கொரோனா துயரக் காட்சிகளுக்கு மத்தியில் அங்கங்கே, இளைஞர் கள் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டி வருவது, ஆறுதலைத் தருவதாய் இருக்கிறது.

Advertisment

உதாரணத்துக்கு, மதுரை நெல்பேட்டை பகுதியில் இளைஞர்கள் ”லேப்-டாப்போடு” காட்சியளிக்க, அவர்களை மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். அதுகுறித்துக் கேட்டபோது, அங்கிருந்த இளைஞர்களான பிஸ்மியும் அஜாரும், "மக்களை அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் போயாவது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசின் காப்பீட்டுத் திட்டம் இல்லாமல் தவிப்போருக்கு உதவுகிற வகையில், இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.

j

இந்தப் பகுதியில் இருக்கும் அக்ரஹாரம், காயிதேமில்லத் நகர், பண்டாரத் தோப்பு, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய இடங்களில் வசிக்கும் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, இந்த அரசு மருத்துவக் காப்பீடு கிடைப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இதுதவிர, இளைஞர்களுக்கான வாட்ஸப் குழுவை அமைத்து, அதன்மூலம் எங்களால் முடிந்தவரை மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்''’என்றார்கள் உற்சாகமாக.

அடுத்து, மதுரை சக்கிமங்கலத்தில், பூம் பூம் மாட்டுக்கார குடும்பங்கள் மற்றும் தெருக்களில் வித்தை காட்டும் குடும்பங்கள் நிறைய வசித்து வருகின்றன. அவர்கள் வறுமையில் தவித்து வருவதை அறிந்த கல்லூரி மாணவிகள் குழு ஒன்று, நிதி திரட்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 1,500 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரான ரேவதி நம்மிடம், "நான் ஒரு காலத்தில் லாட்டரிக்குப் புகழ்பெற்ற கே.ஏ.எஸ் சேகர் குடும்பத்தில் இருந்து வந்திருக்கேன். நோயைவிட கொடுமையானது பசி. அதனால்தான் நம்மால் ஆனதைச் செய்யவேண்டும் என்று களமிறங்கினேன்''’என்றார் பரிவோடு.

அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குருராஜ், ஏற்கனவே, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து செயல்பட்டிருக்கிறார். அவர் நம்மிடம், "உடல்நலம் குன்றியவர்களையும், கொரோனா நோயாளிகளையும், மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், என் செல்போன் எண்ணுக்கு அழைத்தால் போதும். இலவசமாக அவர்களுக்கு உதவி செய்வேன். என்னைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின், கடிதம் எழுதியிருக்கிறார். அதில், நீங்களும், உங்களது நண்பர் அன்புநாதனும் தொற்றுக் காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்னு குறிப்பிட்டிருந்தார். இதை விட வேறென்ன சார் வேண்டும்?''’என்றார் நெகிழ்ச்சி யாய்.

எஸ்.டி.பி.ஐ.யைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மானோ “கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டாலோ, "வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்ட நோயாளிகளுக்கு உணவுகள், மருந்துகள் தேவைப்பட்டாலோ, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்வதற்கான உதவி தேவைப்பட்டாலோ, 9788867457 என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனுக்குடன் உதவிகள் செய்ய எங்கள் நண்பர்கள் குழு காத்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 90 பேரின் உடல்களை அவர்களின் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்துள்ளோம்''’என்றார் அழுத்தமாக.

இப்படி தன்னலம் பாராமல் களப்பணியாற்றுபவர்கள் இருப்பதால்தான், உலகம் இன்னும் தன் அச்சில் நொடிக்காமல் சுற்றிக்கொண்டிருக்கிறது.