பதால் உடன்பிறப்புகளும் சீரியசாக வேலை பார்த்தனர்.
இந்த முறையும் பொன்முடியின் எதிர்ப்பை மீறி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் ரவிக்குமார். தி.மு.க.வுக்கு தொகுதி கிடைக்காத அதிருப்தியும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாத சூழலும் உடன்பிறப்புகளை மாற்றி யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதனையறிந்து தி.மு.க.வினரை பர்ச்சேஸ் செய்ய அப்ரோச் செய்தபடி இருக்கிறது அ.தி.மு.க.
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணியில் ஏ.சி.சண்முகம் நிற்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் கதிர்ஆனந்த்தால் லோக்கல் தி.மு.க.வினர் பல விசயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து விலை பேசி முடித்திருக் கிறார் ஏ.சி.சண்முகம். இதனை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் துரைமுருகன் தரப்பு, பா.ஜ.க. கூட்டணியிலுள்ள பா.ம.க. வேலூர் தொகுதியில் கணிசமான நல்ல வாக்கு வங்கியை வைத்திருப்பதால் பா.ம.க.வினரை விலை பேசி வருகிறது.
காஞ்சிபுரத்தில் தி.மு.க. செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வில் களமிறக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் ராஜசேகர், கோடிகளில் புரள்பவர். தி.மு.க.விலுள்ள அதிருப்தியாளர்களை பர்ச்சேஸ் செய்திருக்கும் அவர், அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுகிறீர் களோ இல்லையோ தி.மு.க.வுக்கு போடக்கூடாது. உங்களால் பூத்துக்கு கொண்டுவரப்படும் ஓட்டுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்”என பேரம் பேசி மடக்கியிருக்கிறார். இதற்காக செலவிடப்பட்டிருக்கும் தொகை 3 கோடி ரூபாய்.
மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு வருவதால் ஒ.செ.க்கள் மீது தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அதிர்ப்தியடைந்திருக்கிறார்கள். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு பலமுறை தெரிவித்தும் ஒ.செ.க்களின் அராஜகம் கட்டுப்படுத்தப்படவில்லை.
இது தவிர ஊராட்சி சார்பிலான டெண்டர்கள் அனைத்தும் ஆன்-லைனில் வைக்கப்படுவதால் மேலதிகாரி களை மிரட்டி தங்களுக்கு சாதகமாக முடித்துக்கொள் கிறார்கள் தி.மு.க. ஒ.செ.க்கள். இதில் ஊராட்சி தலைவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இதெல்லாம் அறிவாலயத்துக்கு புகார்களாக சென்றும் நடவடிக்கை இல்லை. இதுபோன்ற பல காரணங்களால் அதிருப்தி யடைந்துள்ள தி.மு.க.வினரை அ.தி.மு.க.வின் ராஜசேகர் செமையாக வளைத்து வைத்திருக்கிறார்.
நிறைய தொகுதிகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தி.மு.க.வுக்கு எதிராக சீக்ரெட்டாக நடந்துகொண்டிருக் கின்றன. ஆக, தி.மு.க.வில் இது போன்ற அதிருப்திகளாலும் எதிர்க்கட்சிகளிடம் பணத்திற்காக மயங்கியிருப்பதாலும் வாக்குப்பதிவின்போது ஏகப்பட்ட உள்ளடிகள் தி.மு.க.வுக்கு எதிராக நடக்கப்போகிறது. இதை தி.மு.க. தலைமை சரிசெய்யாவிட்டால் முதல்வரின் 40 தொகுதிகள் கனவு கனவாகவே போய்விடும்”என்று எச்சரிக்கிறது உளவு வட்டாரங்கள்.
இப்படிப்பட்ட நிஜ கள நிலவரத்தை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும் உளவுத்துறையினர் யோசிக்கிறார்கள். முதல்வர் என்ன நினைப்பாரோ என்கிற யோசனை அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல, கள நிலவரத்தை துப்பறியும் மாவட்ட உளவுத்துறையினரும் கூட, தங்களின் மேலதிகாரிகள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ப ரிப்போர்ட்டை அனுப்பி வைக்கிற கூத்தும் நடக்கிறது.
தி.மு.க.வில் இப்படியென்றால் அதன் கூட்டணிக் கட்சிகளிலும் இதே நிலைதான். காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த முறை முன்னாள் காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொகுதியில் எதிர்ப்பு அதிகமுள்ளவர்களுக்கும் சீட் வழங்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவல்லபிரசாத், ராகுல் காந்தியிடம் கடுமையாக வலியுறுத்தினார்.
அதனடிப்படையில்தான் கட்சியின் சீனியர்களான கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசு, ஜெயக்குமார், செல்லக்குமார் போன்றவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் இவர்கள் அதிருப்தியடைந்திருப்பதுடன் இவர்களின் ஆதரவாளர்கள் களத்தில் இல்லை. அதேபோல மாஜி தலைவர்களின் சிபாரிசுகளும் ஏற்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமல்லாமல், தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளிலும் அதிருப்தியாளர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். அதேசமயம், இவர்களின் பார்வை அ.தி.மு.க. பக்கம் திரும்பியுள்ளது. பர்ச்சேஸை தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க.
இது ஒருபுறமிருக்க, பெரிய தலைகளையெல் லாம் ஓரங்கட்டியுள்ள காங்கிரஸ், புதியவர்களுக்கு வாய்ப்புத் தந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூரில் சசிகாந்த்செந்தில், மயிலாடுதுறையில் வழக்கறிஞர் சுதா, நெல்லையில் ராபர்ட்புரூஸ், கிருஷ்ணகிரியில் ஓசூர் கோபிநாத் (மாஜி எம்.எல்.ஏ.). இவர்கள் யாருக்குமே காங்கிரஸ் தொண்டர்களிடம் பிடிப்பு கிடையாது. தொகுதிகளுக்கு சம்பந்தமில்லாதவர் களை நிறுத்தியிருப்பதாலும், கோஷ்டி பிரச்சனைகள் தலைதூக்கியிருப்பதாலும் தொண்டர்களுக்கும் இவர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கிறது.
ஆந்திரா மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து காங்கிரஸுக்கு வந்த ஸ்ரீவல்ல பிரசாத்தான் ராகுலிடம் ஆதிக்கம் செலுத்தி புதியவர்களை டிக் அடிக்க வைத்துள்ளார். வேட்பாளர்கள் தேர்வின்போது 20 கோடி, 30 கோடி செலவு செய்ய முடியும் எனச்சொல்லி சீட் வாங்கியவர்கள், இப்போது பைசா இல்லை என பஞ்சப்பாட்டு பாடுவதுடன், கட்சித்தலைமை காசு தந்தால் தருகிறேன் என கதர்ச்சட்டை தொண்டர்களை கதறவிடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைமையோ, தங்களின் அக்கவுண்டுகளை மோடி அரசு ஃப்ரீஸ் செய்து வைத்திருப்பதால் பணத்தை எடுக்காமல் முடியாமல் திண்டாடுகிறது. இதில் தமிழகத்துக்கு எங்கே பணம் அனுப்புவது? என்கிறது சத்தியமூர்த்திபவன். அதனால், காங்கிரஸ் உட்பட அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 18 தொகுதிகளையும் குறிவைத்து வேகமாக இயங்குகிறது அ.தி.மு.க.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 17 நாட்கள்தான் இருக்கின்றன. இன்னும் ஒரு ரவுண்ட் பிரச்சாரத்தைக்கூட முழுமையாக முடிக்கவில்லை வேட்பாளர்கள். இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் நடக்கும் உள்ளடிகள், வெடிக்கும் அதிருப்திகள் ஸ்டாலினின் கனவிற்கு வேட்டு வைத்துக்கொண்டிருக்கிறது. சாதாரண எச்சரிக்கையை தவிர்த்துவிட்டு சாட்டையை வேகமாக ஸ்டாலின் சுழற்றினால் கள நிலவரம் மாற வாய்ப்பு உண்டு'' என்கிறார்கள் களத்திலுள்ள சர்வே டீம் மெம்பர்கள்.
_________
மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு அவமரியாதை!
அத்வானிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் வயது மூப்பு காரணமாக இருக்கையில் அமர்ந்திருந்த அத்வானிக்கு, ஜனாதிபதி முர்மு நின்றுகொண்டு விருதை வழங்கினார். அப்போது, அருகில் இருந்த பிரதமர் மோடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், தமது டுவிட்டர் பதிவில், "ஜனாதிபதி முர்மு நின்றுகொண்டே அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். ஆனால் மோடி இருக்கையில் அமர்ந்திருந்தார். இது ஜனாதிபதிக்கு மோடி செய்த மிகப்பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிய ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், "அரசியல் சட்டத்தின் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கையில்லை'' என குற்றம்சாட்டினார்.
-கீரன்